For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் இந்திரஜாலங்கள்- ஒரு கிரைம் திரில்லர் கதை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: ஸ்டார் டிவி முன்னாள் தலைமை செயல் அலுவலர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி, தனது மகள் ஷீனாவை கொலை செய்து, அதை மறைக்க அவர் ஆடிய நாடகமும் ஒரு க்ரைம் திரைப்படத்தையே மிஞ்சிவிடும் போல இருக்கிறது.

ஊடகங்களில் சாதாரண பெட்டிச்செய்தியாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வெளியான இந்திராணி கைது இன்றைக்கு தலைப்புச் செய்தியில் இடம் பிடிக்கும் அளவிற்கு திடுக்கிடும் திருப்பங்களும் பரபரப்பும் நிறைந்த கதையாக இருக்கிறது.

இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள இந்த கொலையும் அதற்கான பின்னணியையும் பற்றி தெரிந்து கொள்ளும் முன் யார் இந்த இந்திராணி? மீடியா உலகில் ஜாம்பவனாக இருந்த பீட்டர் முகர்ஜியை அவர் திருமணம் செய்தது எப்படி என்று தெரிந்து கொள்வது அவசியம்.

அஸ்ஸாம் மாநிலத்தில் அரசுத்துறையில் பொறியாளராக பணியாற்றியவரின் மகளாக பிறந்தவர்தான் கிரைம் கதையின் நாயகி இந்திராணி. போரி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்திராணி படித்தது எல்லாம் கவுகாத்தியில்தான்.

முதல் திருமணம் குழந்தைகள்

முதல் திருமணம் குழந்தைகள்

கல்லூரி படிப்பை முடித்த உடன், சித்தார்த் தாஸ் என்பருடன் திருமணம் நடைபெறவே இந்த தம்பதிகளுக்கு ஷீனா போரா, மைக்கேல் போரா என்ற இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஷீனாவிற்கு மூன்று வயது நிறைவடைகிறது. மைக்கேல் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போதே இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளையும் கவுகாத்தியில் உள்ள தனது பெற்றோர்களின் வசம் விட்டு விட்டு மேற்படிப்பிற்காக கொல்கத்தா செல்கிறார் இந்திராணி.

திருமணத்தை மறைத்த இந்திராணி

திருமணத்தை மறைத்த இந்திராணி

கம்யூட்டர் படிக்கும் போது ஒயர்லெஸ் பிசினெஸ் செய்யும் சஞ்சீவ் கண்ணா என்பவருடன் காதல் வயப்படவே, தனக்கு திருமணம் ஆனதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் மறைத்து அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இந்திராணி.

தங்கை - தம்பி

தங்கை - தம்பி

குழந்தைகளின் போட்டோவை காட்டி தனது தம்பி, தங்கை என்று இரண்டாவது கணவர் சஞ்சீவ் கண்ணாவிடம் கூறுகிறார் இந்திராணி. இதனிடையே சஞ்சீவ் உடன் குடும்பம் நடத்தியதற்கு அடையாளமாக வைதி என்ற பெண் குழந்தை பிறக்கிறது.

ஸ்டார் டிவியில் வேலை

ஸ்டார் டிவியில் வேலை

2000ம் ஆண்டு ஸ்டார்டிவியில் வேலை கிடைக்கவே இரண்டாவது கணவரையும் விட்டுவிட்டு மகள் வைதி உடன் மும்பையில் குடியேறுகிறார் இந்திராணி. இதுநாள்வரை நடுத்தர வாழ்க்கை மட்டுமே வாழ்ந்து வந்த இந்திராணிக்கு சுகபோக வாழ்க்கை வாழ ஆசை ஏற்படுகிறது.

சிக்கிய பீட்டர் முகர்ஜி

சிக்கிய பீட்டர் முகர்ஜி

ஸ்டார் டிவியில் தலைமைச் செயலதிகாரியாக பணிபுரியும் பீட்டர் முகர்ஜி மீது பார்வை விழவே தன்னைவிட 15 வயது பெரியவரான பீட்டரை காதலித்தார் இந்திராணி. அப்போது பீட்டர் தனது மனைவியைப் விட்டு பிரிந்து மகன்கள் ராகுல், ராபின் ஆகியோருடன் வசித்து வந்தார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திராணி, தனது மகள் வைதியைப் பற்றி கூறி பீட்டரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் பீட்டரைப் பொருத்தவரை இந்திராணிக்கு இது இரண்டாவது திருமணம் என்றுதான் தெரியும். தனது முதல் திருமணம், குழந்தைகள் பற்றி சஞ்சீவ் கன்னாவிடம் சொன்ன பொய்யை பீட்டரிடமும் மெயின்டெய்ன் செய்தார் இந்திராணி.

ஸ்டார் டிவியில் இருந்து விலகல்

ஸ்டார் டிவியில் இருந்து விலகல்

இந்திராணி ஆசைப்பட்ட சுகபோக வாழ்க்கை கிடைக்கிறது. 2007ம் ஆண்டில் இந்திராணியும், பீட்டரும் ஸ்டார் டிவியை விட்டு விலகி ஐ.என்.எக்ஸ் நியூஸ் என்ற சேனலை ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது கவுகாத்திக்கு சென்று தனது முதல் கணவருக்குப் பிறந்த குழந்தைகளையும் பார்த்து வந்தார் இந்திராணி.

ஷீனா போரா வருகை

ஷீனா போரா வருகை

சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்படிப்பிற்காக மும்பை வந்த ஷீனா போராவை தனது தங்கை என்று பீட்டருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் இந்திராணி. இங்குதான் ட்விஸ்ட் ஏற்படுகிறது. மும்பையிலேயே படிப்பை முடித்துவிட்டு 2011ம் ஆண்டு அங்கேயே வேலைக்குச் சேருகிறாள் ஷீனா. இந்திராணியுடனேயே தங்கிக்கொள்கிறாள். வைதியோ மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிடுகிறாள்.

ராகுல் உடன் காதல்

ராகுல் உடன் காதல்

பீட்டரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகன் ராகுல், டேராடூனில் படிப்பை முடித்து விட்டு மும்பை வரவே, ஷீனா உடன் காதல் ஏற்படுகிறது. அதை இந்திராணி கண்டிக்க, அவளுடன் சண்டை போட்டுக்கொண்டு தனியாக அறை எடுத்து தங்குகிறாள் ஷீனா. ஆனாலும் ராகுல்- ஷீனா இடையேயான காதல் தொடர்ந்தது.

கொலை செய்த இந்திராணி

கொலை செய்த இந்திராணி

இதை சகிக்க முடியாத இந்திராணி, தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் உடன் இணைந்து ஷீனாவை கொலை செய்து டிரைவர் உதவியுடன் புதைத்து விடுகின்றனர். ஷீனாவைப் பற்றி எந்த தகவலும் தெரியாத ராகுல், இந்திராணியிடம் கேட்கவே, அவள் அமெரிக்கா சென்று விட்டதாக கூறி சமாளிக்கிறாள்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

அதை நம்பாத ராகுல் கடந்த 2012ம் ஆண்டு போலீசில் புகார் செய்யவே ஷீனாவை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது போலீஸ். சில ஆண்டுகளில் ஷீனாவைப் பற்றி மறந்தே விட்டனர். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிக்கிய டிரைவர்

சிக்கிய டிரைவர்

துப்பாக்கி வைத்திருந்ததாக வேறொரு வழக்கில் அந்த டிரைவர் போலீசில் சிக்கினார். ஷீனா காணாமல் போன விஷயம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம போன் மூலம் போலீசிற்கு தெரிய வந்துள்ளது.

வெளிவரும் உண்மைகள்

வெளிவரும் உண்மைகள்

மகளை கொன்றதை மறைத்து எதுவுமே தெரியாதது போல நடமாடி வந்துள்ளார் இந்திராணி. தனது கணவர் பீட்டருக்கு கூட எதுவும் தெரியாமலேயே மறைத்து விட்டார். போலீஸ் மூலம் இவையெல்லாவற்றையும் அறிந்த பீட்டர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. ஷினா கொலை வழக்கில் தோண்ட தோண்ட பல உண்மைகள் வெளியாகி வருகின்றன.

சினிமாவாகும் ஷீனா போரா கதை

சினிமாவாகும் ஷீனா போரா கதை

இந்த கொலை வழக்கில் இன்னும் என்னென்ன தகவல்கள் வெளியாக உள்ளதோ? பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் ஷீனா போராவின் கொலை வழக்கு கதையை சினிமாவாக எடுக்க இப்போதே தயாராகிவிட்டனர் பாலிவுட் தயாரிப்பாளர்கள்.

English summary
The arrest of media honcho Indrani Mukerjea. The plot of the murder of her daughter Sheena Bora has thickened considerably as the police questioned members of the Bora and Mukerjea families
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X