For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் மொழி இணையத்தில் வளர என்ன செய்ய வேண்டும்?

By BBC News தமிழ்
|
தமிழ் மொழி
BBC
தமிழ் மொழி

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் நான்காவது கட்டுரை இது.)

இன்றைக்குத் தமிழில் பயன்படுத்தக் கிடைக்கின்ற தொழில்நுட்பங்களை ஒரு பறவைப் பார்வையில் பார்க்கிறேன். விரியும் பெருவெளியில் சில புள்ளிகளை இங்கே முன்வைக்கிறேன்.

தொழில்நுட்பங்கள் நேரடியாக நம் நேரத்துடன், உழைப்புடன் தொடர்பு உடையவை. உரிய வகையில் இதைக் கையாண்டால், குறைந்த நேரத்தில் அதிக வீச்சுடைய, உடனடியான, நீடித்த, வலுவான, துல்லியமான பயன்களைப் பெறலாம். தவறாகக் கையாண்டால், இதற்கு நேர் எதிரான விளைவுகளும் ஏற்படும்.

வலிமை சேர்க்கும் நுட்பங்கள்

தொழில்நுட்பங்கள்
Getty Images
தொழில்நுட்பங்கள்

தொடரடைவுகளை உருவாக்க, முன்னர் மாதக் கணக்கில் உழைத்தனர், இன்று மென்பொருளின் துணைகொண்டு முனைவர் பாண்டியராஜா, சில நொடிகளில் நாம் பெறுவதற்கு வகை செய்துள்ளார் (http://tamilconcordance.in), நூலகத்தில் ஒரு புத்தகத்தைத் தேடி எடுக்க முன்னர், பெரும் முயற்சி தேவைப்பட்டது. இன்றோ, சில நொடிகளில் நாம் பெற முடிகிறது. ஒரு தகவலைத் தேடுவதற்கு முன்னர் பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. இன்றைய தேடுபொறிகள், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பல்லாயிரம் முடிவுகளை நம் முன் குவிக்கின்றன.

சுவடிகளிலும் காகிதங்களிலும் இருந்த ஆக்கங்கள் பலவும் அழிந்துள்ளன. இன்றோ அவற்றைக் கணினிகளில், இணையத்தில் பாதுகாப்பாகச் சேமிக்க முடிகிறது. அதுவும் குறைந்த இடத்தில் செறிவாகச் சேமிக்கிறோம்.

கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்த காலம் போய், மெய்நிகர் உலகில் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுகிறோம். நம் செய்தியை உரியவர் படித்துவிட்டாரா என்பதையும் தெரிந்துகொள்கிறோம். ஒரு @ குறியீட்டில் உலகில் எங்கிருப்பவரையும் தொடர்புகொள்கிறோம். இப்படியே மொழிபெயர்ப்பு, பணப் பரிமாற்றம், கல்வி, ஆராய்ச்சி என ஏராளமான துறைகளில் தொழில்நுட்பங்கள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன.

இப்படித் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், அதில் சிக்கல்களும் நிறைய உள்ளன. தவறான தகவல்கள், தேடுபொறியில் தவறான முடிவுகள், தரக் குறைபாடுகள், உண்மை போன்ற பொய்கள், உள்நோக்கம் கொண்ட பதிவுகள், நாம் சொல்வதைப் புரிந்துகொள்ளாத கருவிகள், தவறாகப் புரிந்துகொள்ளும் கருவிகள், தம் தரவுகளும் பணமும் தனிப்பட்ட விவரங்களும் களவாடப்படுதல் எனச் சிக்கல்களும் பெருகி வருகின்றன. தமிழ் மொழிக்குத் தொழில்நுட்பக் களத்தில் உள்ள தேவைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

எங்கே பிழைதிருத்தி?

பிழைதிருத்தி -மாதிரிப் படம்
Getty Images
பிழைதிருத்தி -மாதிரிப் படம்

பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி, தமிழில் நல்ல பிழைதிருத்தி இருக்கிறதா என்பது. வாணி, மென்தமிழ் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவோம். அவை எல்லாப் பிழைகளையும் சுட்டித் திருத்துவதில்லை என்பார்கள். கிராமர்லி போன்ற ஒன்று தமிழுக்கு இருந்தால், அதற்குக் கட்டணம் செலுத்திக் கூடப் பயன்படுத்துவேன் என்பார்கள்.

இணையப் பக்கங்களில், சமூக ஊடகங்களில், வேர்டு கோப்புகளில், செல்பேசிகளில்... இப்படி எந்த இடத்தில் எழுதினாலும் அது பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும் என்பார்கள். செம்மையான பிழைதிருத்திக்குப் பெரிய தேவை உள்ளது.

செல்பேசிகளில், மெசஞ்சர்களில் எழுதும்போது, தானே திருத்திக்கொள்ளும் வசதி (Auto correct), சிலவற்றில் உள்ளது. ஆனால், சில நேரங்களில் இது நாம் சரியாக எழுதுவதையும் தவறாகத் திருத்திவிடுகிறது என்பது பலரின் அனுபவம். எழுதுபவர் அடுத்து இதைத்தான் எழுதுவார் எனக் கணித்து, அடுத்த வார்த்தைக் கணிப்புகளும் சிலவற்றில் உண்டு. இதுவும் சில நேரங்களில் தவறான பரிந்துரைகளை அளித்து விடுகிறது. இவ்வகையில், சரியான சுயதிருத்திக்கும் அடுத்தசொல் கணிப்பிக்கும் தேவை உள்ளது.

எந்திர மொழிபெயர்ப்பு

கூகுளை விடச் சிறந்த எந்திர மொழிபெயர்ப்புக் கருவி இருக்கிறதா எனப் பலரும் கேட்கிறார்கள். நிறுவனங்கள் சிலவும் இவ்வாறு கேட்பதுண்டு. அவர்களின் தயாரிப்புகளை, உள்ளடக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்க விரும்புகிறார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழ் உள்பட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கும் ஒரு முயற்சியை 2019இல் தொடங்கினார்கள். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இதைச் செயல்படுத்துவதாக அறிவித்தார்கள். ஆனால், இதன் போதாமை காரணமாக, இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம், இந்திய மாநிலங்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் எனப் பல தேவைகளுக்கும் மொழிபெயர்ப்பின் உதவி அவசியமாக இருக்கிறது. ஆனால், தொனியை, சூழலை, உட்பொருளை உணர்ந்து மொழிபெயர்ப்பது ஒரு பெரும் சவால். இதற்கு ஏற்ற செம்மையான மொழிபெயர்ப்புக் கருவிக்காகப் பலரும் காத்திருக்கிறார்கள்.

தமிழில் விசைப் பலகை

விசைப்பலகை
Getty Images
விசைப்பலகை

தமிழில் விசைப் பலகை இருக்கிறதா? என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. மேசைக் கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய விசைப்பலகை, செல்பேசிகளில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தட்டுப் பலகை கிடைக்குமா என்றும் கேட்பார்கள். தமிழ்நாட்டில் விற்பனையாகும் அனைத்துக் கருவிகளிலும் தமிழ் உள்ளீட்டு வசதி இருக்க வேண்டும் எனத் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்பவர்கள் உண்டு.

இப்படி நீண்ட காலமாகக் கேட்டுச் சலித்து, பலரும் ஆங்கில விசைப்பலகையை, செல்பேசியை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். இதிலேயே பழகிவிட்டதால், இப்போது தமிழில் கொடுத்தால், அது அந்நியமாகத் தெரிகிற ஒரு வாய்ப்பும் இருக்கிறது. எனினும் தமிழில் வேண்டும் என்று கேட்பவர்களுக்காக, தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காகத் தமிழிலும் இவற்றை வழங்க நிறுவனங்கள் முன்வர வேண்டும். அரசும் இதற்கு அவர்களை வலியுறுத்த வேண்டும்.

ஒலிபெயர்ப்புச் சீர்மை

ஒலிபெயர்ப்பைச் சீர்மைப்படுத்த வேண்டும் என்று மறவன்புலவு க.சச்சிதானந்தன் பல முறைகள் வலியுறுத்தினார். தில்லி, டெல்லி, டில்லி எனப் பலவாறாக எழுதுகிறோம். இப்படியே பல்வேறு பெயர்களையும் ஒலிகளையும் அவரவர் விரும்பியபடி எல்லாம் எழுதி வருகின்றனர். இந்த ஒலியை, இந்தப் பெயரை இப்படித்தான் எழுத வேண்டும் என அரசு நெறிமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அது, உரியவர்களின் செவிகளில் இன்னும் விழவில்லை.

தாய்மொழியில் கருவிகள்

தமிழ் மொழி
Getty Images
தமிழ் மொழி

சீனர்கள், தங்களுக்கெனத் தங்கள் மொழியில் தனியே தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் தேடுபொறிக்கு மாற்றாக பைடூ (Baidu), யூடியூபுக்கு மாற்றாக யூகூ (Youku), டிவிட்டருக்கு மாற்றாக வெய்போ (Weibo) வாட்சாப்புக்கு மாற்றாக வீசாட் (WeChat), அமேசானுக்கு மாற்றாக அலிபாபா எனப் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள்.

இவற்றைப் பல கோடிப் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தக் கருவிகள் முழுக்க முழுக்கச் சீன மொழியில் இருக்கின்றன. அவற்றுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை அப்படியே தமிழ்நாட்டிற்குப் பொருத்திப் பார்த்தால், நாம் எவ்வளவு தூரம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

இங்கே பன்னாட்டு நிறுவனங்களின் விதிமுறைகளை, தனியுரிமைக் கொள்கையை, குக்கீ கொள்கையை, நிபந்தனைகளை ஏற்று நாம் செயல்படுகிறோம். நமது தரவுகள் அவர்களிடம் உள்ளன. நாம் ஒவ்வொன்றுக்கும் அவர்களின் தயவை நாடி இருக்கிறோம். நமக்கான நுட்பங்களை நாமே உருவாக்க முடியாதா? எது நம்மைத் தடுக்கிறது?

பயனர் உலகம்

ஆப்பிளில் தமிழ் வந்துவிட்டது, அடோபியில் தமிழ் வந்துவிட்டது என மகிழ்வோர் ஒரு புறம். இணையத்தை அதிகம் பயன்படுத்துவோர் தமிழர்களே என்ற செய்திக்காக மகிழ்வோர் மறு புறம். சமூக ஊடகங்களில் தமிழ்ச்சொல் பெரும்போக்கில் (Trending) இருக்கிறது என்பதற்காகக் கூத்தாடுவோர் பலர். இவை அனைத்திலும் நாம் பயனர் என்ற அளவிலேயே இருக்கிறோம். நாம் தொடர்ந்து பயனராகவே இருக்கப் போகிறோமா? புத்தாக்கம் நிகழ்த்துபவராக, தாக்கம் செலுத்துபவராகத் தமிழர்கள் வளர்வது எப்போது?

பூனைக்கு யார் மணி கட்டுவது?

தமிழில் கலைச்சொற்களை அன்றாடம் உருவாக்கி வருகிறார்கள். அதற்கென அரசாணையும் வெளியிடுகிறார்கள். ஆனால், அரசும் அரசுசார் கல்வி நிறுவனங்களும் இதர அமைப்புகளும் இவற்றை எல்லா இடங்களிலும் பயன்படுத்துவதில்லை. இந்தப் புதிய கலைச்சொற்களின் நேரடிப் பயன்பாட்டு அனுபவங்களை யாரும் பகிர்வதில்லை. புதிய கலைச்சொற்களை நாம் நியாயவிலைக் கடையிலோ, பேருந்து நடத்துநரிடமோ, அரசுப் பள்ளியிலோ பயன்படுத்தினால் யாருக்கும் புரியாது. சொல் உருவாக்கத்திற்கும் அதன் பயன்பாட்டிற்கும் இடையே மிக நீண்ட தொலைவு உள்ளது. எனவே இந்த வம்பே வேண்டாம் என்று நிறுவனங்கள் பலவும் ஆங்கிலத்தை அப்படியே ஒலிபெயர்த்து எழுதி விடுகின்றன.

தமிழில் எவ்வளவு சொற்கள் இருக்கின்றன? ஒவ்வொரு சொல்லும் எப்போது தோன்றியது? ஒரு சொல்லை முதலில் உருவாக்கியவர் யார்? அதன் வேர்ச்சொல் எது? அதன் வரலாறு எத்தகையது? போன்றவற்றைத் துல்லியமாக நம்மால் காட்ட இயலுவதில்லை. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துவிட்டது எனச் சொன்னாலும், இதை உருப்படியாகப் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே.

புதிய நுட்பங்கள்

கணினி தொழில்நுட்பம்
Getty Images
கணினி தொழில்நுட்பம்

பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு ஆகிய நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இவை தமிழில் நன்றாகவே செயல்படுகின்றன. இப்போது நாம் குரல் வழியே தட்டச்சு செய்ய முடியும். தேடுபொறிகளில் தேட முடியும். அதே போன்று பக்கங்களைப் படிக்காமல், கேட்க முடியும். செயற்கை நுண்ணறிவு (AI), பொருட்களின் இணையம் (IoT) ஆகியவையும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இருக்கின்ற நுட்பங்களைத் தேவையான எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும். பலருக்கும் இத்தகைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே தெரிவதில்லை. பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கைப்பட இவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும். தொழில்நுட்பங்களை அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர்கள் இருக்கக் கூடாது. இதைப் பயன்படுத்தி அனுபவம் பெற்ற பிறகு, இதன் பின்னுள்ள நுட்பங்களை விளக்க வேண்டும். இதன் பிறகு இதை விடச் சிறந்த ஒன்றை உருவாக்க அவர்களைத் தூண்ட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும். புதிய நுட்பங்கள் பிறக்க வேண்டும். தொழில்நுட்பத்தில், புத்தாக்கத்தில் நம் கை ஓங்க வேண்டும்.

தொழில்நுட்பம், எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்டது. எல்லோருக்கும் உரியது. அதன் நற்பயன்கள் எல்லோருக்கும் இணையாகக் கிடைக்கட்டும். அதுவே நம் இலக்காக இருக்கட்டும்.

(சென்னையைச் சேர்ந்த கட்டுரையாளர் அண்ணாகண்ணன், தொழில்நுட்பம் மற்றும் தமிழ்மொழி சார்ந்த தலைப்புகளில் பல்வேறு ஆய்வுகளை செய்து, அதில் முனைவர் பட்டமும் பெற்றவர். பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய இவர், இணையத் தமிழின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Tamil is one of the most used regional language in internet. Things to increase penetratil of tami in internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X