ஜூனில் பருவமழை பொய்த்தது... ஆனால் ஜூலை, ஆகஸ்ட்டில் எதிர்பார்க்கலாமாம்!
டெல்லி: ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையானது எதிர்பார்த்தபடி ஜூன் மாதத்தில் மழையைக் கொடுக்கவில்லை, ஆனபோதும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை பெய்யலாம் என இந்திய வானிலை மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இயல்பாக 32 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகும். கடந்த ஆண்டு இந்த மழைப்பொழிவு இயல்பான அளவுக்கு பெய்தது. இந்த ஆண்டும் அதே அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிகவும் காலதாமதமாக தொடங்கியது. இதுவரை பதிவான மழையளவும் குறைவாகவே உள்ளது. எனவே, வறட்சியைச் சந்திக்கும் அபாயமிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பொய்த்துப் போன மழை...
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. ஜூன் முடிந்து ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில் எதிர்பார்த்த மழையளவு பதிவாகவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
43% மழை...
பெரும்பாலும் ஜூன் மாதத்திலே நாடு முழுவதும் பருவமழை பரவலாக பெய்து விடும். ஆனால் இந்த ஆண்டு கேரளா, தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகள் மற்றும் தெற்கு கர்நாடகாவின் ஒரு சிலப் பகுதியில்தான் ஓரளவு மழை பெய்துள்ளது. இதனால், இந்தியாவில் ஜூன் மாதத்தில் 42 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது.
தொடரும் வறண்ட வானிலை...
அதேபோல், கோவா மற்றும் மராட்டிய மாநிலத்திலும் சிறிதளவு மழை பெய்தது. ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் கருமேகம் கூட காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
12 ஆண்டுகள்...
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் கூறுகையில், ‘இந்தியா கடந்த 113 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் இதுபோன்ற மழை பற்றாக்குறையை எதிர்க்கொண்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
இந்தியா கடந்த காலத்தில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை பற்றாக்குறையை கண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது.
முதல் வாரத்தில் மழை...
வானிலை ஆய்வுத்துறை வல்லுநர்கள் கருத்தின்படி, ஜூலை முதல் வாரத்தில் பருவமழை தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் நிலவும் அழுத்தம் காரணமாக இந்தியா முழுவதும் இந்த மாதம் நல்ல மழை பெய்யலாம் எனத் தெரிகிறது.
தெலுங்கானா...
ஜூலை 5ம் தேதி முதல் நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் பிற இடங்களில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலங்களில் தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான மழையளவு...
பொதுவாக, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஜூன் மாதத்தில் மட்டும் 20 சதவீத மழை பெய்யும். ஆனால் தற்போது அங்கு மோசமான நிலையே ஏற்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு மழை இல்லை என்றால் இரு மாநிலங்களிலும் சிறிய அளவு வறட்சியை எதிர்க்கொள்ள வேண்டியதிருக்கும்.
குறைவான மழை...
இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 18 வரையில் இந்தியாவின் மழையின் அளவு 45 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் 78.8 மில்லி மிட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வெறும் 43.3 மில்லிமிட்டர் மழையே பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு...
முன்னதாக எச்சரித்தபடி மழை பற்றாக்குறை காரணமாக சில மாநிலங்களில் வறட்சியும், அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
மாநிலங்களுக்கு நீர்நிலையில் இருந்து கிடைக்கப்பெறும் மின்சாரத்தின் அளவு 60 சதவீதம் வரையில் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். எனவே, ஏற்கனவே வறட்சியை எதிர்க்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
45 % குறைவு...
இதற்கிடையே, இமாச்சல பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும் இந்த முறை 45 சதவீதம் மழை குறைவாகவே இருக்கும் எனவும் சிம்லா, சோலன், சிர்மாரை, காங்ரா, உணா, குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம்...
வழக்கமாக இமாச்சல் பிரதேசத்தில் ஜூன் 27ம் தேதி துவங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை சற்று தாமதாமாக துவங்குவதாகவும் கடந்த ஆண்டு ஜுன் 15ம் தேதி துவங்கிய பருவமழை 7 சதவீதம் குறைவாக காணப்பட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.