உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 'அமித்ஷா' வழக்கறிஞர் யு.யு. லலித் பெயர் பரிந்துரை?

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் பெயரை நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் அவரது பெயரை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இதனால் கோபால் சுப்பிரமணியமும் தமது பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நரிமன் ஆகியோரது பெயர்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது.
இதையடுத்து கோபால்சுப்பிரமணியத்துக்குப் பதிலாக மூத்த வழக்கறிஞர் யு. யு.லலித் பெயரை பரிந்துரைக்க நீதிபதிகள் நியமனக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் யு. யு.லலித் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார் யு.யு. லலித். மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான், கொலை வழக்கில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா ஆகியோருக்காகவும் யு. யு.லலித் ஆஜராகி வாதாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.