வாஜ்பாய் என்று இறந்தார்? சிவ சேனா போடும் புது குண்டு!

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஆகஸ்ட் 16 ஆம் தேதி தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பு காலம் தாழ்த்தி அறிவிக்கப்பட்டதா என சிவ சேனா கட்சி சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16 ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். சுமார் 9 வார சிகிச்சைக்கு பிறகு சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தினார்.
அவரது மறைவுக்கு மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் 7 நாள் துக்கம் அனுசரித்தன. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

என்று இறந்தார் வாஜ்பாய்?
இந்நிலையில் வாஜ்பாயின் மறைவு குறித்து சிவசேனா கட்சி புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதாவது வாஜ்பாயி ஆகஸ்ட் 16 ஆம் தேதிதான் இறந்தாரா அல்லது அவரது இறப்பு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டதா என அக்கட்சியின் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர தினத்துக்காக?
அவர் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ம் தேதி இறந்துவிட்டாரா அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை பாதிப்பிற்கு உட்படுத்துவதை உறுதி செய்வதற்காக அவரது மரணத்தை அறிவித்தாரா என்று மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.

எந்த விளக்கமும் இல்லை
சஞ்சய் ராவத் சிவ சேனா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் மட்டுமின்றி அக்கட்சியின் சாமனா நாளிதழின் ஆசிரியருமாக உள்ளார். வாஜ்பாய் மரணத்தை அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சுயராஜ்யம் தான் முக்கியம்
நமது மக்களை காட்டிலும் சுயராஜ்யம் தான் முக்கியம் என ஆட்சியாளர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார். ஆனால் ஆகஸ்ட் 12 -13ஆம் தேதிகளில் அவரது நிலைமை மோசமடைந்தது.

16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதா?
சுதந்திர தினத்தின் போது நாடு துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதை தவிர்க்கவும், செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காகவும் வாஜ்பாய் ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த உலகத்தை விட்டுசென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ராவத் கூறியுள்ளார்.

ஸ்வராஜ்யா என்றால் என்ன?
இதனை ஸ்வராஜ்யா என்றால் என்ன? என்ற தலைப்பில் சாமனா நாளிதழில் கட்டுரையாகவும் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ளார். சிவ சேனா மத்திய மற்றும் மாநில ஆட்சியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. ஆனாலும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.