அது எப்படி இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் பாய்ந்தது? ஏவுவதற்கான நடைமுறைகள் என்ன?
உக்ரைன் - ரஷ்யா போரை உலகமே உற்று நோக்கிக் கொண்டு இருக்கும் நிலையில், எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாய்ந்துள்ளது. இந்தியாவில் சோதிக்கப்பட்ட ஏவுகணை தங்கள் நாட்டின் எல்லையை கடந்து 124 கி.மீ தொலைவில் விழுந்து இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

வருத்தம் தெரிவித்த இந்தியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே ஏவுகணை திசைமாறி பாகிஸ்தானுக்குள் விழுந்து விட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை வருத்தம் தெரிவித்து இருக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவம் பாதுகாப்புத் துறை வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய ஏவுகணை திசைமாறியது ஏன்?
இதுகுறித்து CAPS எனப்படும் டெல்லி ஏர் பவர் ஸ்டடீஸ் திங் டேன்ஸ் குழு தலைவரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான அனில் சோப்ரா இந்தியன் எக்ஸ்பிரஸிடம், கூறுகையில், "ஏவுகணைகள் திசைமாறிச் செல்ல சொற்ப காரணங்களே இருக்கின்றன. நமக்கு கிடைத்த செய்தியின்படி, ஏவுகணை பயணிக்கத் தொடங்கி 100 கி.மீ தொலைவுக்கு பிறகு திசையை மாற்றி இருக்கிறது.

எந்த தவறும் நடக்கவில்லை
க்ரூஸ் ஏவுகணையை பொறுத்தவரை ஏவப்படுவதற்கு முன்பாக இலக்கை குறிப்பிட வேண்டும். சில ஏவுகணைகளின் இலக்கை பயணத்தின் நடுவே மாற்றியமைக்க முடியும். இந்திய ஏவுகணை திட்டமிட்ட இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கி பின்னர் திசையை மாற்றியுள்ளது. இலக்கு குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலில் எந்த பிழையும் இல்லை.

ஏவுகணையை ஹேக் செய்திருக்க வாய்ப்பு
இதற்கு இன்னொரு வாய்ப்பும் உள்ளது. அதாவது, ஏவுகணையை நடுவழியில் சைபர் தொழில்நுட்பத்தை கொண்டு வழிமறித்து திசை மாற்றி இருக்கலாம். இதுபோன்ற ஏவுகணைகளின் பாதை மாறினால் சுயமாக அழித்துக்கொள்ளும் வசதி உள்ளது. ஆனால், இதில் அவ்வாறு நடக்கவில்லை." என்றார்.

என்ன சொல்கிறது பாகிஸ்தான்?
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் தெரிவிக்கையில், "ஏவுகணை திசை மாறியதற்கும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ இயக்குநரகங்களுக்கும் தொடர்பு இல்லை. இந்தியாவிடம் இருந்தும் முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லை. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தொடர்பாக தகவல்களை பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால், இதுபோன்ற ஏவுகணைகளுக்கு நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்வதில்லை." என்றார்.

இந்திய ஏவுகணையை தடுக்காத பாகிஸ்தான்
பஞ்சாப் - ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள சிர்சாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை தொடக்கத்தில் சரியான திசையில் பறந்தாலும் குறுக்கே வழிமாறியுள்ளது. இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானின் மியான் சன்னுவுக்கு அருகே விழுந்திருக்கிறது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தவுடன் கண்காணிப்பை தொடங்கியதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ராணுவம், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்ததால் தடுக்காமல் விட்டுவிட்டதாக கூறுகிறது.

திசைமாறிய ஏவுகணையின் ரகம் என்ன?
இந்தியாவிலிருந்து விழுந்த ஏவுகணையை பாகிஸ்தான் சூப்பர் சோனிக் என்று அழைக்கிறது. ரஷ்யா - இந்தியா கூட்டுத்தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் ஏவுகணையாகவும் இது இருக்கலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். ஒரு சிலர் இது பிருத்வியின் மற்றொரு ரகமாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

ஏவுகணை சோதனைக்கு முன் செய்ய வேண்டியது என்ன?
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை தொடர்பாக 2005 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, "ஏவுகணை சோதனை தொடர்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் நாட்டிற்கு 5 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவித்தாக வேண்டும். ஏவப்படும் இடம் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்க வேண்டும். இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள பகுதி 75 கி.மீக்குள் இல்லை என்பதையும் உறுதிபடுத்த வேண்டும்" என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications