எஜமானரைப் போலவே சிகரெட் பிடிக்கும் நாய்க்குட்டி.. இது சீனத்து சில்மிஷம்!
பெய்ஜிங்: சீனாவில் ஒருவர் செல்லமாக வளர்க்கும் நாய் அவரை போலவே சிகரெட் பிடிப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் ஹெய்லோஜியாங் மாகாணத்தில் வசித்து வருபவர் லியு. இவர் ஒரு நாய் வளர்க்கிறார்.
மியா என்ற பெயரிடப்பட்ட அந்த நாய்க்கு இரண்டு வயதாகின்றது.
சிகரெட் வாசனையில் ஈர்ப்பு:
வியாபாரியான லியு அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். லியு சிகரெட் பிடிக்கும் போதெல்லாம் அருகில் இருந்து பழகி விட்ட மியாவுக்கு சிகரெட் வாசனையில் ஒருவகையான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓடோடி வரும் மியா:
அதிலிருந்து லியு சிகரெட்டை பற்ற வைத்ததும் மியா எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். இதை கவனித்த லியு, ஒரு சிகரெட்டை மியா வாயில் வைத்து பற்ற வைத்தார்.
தூங்கப்போகும் முன் சிகரெட்:
நாளடைவில் மியாவும் தனது எஜமானரை போலவே சிகரெட் பிடிக்கப் பழகி விட்டது. இப்போது மியா தூங்க செல்வதற்கு முன் கண்டிப்பாக ஒரு சிகரெட் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தூக்கம் வராமல் சுற்றி, சுற்றி வரும் என்று லியு கூறுகிறார்.
நாய்க்காக தியாகம்:
மேலும் தனக்காக இல்லாவிட்டாலும் தனது செல்ல நாயின் உடல்நலத்தை காப்பதற்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடலாமா என்று லியு யோசித்து வருகின்றார் என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.