For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மியான்மரில் ராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது - பதற்றம்

மியான்மரின் ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று கட்சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

நைபிடா: மியான்மரின் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் பல்லாண்டு காலமாக நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி அதில் வெற்றி பெற்றவர் ஆங் சான் சூகி. இதற்காக அவர் பல ஆண்டுகள் வீட்டு சிறைவாசத்தை அனுபவித்தார். உலகம் முழுவதிலும் இருந்தும் ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.

Myanmar Leader Aung San Suu Kyi Detained, Ruling Party Spokesman Says

மியான்மரில் ராணுவப்புரட்சி ஏற்படுவது ஒன்றும் புதிய விசயமல்ல. அந்த நாட்டின் அரசியல் வரலாறு அதிகமாக ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது. 1948ஆம் ஆண்டில் நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆங் சான். இவர் தற்போதய தலைவர் சூகியின் தந்தை.

ஆங் சான், பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையும் முன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை ஏற்றனர்.

1958ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962 ஆண்டு தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011 ஆம் ஆண்டு வரை நீடித்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக 1988 ஆம் ஈண்டு மாணவர்கள் போராடினார்கள். அப்போது ஆங் சான் சூகி நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ரங்கூன் வந்திருந்தார்.

ஆக்ஸ்போர்டில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆங்கிலேயக் கணவரையும் இரண்டு மகன்களையும் லண்டனில் விட்டுவிட்டு வந்திருந்தார் சூகி. போராட்டம் அவரையும் ஈர்த்தது. தேசிய ஜனநாயக லீக்கைத் (என்.எல்.டி) தொடங்கினார். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989ஆம் ஆண்டில் சூகியையும் வீட்டுக் காவலில் வைத்தது. அடுத்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில்தான் இருந்தார்.

1990ஆல் ஆண்டில் ராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392 இடங்களை கைப்பற்றியது என்.எல்.டி. கட்சி ஆனால், ராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. 1991ஆம் ஆண்டு ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் நடந்த தேர்தலை என்.எல்.டி புறக்கணித்தது. ராணுவத்தின் ஆதரவுள்ள யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். தொடர்ந்து அவர் அமல்படுத்திய அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்கள் யாரும் எதிர்பார்க்காதவை. பதவியேற்ற சில மாதங்களிலேயே சூகியை விடுவித்தார். 2012ஆம் ஆண்டில் நடந்த இடைத் தேர்தலில் என்.எல்.டி. போட்டியிட்டது. 45 இடங்களில் 43-ல் வெற்றி பெற்றது. சூகி எதிர்க் கட்சித் தலைவரானார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தன் நாட்டிலுள்ள ரோஹிங்கியா இன மக்களை இனப்படுகொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உலக அரங்கில் அவரின் புகழ் சரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், தன் நாட்டில் வெகுவான ஆதரவு பெற்று, கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெற்றார் சூகி.

கடந்த நவம்பர் மாதம் மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 322க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் ஜனநாயக தேசிய லீக் ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இந்த வெற்றி மோசடியான வெற்றி என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. விரைவில் என்எல்டி கட்சி மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று மியான்மரின் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினரால் ஆங் சான் சூகி உள்ளிட்ட பலரும் கைது செய்து செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. தலைநகரான நய்பிடாவிற்கான தொலைபேசி இணைப்புகள் திங்கள்கிழமை அதிகாலையில் சென்றடையவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

English summary
Aung San Suu Kyi, leader of Myanmar's governing National League for Democracy (NLD) party, has been arrested, a party spokesman said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X