For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஒபாமாகேர்... வருகிறது ட்ரம்ப்கேர்!.

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): ஏழு ஆண்டுகளாக அமெரிக்காவில் அமலில் இருந்து வரும் ஒபாமாகேர் என்னும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தப் பட்டுள்ளது.

அதிபர் ஒபாமாவின் அதிமுக்கியமான சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் ஒபாமாகேர் திட்டத்திற்கு , தொடக்கத்திலிருந்தே குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Obamacare repealed with two votes

அதிபர் ட்ரம்பும் ஏழு ஆண்டுகளாக ஒபாமாகேர் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

தேர்தலில் வென்றவுடன் ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெறுவதே முதல் வேலை என்று சூளுரைத்து இருந்தார். முதல் முயற்சியில் தோல்வியுற்ற அவர், தற்போது வென்று விட்டார்.

அமெரிக்க உறுப்பினர்கள் சபையில் 217 வாக்குகள் பெற்று, அதிபர் ட்ரம்பின் புதிய மருத்துவக் காப்பீடு திட்ட மசோதா நிறைவேறியது.

பெரும்பான்மைக்கு 216 தேவை என்ற நிலையில் கூடுதலாக ஒரு வாக்கு மட்டுமே பெற்று, நூலிழையில் ஒபாமாகேர் திட்டத்தை வீழ்த்தியுள்ளார் ட்ரம்ப். புதிய திட்டத்தை ட்ரம்ப்கேர் என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

ஒபாமாகேரும் ட்ரம்ப்கேரும்..

ஒபாமாகேர் திட்டத்தில் வருமானம் மற்றும் காப்பீட்டிற்கான ப்ரிமியம் அடிப்படையில் வரிவிலக்கு வழங்கப்பட்டது. பதிவு செய்த பத்தில் எட்டு பேருக்கு இந்த சலுகை கிடைத்தது. 47500 டாலர்களுக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

ட்ரம்ப்கேர் திட்டத்தில் வரிச்சலுகை பணமாகத் தரப்படும். அதைக் கொண்டு வெளி மார்க்கெட்டில் காப்பீட்டு ப்ரிமியம் செலுத்த உபயோகித்துக் கொள்ளலாம். 20 வயதுகளில் இருப்பவர்களுக்கு 2000 டாலர்களும், 60 வயதுகளில் இருப்பவர்களுக்கு 4000 டாலர்கள் வரையிலும் கிடைக்கும்.

75ஆயிரத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த தொகை குறையத் தொடங்கும். 215 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சலுகை கிடையாது.

ஒபாமாகேர் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கு வருமான வரி அபராதம் உண்டு ட்ரம்ப்கேரில் அப்படி எந்த அபராதமும் இல்லை.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, ஒபாமாகேரில் காப்பீடுத் திட்டம் கட்டாயம் கிடைக்க வழி வகை இருந்தது. ட்ரம்ப்கேர் திட்டத்தில், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக ப்ரிமியம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

மெடிகேய்ட் என்ற குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான மாநில அரசுத் திட்டத்தில், மத்திய நிதி அதிகம் கிடைத்தது. அதனால் ஏராளமானோர் பலன் பெற்றனர்.

புதிய ட்ரம்ப் திட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து வழங்கப்படும். மாநிலங்கள் புதிய பயனாளர்களை பதிவு செய்ய தயக்கம் காட்டும். பயனாளிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

ஒபாமாகேர் திட்டத்தில் வயதானவர்களுக்கு, இளைஞர்களை விட மூன்று மடங்கு அதிகம் மட்டுமே ப்ரிமியம் வசூலிக்க கட்டுப்பாடு இருந்தது. ட்ரம்ப் திட்டத்தில் வயதானவர்களுக்கு ப்ரிமியம் நிச்சயம் அதிகரிக்கும்.

பணக்காரர்கள், நிறுவனங்கள் மீது ஒபாமாகேர் திட்டத்தின் மூலம் கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது. ட்ரம்பின் புதிய திட்டத்தில் அந்த வரி நீக்கப்படுகிறது.

குழந்தைகள் 26 வயது வரையிலும் பெற்றோர்களின் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கலாம் என்ற ஒபாமாகேர் திட்ட அம்சத்தில் மட்டும் ட்ரம்ப்கேரிலும் மாற்றம் இல்லை.

மெஜாரிட்டி பெறுவோம்.. ஜனநாயகக் கட்சி சூளுரை

Obamacare repealed with two votes

முன்னதாக இந்த திட்டத்தை அவையில் சமர்ப்பிப்பதற்கு முன்பு அவை பட்ஜெட் கமிட்டியின் அறிக்கை வெளியானது. அதன் மூலம் 24 மில்லியன் மக்கள் 2026 ஆண்டுக்குள், மருத்துவக் காப்பீட்டை இழக்கும் அபாயம் இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது சற்று மாற்றங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மசோதா குறித்து அவை பட்ஜெட் கமிட்டி அறிக்கை எதுவும் வெளியிடப் படவில்லை. ஆய்வுக்கே அனுப்பப் படவில்லை என தெரிகிறது.

இதைகுறிப்பிட்டு கூறிய ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசி, கொல்லைப்புறம் வழியாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா இது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் தாக்கம் அடுத்த ஆண்டு இடைத் தேர்தலில் ஒலிக்கும். மீண்டும் பெரும்பான்மையைப் பெற்று உறுப்பினர்கள் அவையை ஜனநாயகக் கட்சி பிடிக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்கள்.

அதிபர் கையெழுத்து எப்போது?

அடுத்ததாக இந்த மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு அதிபர் கையெழுத்துக்குப் பிறகு அமலுக்கு வரும்.

செனட் அவையில், 52 உறுப்பினர்களை கொண்ட குடியரசுக் கட்சியினருக்குள் எந்த மாற்றுக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை.

செனட் அவையிலும் பெரும்பான்மை பெற்று மசோதா நிறைவேறும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மசோதாவை நிறைவேற்றித் தந்த சபாநாயகர் பால் ரயனை வானளவாக புகழ்ந்துள்ளார்.

மகிழ்ச்சித் திளைப்பில் இருந்த ட்ரம்ப், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக உள்ள, முன்னாள் குடியரசுக் கட்சித் தலைவர் ரைன்ஸ் ப்ரிபஸ்-க்கு நன்றி தெரிவிக்க மறந்து விட்டார்.

அதைக் கவனித்து விட்ட பால் ரயன், ரைன்ஸ் ப்ரிபஸ்-க்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்தார்.இந்த திட்டம் முழுமையாக நிறைவேற இன்னும் ஒரு முக்கிய கட்டத்தை தாண்டவேண்டியுள்ளது.

ஜனநாயகக் கட்சியினரிடம் பெரும்பான்மை இல்லாததால், திட்டத்தை நிறைவேற்ற விட்டு, மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அதிபர் ட்ரம்ப்க்கு, பதவியேற்ற நாள் முதல் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ஏழு ஆண்டுகளாக போராடி வந்த குடியரசுக் கட்சியினருக்கு நம்பிக்கை நாயகனாக ட்ரம்ப் மாறிவிட்டார். கட்சியினர் மட்டத்தில் அவருடைய செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2017 மே 4ம் தேதி வியாழக்கிழமை அதிபர் ட்ரம்பின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாகவும் ஆகிவிட்டது.

அரசியல் விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்ற முடிவுடன் இருக்கும் முன்னாள் அதிபர் ஒபாமா, இந்த மசோதா குறித்து கருத்து சொல்ல மாட்டார் என நம்பப்படுகிறது.

-இர தினகர்

English summary
Seven year old Obamacare is repealed and replaced by President Trump's new health care plan. American Health Care Act bill has been passed with majority of 217 house representatives. It has to be further passed in Senate house followed by president's approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X