For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடல் குறைபாடு பிரச்சினையில்லை... நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் பிறந்ததினம் இன்று!

அமெரிக்க மாற்றுத்திறனாளி சாதனையாளரான ஹெலன் கெல்லர் பிறந்ததினம் இன்று.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெலன் கெல்லர் பிறந்ததினம் இன்று!-வீடியோ

    வாஷிங்டன்: உள்ளம் நன்றாக இருந்தால் போதும், உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு பிரச்சினையேயில்லை என நிரூபித்துக் காட்டியவர் அமெரிக்க மாற்றுத்திறனாளி சாதனையாளரான ஹெலன் கெல்லர். பார்வைத்திறன், பேசும் திறன், கேட்கும் திறனை இழந்தாலும், சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, அரசியல் ஆர்வலராக என பல்துறையில் சாதனை படைக்க முடியும் என்பதை தன் வாழ்க்கை மூலம் இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    கடந்த 1880ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கம்பியா நகரில் பிறந்தவர் ஹெலன். ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன்ம் மூன்றையும் இழந்தார் இவர்.

    இதனால், தான் மனதில் நினைப்பதை மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். குழந்தைப் பருவத்தில் எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.

    ஆனால், தங்கள் மகளின் இந்த முரட்டுக் குணத்தை மாற்றக் கல்வியால் மட்டுமே முடியும் என அவரது பெற்றோர் நம்பினர். அப்போது அவர்களுக்கு வரமாகக் கிடைத்தவர் தான் ஆசிரியை ஆனி சலிவன். 1887ல் ஹெலனை தனது மாணவியாக்கிக் கொண்டார் ஆனி. இவர்களது உறவு 49 ஆண்டுகாலம் நீடித்தது.


    பிரெய்லி முறைக் கல்வி:

    பிரெய்லி முறைக் கல்வி:

    பார்க்கும் திறனற்ற ஹெலனுக்கு மரம், செடி, கொடிகளைத் தொட வைத்து, அவற்றின் ஸ்பரிசத்தை அறிமுகப் படுத்தினார் ஆனி. அதன்பின்னர், அவற்றின் பெயர்களை ஹெலனின் கைகளில் எழுதிக் காட்டினார். எதையும் வேகமாக, சுலபமாகக் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றிருந்த ஹெலன், ஆனியின் பயிற்சிகளால் பிரெய்லி முறையில் கற்கத் தொடங்கினார். உதடுகளில் கை வைத்து அதன் அதிர்வுகள் மூலம் பேசும் கலையையும் அவர் கற்றுக் கொண்டார்.

    நூல்கள்:

    நூல்கள்:

    தீவிர முயற்சியின் பலனாக, தனது பத்து வயதிற்குள்ளாகவே பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் என பல மொழிகளைக் கற்றார். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதுவதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ஹெலன், பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்து, ஆசிரியர் வாயிலாகவும் பிரெய்லி முறையிலும் பல நூல்களைப் படித்தார்.

    தோழிகளின் கண்டுபிடிப்பு:

    தோழிகளின் கண்டுபிடிப்பு:

    சத்தம்போட்டு அழ, சிரிக்க முடிகிறதென்றால், நிச்சயம் ஹெலனால் பேசவும் முடியும் என்பதை அவரது 13-வது வயதில் தோழிகள் புரிய வைத்தனர். சாராஃபுல்லர் என்ற ஆசிரியரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன். பின்னர் நியூயார்க்கில் உள்ள காது கேளாதோர் ரைட் ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்த அவர், தெளிவாகப் பேச முடியா விட்டாலும், பிறர் புரிந்துகொள்ளும் அளவுக்கு பேசக் கற்றுக் கொண்டார். தன் வார்த்தைகள் மூலம் மற்றவர்களை வசப்படுத்திய ஹெலன், மிகச்சிறந்த பேச்சாளர் ஆனார்.

    50 மொழிகள்:

    50 மொழிகள்:

    தான் கற்ற அனுபவங்களின் அடிப்படையில், தனது 23வது வயதிலேயே, ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் ஹெலன். ஆரம்பத்தில் பெண்கள் இதழ் ஒன்றில் தன்னம்பிக்கை தொடராக வெளிவந்த இது, பின்னாளில் புத்தகம் ஆனது. ஹெலனின் வாழ்க்கை வரலாறு தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. சுயசரிதை மட்டுமின்றி, மற்ற 12 நூல்களையும் அவர் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவது ஹெலனுக்குப் பிடிக்கும்.

    அமைப்பு:

    அமைப்பு:

    தனது 24வது வயதில் ராட்கிளிஃப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஹெலன், பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து பார்வையற்றோர் நலனுக்கான அமைப்பு ஒன்றை அவர் உருவாக்கினார்.

    நிதி திரட்டினார்:

    நிதி திரட்டினார்:

    பெண்ணுரிமை, பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை உணர்வுபூர்வமான ஹெலன் எழுத்துகளாக வடித்தெடுத்தார். தன் ஆசிரியர் உதவியுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று ‘ஹெலன் கெல்லர் நிதி' எனும் பெயரின் நிதி திரட்டினார். அப்போது கிடைத்த தொகையினை பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்களின் மேம்பாட்டுக்காகச் செலவிட்டார்.

    சுற்றுப்பயணம்:

    சுற்றுப்பயணம்:

    தன் வாழ்நாள் முழுவதும் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே பாடுபட்டார் ஹெலன். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளைத் திறந்து வைப்பதற்காக, இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பார்வையற்றோருக்காக தேசிய நூலகம் உருவாக்கினார்.

     88வது வயதில்:

    88வது வயதில்:

    உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிடம் இருந்து பல விருதுகள், கவுரவங்களைப் பெற்ற ஹெலன், தனது 88வது வயதில் காலமானார். தனது இறுதி மூச்சுவரை அவர் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே உழைத்தார். அவரது அந்த தன்னலமற்ற உழைப்பு தான் இன்றளவும் நம்மிடையே அவரை நினைவில் வைத்திருக்கிறது.

    படமான வாழ்க்கை:

    படமான வாழ்க்கை:

    உடல் குறைபாட்டால் மூலையில் முடங்கி விடாமல், மற்றவர்கள் வாழ்வில் ஒளியேற்றப் பாடுபட்ட ஹெலனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தி மிராக்கிள் ஒர்க்கர்' என்ற படம் உருவாக்கப்பட்டது. இதில், ஹெலன் மற்றும் ஆனி சலிவனாக நடித்த 2 நடிகைகளும் தங்களது தத்ரூபமான நடிப்பால் ஆஸ்கர் விருதை வென்றனர். ஹெலனின் சுயசரிதை, நாடகமாகத் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Helen Keller was an American author, political activist, and lecturer. Today is her 138th birthday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X