20 வருடங்களுக்கு பிறகு.. ஆப்கன் மண்ணில் காலடி வைத்த தாலிபான் இணை நிறுவனர்.. அடுத்த அதிபர்?
காபூல்: ஆப்கனை இவ்வளவு ஈஸியாக கைப்பற்றிய தாலிபான்கள் யார்? ஆப்கன் அடுத்த அதிபர் யார் என்பதுதான் இப்போது உலகம் முழுக்க பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
Recommended Video
1996 முதல் 2001ல் அமெரிக்கப் படைகளால் வீழ்த்தப்படும் வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர் தாலிபான்கள். இஸ்லாம் மத அடிப்படைவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்.
செப்டம்பர் 11ம் தேதி, 2001ம் ஆண்டு, அமெரிக்க இரட்டை கோபுரம் அல் கொய்தா அமைப்பினரால் தாக்குதலுக்கு உள்ளாகி உலகையே உலுக்கியது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்க படைகள் நுழைந்து ஆப்கனை தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தன. இதோ இப்போது 20 வருடங்கள் கழித்து ஆப்கனில் அமைந்த ஜனநாயக அரசு பறிபோய் தாலிபான்கள் நாட்டை பிடித்துள்ளனர்.
அமெரிக்க படைகள் அங்கேயிருந்து விலகப்போவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவு. இதை சாதகமாக்கிதான் தாலிபான்கள் நாட்டை பிடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான் எப்படி விரைவாக கைப்பற்றினர்?
தலிபான் இயக்கம் தெற்கு ஆப்கானிஸ்தானில் முல்லா முஹம்மது உமர் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் முஜாஹதீன் தளபதியாக இருந்தவர். 1989ல் ஆப்கனை ஆக்கிரமித்திருந்த சோவியத் யூனியன் படைகளை நாட்டை விட்டு வெளியேற்ற உதவியது இவரது படைகள்தான். 1994ல், முல்லா உமர் சுமார் 50 ஃபாலோவர்களுடன் கந்தஹாரில் ஒரு குழுவை உருவாக்கினார்.

தாலிபான்கள் கட்டுப்பாடுகள்
தாலிபான் என்றால் அதன் அர்த்தம் "மாணவர்கள்" என்பதாகும். முல்லா உமரின் கீழ் படித்த மாணவர்கள் என்று தாலிபான்களை கருதலாம். கந்தஹாரை விரைவாகக் கைப்பற்றி, தலைநகர் காபூலையும் தாலிபான்கள் 1996ல் கைப்பற்றினர். இதன்பிறகு பெரும் கெடுபிடிகளை செய்தனர். தொலைக்காட்சி மற்றும் இசைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடைசெய்தது மற்றும் பெண்கள் பர்தா எனப்படும் தலை முதல் கால் விரல்களை மூடும் வரையிலான ஆடை அணியும்படி கட்டாயப்படுத்தினர். செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்ட போது தாலிபான்கள் பின்லேடனுக்கு ஆதரவாக இருந்தனர்.

அமெரிக்கா ஆதிக்கம்
பின்லேடனை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை தாலிபான் மறுத்தபோது, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து முல்லா உமரின் அரசாங்கத்தை விரைவாக வீழ்த்தின. முல்லா உமர் மற்றும் பிற தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை மீண்டும் பெற கிளர்ச்சி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அண்டை நாடான பாகிஸ்தானில் பதுங்கினர். இப்படியான நிலையில்தான், 2020 பிப்ரவரி மாதம், அமெரிக்காவும் தலிபான்களும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் 14 மாத காலத்தில் திரும்ப பெறும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இடைப்பட்ட காலத்தில், தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக இருந்தது.

தாலிபான்கள் எதற்காக போராடுகிறார்கள்?
தலிபான்கள் காபூலில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை வீழ்த்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இஸ்லாத்தின் அடிப்படைவாத கொள்கைகளை மீண்டும் கொண்டுவரவும் வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடினார்கள். தலிபான் தலைவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்க விரும்புவதாக கூறுகின்றனர். ஆப்கானியர்கள் தங்கள் ஆட்சியை பார்த்து பயப்பட தேவையில்லை என்றும், அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.

இப்போது யார் தலைவர்
முல்லா உமர் 2013 இல் இறந்தார், தலிபான்கள் அவரது மரணத்தை 2015 வரை அறிவிக்கவில்லை. 2016 ல், பாகிஸ்தானில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் முல்லா உமரின் வாரிசான முல்லா அக்தர் முகமது மன்சூர் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, அந்தக் குழுவை காந்தஹாரைச் சேர்ந்த பஷ்துன் மவ்லவி ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா தலைமையேற்றுள்ளார். தலிபான்கள் பாகிஸ்தானை சேர்ந்த தலைவர்கள் குழுவையும் வைத்துள்ளனர். இது குவெட்டா ஷுரா என்று அழைக்கப்படுகிறது. இது தாலிபான் குழுவின் முடிவுகளுக்கு வழிகாட்டி வருகிறது.

20 வருடங்களுக்கு பிறகு
அப்துல் கனி பரதார் என்பவர்தான், தாலிபானின் இணை நிறுவனர். இப்போது ஆப்கானிஸ்தான் போரில் மறுக்கமுடிய ஆளுமையாக செயல்பட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் தாயகம் திரும்பியுள்ளார். 2001ம் ஆண்டில், அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கத்தாரில் வசித்து வந்த அவர், செவ்வாய்க்கிழமை கந்தஹார் வந்துள்ளார். அப்துல் கனி பரதார், தாலிபான்களின் பொது முகமாக, புதிய அதிபராக வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா இந்த அமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக இருந்தாலும், அப்துல் கனி பரதார் தலிபான்களின் முகமாக இருந்தார். காபூல் வீழ்ந்ததும் அவர் நாடு திரும்பியிருப்பது புதிய அரசை உருவாக்குவதற்காக அவர் அணி திரட்ட ஆரம்பித்துள்ளார் என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள்?
தாலிபான்கள் நிதியுதவிக்கு ஆப்கானிஸ்தானின் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ளனர். இதுதவிர வணிகங்களுக்கு வரிகளை விதிக்கிறார்கள், தங்கள் செல்வாக்கின் கீழ் உள்ள எல்லைப் பகுதிகளில் எரிபொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத சுரங்கங்களை நடத்துகின்றனர். இந்தக் குழு பாகிஸ்தான் மற்றும் வளைகுடாவில் உள்ள ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி பெறுகிறது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆராய்ச்சியாளர்கள் தலிபான்கள் ஆண்டுக்கு 1.6 பில்லியன் டாலர் வரை வருமானமாக திரட்டுகிறார்கள் என்று மதிப்பிடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் ஆபத்தா?
ஆப்கானிஸ்தானை வலுப்படுத்தவும், அல்கொய்தா அல்லது இஸ்லாமிய அரசு போன்ற குழுக்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடக்கூடிய ஒரு புதிய சரணாலயமாக மாறுவதைத் தடுக்கவும் டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா செலவழித்தது. அமெரிக்க ஆதரவுடைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் விரைவான வீழ்ச்சி என்பது, மேற்கத்திய செல்வாக்கு அங்கே வீழ்ந்து விட்டது என்பதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இப்போது ஆப்கனில் தங்கள் வியூகங்களை முன்னெடுக்க கிடைக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. தீவிரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட முடியாது என தாலிபான்கள் உறுதியளித்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு அதன் பேச்சில் நம்பிக்கையில்லை. நூற்றுக்கணக்கான அல்கொய்தா உறுப்பினர்கள் ஏற்கனவே தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்வதாக கூறப்படுகிறது. இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications