பட்டென கழன்ற அரசு பஸ் சீட்.. எகிறி சாலையில் விழுந்த பயணி.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் இருக்கை திடீரென கழன்றதில் அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி எகிறி சாலையில் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கன்னியாகுமரியில் பெரும்பாலான அரசுப் பேருந்துகளின் நிலைமை இதை விட மிகவும் மோசமாக இருப்பவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதுபோன்ற தரமற்ற அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வழங்க வேண்டும் என கன்னியாகுமரிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சாலையில் தூக்கி வீசப்பட்டார்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து பளுகல் பகுதியை நோக்கி இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் இருந்தனர். இந்தப் பேருந்தில் உள்ள பல இருக்கைகள் முறையாக பொருத்தப்படாமல் ஆடிக்கொண்டே இருந்துள்ளன. இந்நிலையில், பேருந்து வேகமாக சென்ற போது திடீரென பேருந்தின் படிக்கட்டில் உள்ள இருக்கை ஒன்று பெயர்ந்தது. இதில் அந்த சீட்டில் இருந்த பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டதில் அவர் சாலையில் வந்து விழுந்தார்.

தீவிர சிகிச்சை
இதை பார்த்து பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் பேருந்தில் இருந்த சில பயணிகள் ஓடிச்சென்று அவரை மீட்டு அதே பேருந்தில் வைத்து அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தலை, கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'உயிருக்கே ஆபத்து..'
விசாரணையில், அவரது பெயர் செல்வராஜ் என்பதும், தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேல்புறம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் வேலை பார்த்து வந்த இவர், தனது நண்பரை பார்ப்பதற்காக பேருந்தில் சென்ற போது இந்த விபத்தில் அவர் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த செல்வராஜின் உறவினர்கள் அவரை பார்ப்பதற்காக கன்னியாகுமரி விரைந்துள்ளனர். இதனிடையே, அவர் சாலையில் விழுந்த போது அதிர்ஷ்டவசமாக அங்கு வேறு வாகனங்கள் ஏதும் வரவில்லை என்றும், அப்படி நடந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் சக பயணிகள் தெரிவித்தனர்.

மோசமான நிலையில் பேருந்துகள்..
இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்துமே மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இயக்கப்பட்டு காலவதியான பேருந்துகள், கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டு இங்குள்ள நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இதுகுறித்து போக்குவரத்துத் துறைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கன்னியாகுமரிவாசிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications