“டார்லிங் மம்மா..” - உருக்கமாக நாட்டு மக்களுக்கு முதல் உரை.. மன்னராகிறார் 73 வயது சார்லஸ்!
லண்டன் : இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள அவரது மகன் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசுமான 73 வயது சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகிறார்.
பிரிட்டன் அரசு மரபுப்படி, சார்லஸ் அடுத்த மன்னர் என லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அக்சஷென் கவுன்சில் செப்.10ஆம் தேதியான இன்று அதிகாரபூர்வ பிரகடனம் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில் தனது கன்னி உரையில், ராணி இரண்டாம் எலிசெபத் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார் மூன்றாம் சார்லஸ்.

ராணி இரண்டாம் எலிசபெத்
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வருகிறார் எலிசபெத். இந்த நிலையில் இவரது உடல்நிலை மோசமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்தது. கடந்த இரண்டு நாட்களாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நிலை மோசமான நிலையில் பல்மோரல் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ்
ராணி எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் மன்னராகிறார். பிரிட்டன் அரசு மரபுப்படி ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில் அடுத்த மன்னர் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுவார். அதன்படி, பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் முறைப்படி அதிகாரப்பூர்வமாக இன்று பிரகடனம் செய்யப்பட உள்ளார்.

லண்டன் திரும்பிய சார்லஸ்
முன்னதாக ராணியைப் பார்ப்பதற்காக ஸ்காட்லாந்து சென்ற சார்லஸ் இன்று லண்டன் திரும்பினார். மனைவி கமிலாவுடன் தனி விமானத்தில் அவர் லண்டன் வந்து சேர்ந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சார்லஸ் திரும்பினார். கைகளை பிடித்து பரிவுடன் மக்கள் காட்டிய அன்பை ஏற்றுக் கொண்டார்.

கன்னி உரை ஆற்றிய சார்லஸ்
நாட்டு மக்களிடம் புதிய மன்னர் சார்லஸ் முதன்முறையாக உரையாற்றுகையில், "ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். ஆழ்ந்த துக்கத்துடன் இன்று நான் உங்களிடம் பேசுகிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் , மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் நம் மீது செலுத்திய அன்பு, பாசம், வழிகாட்டுதலூக்காக அவருக்கு நிறைய கடன்பட்டுள்ளோம்.

உறுதியளித்த மூன்றாம் சார்லஸ்
ராணி எலிசபெத், தனது வாழ்நாள் முழுவதும் உத்வேகம் மிகுந்து இருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார். அதே வழியில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்வேன் என்ற வாக்குறுதியை இன்று உங்கள் அனைவருக்கும் அளிக்கிறேன். ராணி தனது சேவையை அர்ப்பணிப்புடன் செய்தது போல், நானும் அரசியலமைப்புக்கு எனது அர்ப்பணிப்பை வழங்குவேன் என்பதை உறுதியளிக்கிறேன். விசுவாசத்துடனும் அன்புடனும் மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பேன்.

அன்புக்குரிய அம்மா - சார்லஸ் உருக்கம்
என் அன்புக்குரிய அம்மா (மை டார்லிங் மம்மா), மறைந்த எனது தந்தையுடன் சேருவதற்காக செல்லும் உங்களின் இந்த கடைசிப் பயணத்தைத் தொடங்கும்போது, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நமது குடும்பம் மற்றும் நாட்டின் மக்களுக்காக நீங்கள் காட்டிய அன்பு அனைத்துக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் சேவை செய்தீர்கள். தேவதூதர்களின் விமானங்கள் உங்களின் ஓய்வுக்காகப் பாடட்டும்." என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இளவரசர் வில்லியம்ஸ்
நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. பிரிட்டன் இளவரசராக வில்லியம் செயல்படுவார்." என சார்லஸ் உரையாற்றினார். மூன்றாம் சார்லஸுக்கும் இளவரசி டயானாவுக்கும் பிறந்த மகன் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே அடுத்த இளவரசர் ஆகிறார்.












Click it and Unblock the Notifications