உ.பியில்.. போராட்டம் செய்த இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரால் இடிப்பு! நடந்தது என்ன?
லக்னோ: நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சால் உத்தர பிரதேச மாநிலம் சாரன்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாரன்பூர், கான்பூர் பகுதியில் 3 பேரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, கத்தார், சவுதி அரேபியா உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு கிளம்பின.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மக்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

உத்தர பிரதேசத்தில் வன்முறை
உத்தர பிரதேச மாநிலத்தில் சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத்தில் பகுதிகளில் பேராட்டம் நடந்தது. இதில் கல்வீசப்பட்டதால் வன்முறையானது. மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கைது நடவடிக்கை
வன்முறை தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி 227 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். குறிப்பாக சாரன்பூரில் 48 பேர், பிரக்யராஜில் 68 பேர், ஹத்ராஸில் 50 பேர், மொரடாபாத்தில் 25 பேர், பெரோடாபாத்தில் 8 பேர், அம்பேத்கர் நகரில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதா போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறையின் காரணம் பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு
இந்நிலையில் வன்முறை தொடர்பாக நேற்று போலீசார் புல்டோசர் மூலம் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சாரன்பூர் வன்முறை தொடர்பாக முசாமில் மற்றும் அப்துல் வாகிர் ஆகியோர் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. அதாவது வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் முன்பகுதி ஆகியவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி இடித்து அகற்றப்பட்டது. இதற்கிடையே முதல்வர் ஊடக பிரிவு ஆலோசகர் மிருத்தாஞ்சய குமார் டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டதற்கான படத்தை பதிவிட்டுள்ள அவர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புல்டோசர் நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

போலீஸ் கூறுவது என்ன?
இதுபற்றி சாரன்பூர் மூத்த எஸ்பி ஆகாஷ் தோமர் நேற்று மாலையில் கூறுகையில், ‛‛இந்த நடவடிக்கை சாரன்பூர் உள்ளாட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாரன்பூர் வன்முறை தொடர்பாக 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைதான 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டள்ளது. இந்த வீடு சட்டவிரோதமாகவும், உரிய அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ளது'' என்றார்.
Recommended Video

கான்பூரிலும் புல்டோசர் நடவடிக்கை
இதேபோல் ஜூன் 3ல் கான்பூரில் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் ஹயத்தின் நெருங்கிய உறவினராக கருதப்படும் முகமது இஷ்தியாக்கின் ஸ்வரூப் நகரில் உள்ள கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் ஹயத் இந்த கட்டடத்தில் முதலீடு செய்துள்ளார். மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுளள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என கூறினார். இதற்கிடையே ஜாபர் ஹயத்தை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் வன்முறை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications