பரபரப்பு.. கையில் மனுவுடன் அப்படியே மயங்கி விழுந்த சசிகலா.. ஓடிச்சென்று முதலுதவி செய்த திமுக எம்எல்ஏ
மதுரை: கையில் மனுவுடன் அப்படியே மயங்கி விழுந்து சரிந்தார் சசிகலா.. இதை பார்த்து பதறி போன திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் அந்த மாற்று திறனாளி பெண்ணுக்கு உரிய சிகிச்சை உட்பட பல உதவிகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், தன் தொகுதிக்காக செய்து வரும் பணிகள் அளப்பரியது.. குறிப்பாக, கொரோனாவுக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்.. புது புது முயற்சியையும் கையில் எடுத்து, அதில் வெற்றியும் பெற்றவர்.
எதைப்பத்தியும் கவலைப்படாமல், கொரோனா கால நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருபவர்.. தன் கை காசு செலவு செய்து தொகுதி மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். அதேபோல, ஏழை மாணவர்களின் கல்வி செலவை முழுசாக ஏற்று கொண்டு படிக்க வைத்தும் வருபவர்... தொகுதி மக்களில் யாருக்காவது ஏதாவது குறை என்றால், உடனடியாக கலெக்டருக்கு போனை போட்டு, அந்த பிரச்சனையை சரி செய்துவிடும் விடுகிறார்.

பரபரப்பு
இந்நிலையில், திடீரென மயங்கி விழுந்த ஒரு பெண்ணுக்கு முதலுதவி செய்து சிகிச்சை தந்துள்ளார்.. திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண் சசிகலா.. இவருக்கு வாய் பேச இயலாது.. கணவரால் கைவிடப்பட்டவர்.. இவருக்கு கைக்குழந்தையும் இருக்கிறது.. அந்த குழந்தைக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனை இருக்கிறதாம்.. அதனால் ஏதாவது டாக்டர் சரவணனிடம் உதவி கேட்கலாம் என்று எம்எல்ஏ ஆபீசுக்கு மனுவுடன் வந்திருந்தார்.

மயக்கம்
அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த சசிகலாவுக்கு திடீரென்று மயக்கம் வந்துவிட்டது.. பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பதறி போக, டாக்டர் சரவணன் ஓடிச்சென்று சசிகலாவுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தந்தார்... அவரை ஆசுவாசப்படுத்தினார்.. சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு, தன் நிலை குறித்து சசிகலா சரவணனிடம் கண்ணீர் மல்க விவரித்தார்.

முதலுதவி
தன் குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டும் என்றும், இது சம்பந்தமாக கலெக்டர் ஆபீசில் மனு தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அழுதுகொண்டே சொன்னார். இதை கேட்ட சரவணன், சசிகலாவுக்கு ஆறுதல் சொன்னதுடன், குழந்தைக்கு தன்னுடைய ஆஸ்பத்திரியிலேயே இலவசமாக சிகிச்சை தருவதாக சொன்னார்..

நிதியுதவி
மேலும் சசிகலாவுக்கு தற்சமயத்துக்கு, கை செலவுக்கு நிதியுதவியும் தந்ததுடன், மாசா மாசம் உதவி தொகை கிடைக்க கலெக்டர் அலுவலகத்தில் பரிந்துரை செய்வதாகவும் நம்பிக்கை தந்தார். ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உரிய நேரத்தில் அனைத்துவிதமான உதவிகளையும் தந்து உதவிய டாக்டர் சரவணனின் செயலை கண்டு அந்த தொகுதி மக்கள் மீண்டும் நெகிழ்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.