கலவர காடான கிடாய் விருந்து! டுமீல் சத்தம்.. தெறித்து ஓடிய புரோக்கர்கள்! துப்பாக்கியில் சுட்டவர் கைது
மதுரை : மதுரை அருகே கிடாய் விருந்தில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டியவர் தப்பி ஓடிய நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வேதகிரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் திருமங்கலம் அருகே டி.கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் நேர்த்திக் கடனுக்காக கிடாய் விருந்து வைத்துள்ளார்.
தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் ரியல் எஸ்டேட் மூலம் பழக்கமான நண்பர்கள், இடைத்தரகர்களை விருந்துக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த கிடாய் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆஹா.. எழுதி இருந்ததை நோட் பண்ணீங்களா? ஆளுநரின் தேநீர் விருந்தில் இருந்த

மதுரை கறி விருந்து
தொடர்ந்து பூஜை முடிந்தபின் கறிவிருந்து ஆரம்பித்துள்ளது. பின்னர் பந்தியும் ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து கிடாய் விருந்தில் பங்கேற்றவர்கள் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விருந்து நடந்த இடத்திற்கு அருகே சிலர் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அதில், சிலருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனையடுத்து விருந்திற்கு வந்தவர்கள் இரு அணிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு
இந்நிலையில் விருந்திற்கு வந்த மதுரையைச் சேர்ந்த வேதகிரி என்பவருக்கும் குருட்டு கணபதி என்பவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் வேதகிரி ஆத்திரத்தில் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும், விருந்து வைத்த தனசேகரனின் குடும்பத்தினரும் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.

திடீர் கலவரம்
துப்பாக்கியில் சூடுவதைக் கண்டு குருட்டு கணேசன் தரப்பும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் கிடாய் விருந்து நடந்த இடமே கலவரக் காடாக மாறியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் சக்திவேல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் கைது
மேலும் தப்பி ஓடிய வேதகிரி மற்றும் கணபதியை தேடி வந்தனர். வேதகிரியின் செல்போன் எண் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது அவர் மதுரையில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்று சுற்றி வளைத்த போலீசார் வேதகிரியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கணபதி என்பவரிடம் பிடிக்கும் முயற்சி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.