ஜாமீனில் வெளியே வந்துள்ள சவுக்கு சங்கருக்கு நிபந்தனை தளர்வு.. ஹைகோர்ட் கிளை வழங்கியது
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் உள்ள சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில தளர்வுகளை வழங்கியுள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் நீதிமன்றம் குறித்தும் நீதித்துறை குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்திருந்தார்.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் நீதிபதிகள் குறித்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

கைது
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணை முடிவில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதற்காக 6 மாதங்கள் சிறை தண்டனையை விதிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து செப்டம்பர் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இடைக்காலத்தடை
ஆனால் சில காரணங்களுக்காக அங்கிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் தன்னுடைய தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். அவருடைய மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில், நீதிமன்றம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்றும், ஆனால் முறையான ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். மேலும், ஆதாரமில்லாமல் எப்படி விமர்சனம் வைத்தார்? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

தளர்வு
அதேபோல விசாரணை முடியும் வரை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நவம்பர் 11ம் தேதி ஜாமீனில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு பதிவான 3 வழக்குகள் மற்றும் 2021ம் ஆண்டு பதிவான 1 வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் போலீஸார் சிறையில் வைத்தே அவரை மீண்டும் கைது செய்தனர். இதனால் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து வெளிவருவது கேள்விக்குறியானது. பின்னர் தன்மீது நிலுவையில் இருக்கும் 4 வழக்குகளிலிருந்தும் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதனையடுத்து நிலுவையிலிருந்த நான்கு வழக்குகளிலிருந்தும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் 19ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிரமம்
அதாவது இவர் ஏற்கெனவே மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். ஆனால் பின்னர் சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டின் முன் நாள் தோறும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்று தளர்வு வழங்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டின் முன் நாள் தோறும் ஆஜராகி கையெழுத்து இடுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், உடல்நலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணங்களால் தன்னால் இதனை சரிவர செய்ய முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதே நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என நீதிமன்றம் தளர்வு வழங்கியுள்ளது.

பணி நீக்கம்
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய சவுக்கு சங்கர் கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் முதன் முறையாக கைது செய்யப்பட்டார். இதனால் பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அரசியல் சார்ந்து பல்வேறு கருத்துக்களை பொதுவெளியில் கூறியும், இணையதள பங்கங்களில் எழுதியும் வந்திருந்தார். இவ்வாறு இருக்கையில், யூடியூப் சேனல்களில் பங்கேற்று அரசியல் சார்ந்த கருத்துக்களை கூறி வந்த காரணத்தால் அரசு பணியிலிருந்து தொடர்ந்து சஸ்பெண்டிலேயே இருந்து வந்தார். இதனை தொடர்ந்து அவரை சமீபத்தில் பணிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications