திடீரென்று எகிறிய கொரோனா... கேரளா, மகாராஷ்டிராவில் புதிய உச்சம்... ‛அப்போ’ அதுதானா?
மும்பை: கேரளாவில் 2 மாதங்களுக்கும் பிறகும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 3 மாதங்கள் கழித்தும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் கேரளா, மும்பையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக பரவி பொதுமக்களை தாக்கியது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கொரோனா பரவல் குறைந்தது. சமீபத்தில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

கேரளாவில் அதிகரிப்பு
இந்நிலையில் தான் கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று கேரளாவில் கொரோனா பாதிப்பு 1000யை கடந்தது. அதன்படி நேற்று ஒரேநாளில் கேரளாவில் 1,197 பேருக்கு கொரோனா உறுதியானது. இங்கு கொரோனா உறுதி செய்யும் தன்மை 7.07 சதவீதமாக உள்ளது.

இரட்டிப்பான பாதிப்பு
எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 2,029 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரத்தில் 973 பேரும், கோழிக்கோடுவில் 405 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென்று உயர்ந்த இந்த கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் மொத்தம் 5,728 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கடந்த ஒரே வாரத்தில், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகக்கவசம் அணிய உத்தரவு
இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்துள்ளதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவித்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும் மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மும்பையிலும் அதிகரிப்பு
இதேபோல் மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு திடீரென்று வேகமாக பரவ துவங்கி உள்ளது. நேற்று ஒரேநாளில் மும்பையில் 506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திடீரென்று பாதிப்பு 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 6 முதல் மும்பையில் பதிவான அதிகபட்ச பாதிப்பாக இது மாறியுள்ளது. இதனால் மும்பை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

போர்கால அடிப்படையில்...
கொரோனா தடுப்பு பணியை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்காலம் துவங்க உள்ளதால் கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம் கூடாது. இதனால் அறிகுறி இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா தடுப்பூசி பணியையும் விரைவாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் எச்சரிக்கை
இருப்பினும் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 94 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் 44 பேர் , செங்கல்பட்டில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் தமிழகத்திலும் பாதிப்பு மெல்ல அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலெ க்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த பாதிப்பு தற்போது 100யை நெருங்கி உள்ளத. இதனால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா 4ம் அலையா?
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது திடீரென்று அதிகரிக்க துவங்கியுள்ளது. கேரளா, மும்பையில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா 4ம் அலை உருவாகிறதா? என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications