தரமற்ற டாய்ஸ்களை விற்ற முன்னணி நிறுவனங்கள்? இறக்குமதியில் நடந்த மோசடிகள்.. சுங்க அதிகாரிகள் பகீர்!
மும்பை: முகேஷ் அம்பானியின் ஹம்லேய்ஸ் நிறுவனம் உள்பட டாய்ஸ்கள் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்ததது கண்டறியப்பட்டது. இந்த சோதனைகளுக்குப் பிறகு இ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிலிப்கார்ட், ஸ்னாப் டீல் ஆகிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான CCPA, தர விதிமுறை மீறல்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும்.. இந்தியாவின் பெரும் தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது ஹம்லேய்ஸ் நிறுவனம்.
குழந்தைகளுக்கான பொம்மை விற்பனைகள் செய்யும் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. உலகின் மிக பழமையான பொம்மை விற்பனை கடைகளில் ஒன்றாக இந்த நிறுவனம் விளங்கி வருகிறது.

அதிரடி சோதனை
இந்த ஹம்லேய்ஸ் நிறுவனத்தை கடந்த 2019- ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வாங்கியது. குழந்தைகளுக்கு பிடித்தமான பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவை ஹம்லேய்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில், அண்மையில் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஹம்லேய்ஸ் நிறுவனம் மட்டுமின்றி கிப்ட் பொருட்களை விற்பனை செய்யும் ஆர்கிஸ் மற்றும் கிட்ஸ் சோன் போன்ற சில்லறை விற்பனையில் ஈடுபடும் மிகப்பெரிய நிறுவனங்களில் சுமார் 44 இடங்களில் சோதனை நடைபெற்றது.

BIS சான்று இல்லாமல்
இந்த சோதனையில்18,600 க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொம்மைகள் அனைத்தும் இந்திய தர மதிப்பீடு (BIS) சான்று இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளுக்கான பொம்மைகள் உள்பட விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களும் தரம் குறைந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

மறைமுக யுக்திகள்
சில்லறை வணிகத்தில் ஈடுபடும் இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளை தவிர்க்க கையாளும் புதிய யுக்திகளை எதிர்கொள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) கூடுதல் விழிப்புடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைமுகங்கள் மூலமாக பொம்மைகள் தயாரிக்க பயன்படும் பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதும் பிறகு பொம்மைகள் மற்றும் அதன் பாகங்களை வேறு பொருட்கள் எனக் கூறி தர பரிசோதனையில் தப்பிக்க யுக்திகள் கையாளப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

போலி உரிமங்கள் வைத்திருப்பது
அதேபோல பெரும்பாலான சில்லறை விற்பனைக் கடைகள் முன்பு சோதனை நடத்தப்பட்டதில் பிஐஎஸ் தரக்குறியீடு அல்லது போலி உரிமங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க பிஐஎஸ் மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சோதனைகளுக்குப் பிறகு இ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிலிப்கார்ட், ஸ்னாப் டீல் ஆகிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான CCPA, தர விதிமுறை மீறல்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications