கோடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு.. சந்தேகத்தை கிளப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
சேலம்: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதோ என்று சந்தேகம் எழுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் புகழேந்தி பேசுகையில், சட்டப்பேரவையில் கோடநாடு வழக்கு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எதற்காக எடப்பாடி பழனிசாமி வெளியேறினார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியது. இதனால் நிச்சயம் தங்கம் பக்கமே தீர்ப்பு வரும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

புகழேந்தி பேட்டி
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், உச்சநீதிமன்ற வழக்கை பொறுத்தவரை ஒருவார காலமாக விசாரணையை கேட்டறிந்திருக்கிறேன். நீதிபதிகள் அனைத்து கேள்விகளையும் கேட்டு அறிந்து கொண்டார்கள். சட்டப்படி எதனை தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதனை நீதிபதிகள் கேள்வியாக கேட்டறிந்தார்கள். நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறாக பொதுக்குழு கூட்டி இருப்பதாக நீதிமன்றத்திலேயே கருத்து தெரிவித்துள்ளார்.

தீயசக்தி எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் ஏன் கொண்டு வரப்பட்டது, எதற்காக தீர்மானம் 43 மாற்றப்பட்டது, 5 ஆண்டுகள் பதவி காலத்தை எப்படி மாற்றுவது உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கேட்டுள்ளார்கள். ஒரேயொரு பிரச்சினைக்காக தான் அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது, பொதுச்செயலாளராக ஜெயலலிதா வகித்த பதவியை தானும் வகிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரத்தால் தான். பொதுச்செயலாளர் கனவோடு அலையும் கொடூரமான தீயசக்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தான் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஏன் இபிஎஸ் வெளியேறினார்?
தொடர்ந்து, சட்டசபையில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் மோதல் இருக்கிறது. ஆனால் கோடநாடு பிரச்சினையை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும் போது, எதற்காக எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்றார். எடப்பாடி பழனிசாமிக்கு தைரியமிருந்தால் சட்டப்பேரவையில் நின்று முதலமைச்சரை பார்த்து, நாட்டின் பிரச்சினைகளை விடுத்து ஏன் கோடநாடு பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்கலாம்.

புகழேந்தி சந்தேகம்
கோடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடநாடு பற்றி பேசும் போது எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருக்கிறார் என்ற சந்தேகம் அங்கே வருகிறது. திமுகவை பார்த்து எடப்பாடி பழனிசாமி பயத்தில் உள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications