வெட்டுக்கிளி வறுவல்.. கரப்பான் பூச்சி துவையல்.. இனி இதுதான் எதிர்கால சாப்பாடு.. இதை படிங்களேன்! :
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் சாப்பிடுவதற்கு அந்நாட்டு உணவுக் கழகம் அனுமதி வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் விரைவில் சிங்கப்பூர் ஹோட்டல்களில் கரப்பான் ஃப்ரை, வண்டு சூப் போன்றவை தாராளமாக கிடைக்கவுள்ளன.
சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபுறம் வரவேற்பு பெருகி வருகிறது என்பதுதான் சுவாரஸ்யமே.

பூச்சிகள் புதிதல்ல..
உலகில் பல நாடுகளில் பூச்சிகள் பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா, தாய்லாந்து, தென் கொரியா, மியான்மர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் விதவிதமான பூச்சிகளை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். இதில் எல்லா நாடுகளுக்கும் ஒருபடி மேலே சீனா இருக்கிறது. சீன மக்களை பொறுத்தவரை, தரையில் நடமாடுவது முதல் ஆகாயத்தில் பறப்பது வரை எல்லாமே அவர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். பூச்சிகள் மட்டுமல்ல நாய், பூனை, தேள், பூரான், புழு என அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டுகின்றனர் சீன மக்கள்.

கொரோனாவால் அதிகரித்த பயம்
மேற்கூறிய நாடுகளில் இதுபோன்ற உணவுகள் இருப்பது அனைத்து நாடுகளுக்குமே தெரிந்ததுதான். இதை பார்க்கும்போது, பெரும்பாலான நாட்டு மக்களுக்கு அருவருப்பு நிச்சயம் இருக்கும். ஆனால் இதுபோல பூச்சி, பூரான்களை எல்லாம் சாப்பிடாதீர்கள் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் கூறியது. அது அவர்களின் விருப்பம் என்றுதான் அனைவருமே நினைத்தார். ஆனால், கொரோனா தொற்று எப்போது சீனாவில் பரவியதோ, அதுவும் வவ்வாலை சாப்பிட்டதால்தான் இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதோ அன்றில் இருந்து இதுபோன்ற உணவுகளை சாப்பிடுபவர்கள் மீது பெரும்பாலான நாட்டு மக்களுக்கு ஒருவித வெறுப்பு மனநிலை உருவாகிவிட்டது. எதையாவது சாப்பிட்டு புது நோய்களை பரப்பிவிடாதீர்கள் என்ற சொல்லாடல் சீனா, தாய்லாந்து மக்களிடம் பல நாடுகள் முன்வைக்க தொடங்கிவிட்டன.

சிங்கப்பூர் அதிரடி முடிவு
இதுபோன்ற சூழ்நிலையில், சிங்கப்பூர் அராசங்கம் பூச்சிகளை மனிதர்கள் சாப்பிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. பூச்சிகள், வண்டுகள், ஈக்கள் ஆகியவற்றை இனி சிங்கப்பூரில் உண்ண முடியும். மேலும், அவற்றை அப்படியே பச்சையாகவோ. சமைத்தோ அல்லது சாக்லேட்டாகவா செய்து சாப்பிடலாம் என சிங்கப்பூர் உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.

மக்கள் ஆர்வம்
அதிகரித்து வரும் உணவுப் பற்றாக்குறை, பூச்சிகளில் இருக்கும் அதிகப்படியான புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துகளை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு பூச்சித் தீவனத்தை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததுமே நான் நீ என போட்டிப் போட்டுக்கொண்டு சிங்கப்பூர் பூச்சிகள் ஹோட்டலை தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும், சிங்கப்பூர் அரசின் இந்த முடிவால் பூச்சிப் பண்ணைகளை வளர்ப்பவர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications