45 நிமிட யுத்தத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது? மாஜி சிங்கள தளபதி கமால் குணரத்ன பரபரப்புத் தகவல்!
கொழும்பு: முல்லைத்தீவின் நந்திக் கடலில் 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதியன்று நிகழ்ந்த கடைசி 45 நிமிட யுத்தத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை ராணுவ முன்னாள் தளபதி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தின் 53ஆவது டிவிசனுக்கு கமால் குணரத்ன தலைமை வகித்தார். இவரது தலைமையிலான படைப் பிரிவிடம்தான் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்தார். பின்னர் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம்.
தற்போது இலங்கை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் கமால் குணரத்ன. அவர் இறுதி யுத்தம் குறித்த 'நந்தி கடலுக்கான பாதை' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

நாங்கள்தான் பிரபாகரனையும் சூசையையும்..
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கமால் குணரத்ன அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
எனது தலைமையிலான 53 ஆவது டிவிசன்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு ஆகியோரை கொன்றது. 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கி 10.15 மணிவரை இறுதி யுத்தம் நடைபெற்றது.

கடைசி 45 நிமிட யுத்தம்
நந்திக்கடலில் 45 நமிடங்கள் நீடித்த அந்த யுத்தத்தில்தான் பிரபாகரன் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவினால் கொல்லப்பட்டார். மே 18-ந் தேதியன்றே பொட்டம்மான் உயிரிழந்துவிட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

சார்லஸ் ஆண்டனி
அவர்போன்ற ஒருவர் உயிர் தப்பி வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தால் நிச்சயம் வெளியே வந்திருப்பார். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான யுத்தத்தில் மே 18-ந் தேதி உயிரிழந்தார்.

பாலச்சந்திரன்
அதே நேரத்தில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு கமால் குணரத்ன கூறியுள்ளார்.