For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக... வாகன சோதனையில் ரூ 8 லட்சம் திருடிய சிறப்பு போலீசார் கைது

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ.8.25 லட்சத்தை திருடிய குற்றத்திற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் தேதி நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களைக் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகனச் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இப்பணியில் சிறப்பு பறக்கும் படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். சோதனையின்போது கூடவே வீடியோவிலும் அதை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணமும் இன்றி பணம் எடுத்து செல்லலாம் என்றும், அதற்கு மேல் உள்ள தொகைக்கு உரிய ஆவணம் காண்பித்தால் சோதனை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை விட்டு விடுவதற்கும் தேர்தல் ஆணையத்தால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பல இடங்களில் போலீசார் தன்னிச்சையாக சோதனை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலில் ஈடுபடுவதாகவும் வியாபாரிகள் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு பல புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டம் வீராணம் அருகே குப்பனூர் சோதனைச்சாவடியில் வீராணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், சுப்பிரமணியன் மற்றும் இளைஞர் காவல்படையை சேர்ந்த பிரபு ஆகியோர் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்திய போலீசார் காரில் ரூ 35 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றிக் கொண்டு செல்லப் படுவதைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், ஏற்காட்டை சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கொடைக்கானல் அருகே திருமலை அடிவாரத்தில் மரவியாபாரி அஜி என்பவரிடம் வேலை செய்தனர் என்றும், அவர்களுக்கு 2 மாத சம்பளம் கொடுப்பதற்காக இரண்டு பேக்குகளில் பணத்தை கொண்டு செல்வதாகவும் காரில் இருந்த ஏற்காடு கூட்டுமுத்தல் கிராமத்தை சேர்ந்த மர மேஸ்திரி குப்புசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், குப்புசாமியின் விளக்கத்தை ஏற்க மறுத்தப் போலீசார் வாகன சோதனையில் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பறக்கும் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தேர்தல்பிரிவு பறக்கும்படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து புதிதாக வாகனசோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஆனால், அதற்கு முன்னதாக வாகன சோதனையை வீடியோ பதிவு செய்யாத போலீசார் அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்தியுள்ளனர். அதாவது கைப்பற்றப் பட்ட ரூ 35 லட்சத்தில் சுமார் ரூ 8.25 லட்சத்தை மறைத்து விட்டு மீதமுள்ள ரூ 26 லட்சத்து 75 ஆயிரத்தை மட்டும் கைப்பற்றப் பட்ட பணமாக கணக்கில் காட்டியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து அன்று இரவே சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் பறக்கும் படை அதிகாரிகள் குப்புசாமியிடம் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர். அப்போது பேக்கில் இருந்த பணத்தை எண்ணி பார்த்தபோது, ரூ.26 லட்சத்து 75 ஆயிரம் மட்டுமே இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குப்புசாமி தன்னிடம் இருந்து ரூ 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். குப்புசாமியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார், மழுப்பும் விதமாக காரில் குப்புசாமி பணம் கொண்டு வந்த 2 பேக்குகளில் ஒரு பேக்கை மட்டுமே இங்கு கொண்டு வந்திருப்பதாகவும், மற்றொரு பேக் பணத்துடன் வீராணம் போலீஸ் நிலையத்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும், ஏற்காடு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன்(வயது59), சுப்பிரமணியன்(48) ஆகியோர் ரூ.8.25 லட்சம் பணத்தை திருடியது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் கைது செய்யப் பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

English summary
Two special sub inspectors of police in salem have been arrested for stealing the raid money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X