• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஆடி வெள்ளி: திருவொற்றியூர் வடிவுடையம்மன் தரிசனம்

By Mayura Akilan
|

சென்னை: ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அம்பிகைக்கு திருவிழாதான். ஆடி முதல் வெள்ளியான இன்று சென்னையை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தை தரிசிக்கலாம்.

ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் படையை ஏவி கருகி கிடந்த அம்பாளின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் ஒன்றுதான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்கிறது புராண கதை.

தொண்டை நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற, 32 தலங்களில், 20வது திருத்தலமாக திருவொற்றியூர் விளங்குகிறது. மிகச் சிறப்பான தலம். நினைத்தாலே முக்தி அளிக்கும் சிறப்புடையது.

தேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44ல் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது இத்தலம். சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும் அம்பாளைப் போற்றி கீர்த்தனைகள் பாடியுள்ளனர்.

இத்தலத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் வள்ளலார். அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், இறைவன் மீது எழுத்தறியும் பெருமான் மாலை, தியாகராஜப்பெருமான் நடனக்காட்சி பற்றியும் பாடல்கள் இயற்றிய பெருமை உடையது இத்தலம்.

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது.

மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மாண்ட ராஜகோபுரம்

பிரம்மாண்ட ராஜகோபுரம்

இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

ஆதிபுரீஸ்வரர் சந்நிதி

ஆதிபுரீஸ்வரர் சந்நிதி

மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கவசத்தில் மூடப்பட்ட ஆதிபுரீஸ்வரர்

கவசத்தில் மூடப்பட்ட ஆதிபுரீஸ்வரர்

புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.

அபிஷேகம் இல்லை

அபிஷேகம் இல்லை

3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த 3 நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி

வட்டப்பாறை அம்மன் சந்நிதி

கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம்.

தீப்பந்தம் ஏந்திய அம்மன்

தீப்பந்தம் ஏந்திய அம்மன்

வடமொழியில் வால்மீகீ எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர். கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் தானாம். கம்பர் இராமாயணம் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.

காளத்திநாதர் சந்நிதி

காளத்திநாதர் சந்நிதி

மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது.

சொர்ண பைரவர்

சொர்ண பைரவர்

வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. சொர்ண பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

நவக்கிரகங்கள்

நவக்கிரகங்கள்

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

வடிவுடைய அம்மன்

வடிவுடைய அம்மன்

கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல அம்பிகை வடிவுடன் அழகாக காட்சி தருகிறாள். வடிவுடையம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ராமலிங்க வள்ளலாருக்கு பசி போக்கிய அம்மன்

ராமலிங்க வள்ளலாருக்கு பசி போக்கிய அம்மன்

சிறுவனின் பசியை போக்கி அந்த சிறுவனை உலக புகழ் பெற செய்தாள் வடிவுடையம்மன். இராமலிங்கம் என்ற சிறுவனின் பசியை போக்க

அன்னை தந்த உணவு சிறுவனுக்கு பெரும் ஞானத்தையும் தமிழ் புலமையை தந்தது. இராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடை அம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர். கல்வியில் புகழ் அடைவார்கள்.

காக்கும் தெய்வம்

காக்கும் தெய்வம்

சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு ம‌ற்று‌ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும்.

மூன்று சக்திகள்

மூன்று சக்திகள்

திருவொற்றியூர் அருகில் உள்ள மேலூர் திருவுடை அம்மன் இச்சா சக்தியாகவும், திருமுல்லைவாயிலில் அருள்புரியும் கொடியுடை அம்மன் கிரியா சக்தியாகவும் விளங்குகின்றனர். இம்மூவரையும் ஒரே நாளில் வழிபடுவது சிறப்பாக விளங்குகிறது.

27 நட்சத்திரங்கள் முக்தி பெற்ற தலம்

27 நட்சத்திரங்கள் முக்தி பெற்ற தலம்

27 நட்சத்திரங்கள் இங்கு வந்த நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.

மகிழமரம்

மகிழமரம்

தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் தான் உள்ளது. தல விருட்சம் அத்தி மரம். மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுந்தரர் திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

சுந்தரர் திருமணம்

சுந்தரர் திருமணம்

சுந்தரரின் கோரிக்கையை ஏற்று சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். மகிழமரத்தடியில்தான் சுந்தரர் - சங்கிலி நாச்சியார் திருமணம் நடைபெற்றது. இறைவனே தனது கருவறையை விட்டு மகிழமரத்தடியில் எழுந்தருளி சுந்தரர் - சங்கிலி நாச்சியார் திருமணத்திற்கு சாட்சியாக இருந்தார் என்பது வரலாறு. இந்த நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது மகிழடி சேவை விழாவாக நடைபெறுகிறது.

எல்லை தெய்வம்

எல்லை தெய்வம்

ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு ஊருக்கும் எல்லைத் தெய்வம் உண்டு. அதுபோல, சென்னை நகரத்தினுடைய ஈசானி எல்லை, அதாவது வடகிழக்குப் பகுதி எல்லைத் தெய்வமாக திருவொற்றியூர் வடிவுடை அம்மன் இருக்கிறார்.

கோவில் திறந்திருக்கும் நேரம்

கோவில் திறந்திருக்கும் நேரம்

சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. அரைமணி நேரத்தில் திருவொற்றியூர் ஆலயத்தை அடையலாம். வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Thyagarajar - Vadivudai Amman Temple is dedicated to Sri Shiva as Thyagaraja Swami and Adipurishwarar, and Divine Mother Shakti as Vadivudai Amman. Paadal Petra Shiva Sthalam Tiruvottiyur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more