ஜெயலலிதா சிலைன்னு சொல்லி காந்திமதி சிலையை வச்சிருக்காங்க.. கிண்டலடிக்கும் தங்கதமிழ்ச்செல்வன்!

தேனி: ஜெயலலிதா சிலை எனக்கூறி காந்திமதி சிலையை வைத்திருப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் கிண்டலடித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை கடந்த 24 ஆம் தேதி அவரது பிறந்தநாளில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது.
ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன. தலைவர்கள் பலரும் அதையே குறிப்பிட்டனர்.

ஓயாத சர்ச்சை
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால் சிலை குறித்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

கடமைக்கு சிலை
இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசரப்பட்டு கடமைக்கு ஜெயலலிதாவுக்கு சிலை வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

காந்திமதி சிலை
ஜெயலலிதா சிலை என்ற பெயரில் நடிகை காந்திமதி சிலையை திறந்து வைத்து உள்ளனர் என்றும் அவர் கிண்டலடித்தார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்தவுடன் உண்மையான ஜெயலலிதா சிலை வைக்கப்படும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கேள்விக்குறியாகிவிடும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையான 205 டி.எம்.சி. தண்ணீரை 5 வாரத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் தமிழகத்தின் விவசாயமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!