For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல் காமேஷ் கொலையில் தொழிலதிபருக்கு தொடர்பு: ரவுடி வாக்கு மூலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வக்கீல் காமேஷ் கொலை வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு தொடர்பு இருப்பதாக, கைதான ரவுடி ஈசா வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அடையாறு, வண்ணாந்துறை, எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமேஷ் 34. உயர்நீதிமன்ற வக்கீலான இவர் கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் துப்பாக்கியால் சுடப்பட்டார். மகாபலிபுரத்தில் குண்டு காயத்துடன் கிடந்த அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஈசா என்ற ஈஸ்வரனை பிடித்து மகாபலிபுரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொலை நடந்தபோது ரவுடி ஈஸ்வரன், வக்கீல் காமேசுடன் ஒன்றாக காரில் வந்துள்ளார்.

வக்கீல் காமேசை கொலை செய்த பின்னணியில் ரவுடி ஈஸ்வரன் மட்டும் அல்லாது, வேறு முக்கிய புள்ளிக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதனால் ரவுடி ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைக்காமல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வக்கீல் காமேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? என்று ரவுடி ஈஸ்வரன் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூல விவரத்தை போலீசார் வெளியிட்டனர். அதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

குண்டர் சட்டம்

நான் வடசென்னையில் பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் குழுவில் உள்ளேன். என்மீது 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எங்களுக்கு எதிரி காக்கா தோப்பு பாலாஜி ஆவார். அவரை போட்டுத்தள்ள திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தபோது, சென்னை ரவுடி ஒழிப்பு போலீசார் எங்களை பிடித்து விட்டனர். நான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டேன். சமீபத்தில் விடுதலை பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்தேன்.

கொலை முயற்சி

காக்கா தோப்பு பாலாஜியை போட்டுத்தள்ள மீண்டும் முயற்சியில் ஈடுபட்டேன். சம்போ என்ற தொழில் அதிபருக்கும் காக்கா தோப்பு பாலாஜி தொல்லை கொடுத்து வந்தார். சம்போ வக்கீலுக்கு படித்துள்ளார். ஆனால் வக்கீல் தொழிலை செய்யவில்லை. அவரது உண்மையான பெயர் வேறு உள்ளது. ஆனால் நாங்கள் அவரை சம்போ என்றுதான் அழைப்போம்.

வக்கீல் காமேஷ் ஆஜர்

வக்கீல் காமேஷ் எனது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். அவருக்கு நான் நிறைய பணம் கொடுக்க வேண்டி இருந்தது. புதுச்சேரியில் வசிக்கும் எனது நண்பர் நிலப்பிரச்சினையில் சிக்கி தவித்தார். அவரது நிலப்பிரச்சினையை தீர்த்து வைத்தால், ரூ.3 கோடி பணம் எனக்கு தருவதாக சொன்னார். எனவே அந்த பிரச்சினை தீர்ந்தால் ரூ.3 கோடி பணம் கிடைக்கும், உங்களுக்கு தரவேண்டிய பணத்தை தந்து விடுகிறேன் என்று வக்கீல் காமேசிடம் சொன்னேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ரூ.3 கோடி பணம்

தொழில் அதிபர் சம்போ, வக்கீல் காமேஷ் ஆகியோருடன் நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதுச்சேரி சென்றேன். வக்கீல் காமேசின் காரில் சென்றோம். காமேஷ் தான் காரை ஓட்டினார். புதுச்சேரியில் நண்பரின் நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்க முடியவில்லை. இதனால் எதிர்பார்த்தபடி ரூ.3 கோடி பணம் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். 3 பேரும் மது அருந்தி போதையில் இருந்தோம்.

திட்டிய காமேஷ்

பணம் கிடைக்காத ஏமாற்றத்தில் வக்கீல் காமேஷ் என்னை தகாத வார்த்தையால் திட்டியபடி இருந்தார். இதனால் எனக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. காருக்குள் வைத்தே அவருடன் சண்டை போட்டேன். இதனால் கார் தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விட்டது. பின்னர் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தோம்.

குண்டு காயம்

மரக்காணம் அருகே வெண்ணாம்பட்டு என்ற இடம் அருகே வந்தபோது, காரை ஓரமாக நிறுத்தி விட்டு, வக்கீல் காமேஷ் சிறுநீர் கழித்தார். ஏற்கனவே கோபத்தில் இருந்த நான், திடீரென்று சம்போ வைத்திருந்த துப்பாக்கியை வாங்கி, காமேஷ் இடுப்பில் சுட்டு விட்டேன். அவர் குண்டு காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து மயங்கி விட்டார்.

மகாபலிபுரம் பயணம்

சென்னை அடையாறில் வசிக்கும் வக்கீல் காமேசின் நண்பர் வக்கீல் செல்வத்துக்கு செல்போனில் பேசினேன். கார் விபத்தில் சிக்கியதில் காமேஷ் காயம் அடைந்து விட்டதாகவும், உடனே மகாபலிபுரம் வருமாறும் அழைத்தேன். அவர் தனது மோட்டார்சைக்கிளில் மகாபலிபுரம் வருவதாக சொன்னார். குண்டு காயத்துடன் மயங்கி கிடந்த காமேசை காரின் பின்சீட்டில் படுக்கவைத்தோம். பின்னர் காரை ஓட்டி, நானும், சம்போவும் மகாபலிபுரம் வந்தோம்.

நம்பிய செல்வம்

வக்கீல் செல்வமும் மகாபலிபுரம் வந்தார். காமேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட விஷயத்தை செல்வத்திடம் சொல்லவில்லை. காமேஷ் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார் என்று செல்வத்திடம் மீண்டும் சொன்னோம். ஏற்கனவே கார் சாலை தடுப்பில் மோதி சேதம் அடைந்து காணப்பட்டது. அதைப் பார்த்த செல்வம் காமேஷ் விபத்தில்தான் சிக்கி விட்டார் என்பதை நம்பி விட்டார். காரை செல்வம் ஓட்டிச் சென்றார்.

தப்பி ஓட்டம்

காரின் பின் சீட்டில் தொடர்ந்து மயக்கத்துடன் காமேஷ் படுத்திருந்தார். செல்வம் வந்த மோட்டார் சைக்கிளில் நானும், சம்போவும் பின்தொடர்ந்து சென்றோம். வழியில் நானும், அவரும் வேறு பாதையில் தப்பிச்சென்றோம். சம்போவை அவரது வீட்டில் விட்டு விட்டு நான் எனது வீட்டுக்கு வந்து விட்டேன்.

சம்போவிற்கு தொடர்பு

காமேசை சுட்ட துப்பாக்கி என்னிடம்தான் இருந்தது. அந்த துப்பாக்கி சம்போவுக்கு சொந்தமானது. இந்த பிரச்சினையில் என்னை மாட்டி விட்டு விடாதே என்று சம்போ என்னை கேட்டுக்கொண்டார். இதனால் துப்பாக்கி அவருடையது என்பதை போலீசாரிடம் முதலில் சொல்லவில்லை. சம்போ எங்களுடன் வந்ததையும் போலீசாரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டேன்.

எதிர்பாராத கொலை

வக்கீல் காமேசை கொலை செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டியதால், கோபத்தில் சுட்டு விட்டேன். அவர் பிழைத்துக்கொள்வார் என்று நினைத்தேன். அவர் இறந்து விட்டார் என்ற தகவல் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். போலீசார் செல்வம் கொடுத்த தகவல் அடிப்படையில் என்னை பிடித்து விட்டனர் என்று ஈசா வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

தேடுதல் வேட்டை

தொழில் அதிபர் சம்போவை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். துப்பாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றி சம்போ பிடிபட்டால்தான் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். கொலையை மறைத்து விட்டு தப்பி தலைமறைவான குற்றம், அவர் மீது விழுந்துள்ளது. சம்போ பிடிபட்டவுடன் வழக்கு விசாரணையும் முடிவுக்கு வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

புழல் சிறையில் அடைப்பு

ரவுடி ஈசா திங்கட்கிழமையன்று தான் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு 8 மணி அளவில் ஈசாவை முகத்தை துணியால் மூடி மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச்சென்று திருக்கழுக்குன்றம் நடுவர் நீதிமன்ற நீதிபதி பஷீர் வீட்டில் அவரது முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் ஈசா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காமேசின் ரத்தக்கறை படிந்த சட்டை, அவர் அணிந்திருந்த செருப்பு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

English summary
34-year-old advocate was allegedly shot dead by his client, Eesa alias Eswaran, a history-sheeter, in Mahabalipuram on Sunday night. The police claim they have nabbed Eswaran who has been previously involved in many other murder cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X