For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொதுக்குழுக் கூட்டம்... ரோடு முழுவதும் அதிமுகவினர் வைத்த பேனர்கள்... ஹைகோர்ட் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அதே சமயம், இந்த கூட்டங்களுக்காக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் குறித்து வரும் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில், சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.

AIADMK meet: HC dismisses appeals

இந்தக் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, இந்தக் கூட்டமானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, இந்தக் கூட்டம் சென்னையில் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுவதற்கு தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம், சமூக ஆர்வலர் ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த 2 மனுக்களையும் அவசர வழக்குகளாக கருதி நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் நேற்று மாலையில் விசாரித்தார்கள்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, "தனி நபர் மீது ‘ரிட்' வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது. இந்த கூட்டம் நடத்தப்படுவதால், பொதுமக்களின் உரிமைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

மேலும், ஸ்ரீராமச்சந்திர கல்வி நிறுவனத்துக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்த இந்த நிலம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு விற்பனை செய்தது செல்லும் என்று கூறி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தீர்ப்பளித்துள்ளது.

அடுத்தது அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். அவையெல்லாம், தேர்தல் நடத்தை விதியை மனதில் கொண்டு மனுதாரர்கள் கூறியுள்ளனர். தேர்தல் நடத்தை விதி என்பது, தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்னரே அமலுக்கு வரும். அதுவரை நடத்தை விதி அமலுக்கு வராது. ஆனால், இவற்றை மனுதாரர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்யமுடியாது. இந்த விவகாரம் தற்போது மத்திய சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும், நாளை (இன்று) கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் கட்டிடங்கள் எதுவும் கிடையாது. அது காலி மனையாக உள்ளது.

இந்த நிலத்தில் கூட்டம் நடத்துவதால் எந்த சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதை மனுதாரர்கள் கூறவில்லை. அவர்களின் மனுக்கள் தெளிவற்ற முறையில் உள்ளது. எனவே, மனுக்களை தள்ளுபடி செய்வதுடன், மனுதாரர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

மனுதாரர்கள் சார்பில், வக்கீல் சிவஞானசம்பந்தம், டிராபிக் ராமசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,சென்னையில் கல்வி நிறுவன வளாகத்தில் அதிமுக கூட்டம் நடத்த தடையில்லை என தீர்ப்பளித்து, தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவின் விபரமாவது:-

கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில், அரசியல் கட்சி கூட்டம் நடத்தக்கூடாது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால், பொதுக்கூட்டத்தை ஒருவர் நடத்தக்கூடாது என்று கடுமையான விதிகள் எதுவும் இல்லை. அதே நேரம் நாளை (இன்று) கூட்டம் நடைபெற உள்ள இடம், காலி மனைதான். அங்கு கட்டிடங்கள் எதுவுமில்லை என்று இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், நிலத்தை விற்பனை செய்யும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த நிபந்தனை இந்த வழக்குகளுக்கு சம்பந்தமில்லாத விஷயமாக உள்ளது.

மேலும், இந்த கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று மனுதாரர்கள் அரசுக்கு புகார் மனுவை இ-மெயில் மூலம் டிசம்பர் 29-ந் தேதி இரவு 9.36 மணிக்கு அனுப்பியுள்ளனர். அந்த புகார் மனுவை பரிசீலிக்க அரசு அதிகாரிகளுக்கு காலஅவகாசம் வழங்காமல் இந்த வழக்கை மனுதாரர்கள் தொடர்ந்துள்ளனர் என்று அட்வகேட் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒரு புகார் மனுவை கொடுத்தால், அதை பரிசீலிக்க அரசு அதிகாரிகளுக்கு தகுந்த கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்று இந்த ஹைகோர்ட் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம், அரசு அதிகாரிகளுக்கு தாங்கள் அனுப்பிய புகார் மனு சென்றடைந்ததா? என்பதற்கு மனுதாரர்களிடம் ஆதாரம் இல்லை. நில விற்பனை தொடர்பான விதிமீறல் குறித்து இந்திய அரசியல் சட்டம், பிரிவு 226-ன் கீழ் இந்த வழக்கை தொடர முடியாது. இந்த காரணங்களால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

அதே நேரம், அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்காக, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பேனர்கள் உள்ளிட்ட விளம்பர பலகைகள் வைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனரா? அவர்களது பெயர் விவரங்கள் என்ன? எந்த அதிகாரிகளுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்? அனுமதி பெறுவதற்குரிய கட்டணத்தை அவர்கள் செலுத்தியுள்ளனரா? அப்படிப்பட்ட நபர்களுக்கு விளம்பர பலகைகளை வைக்க எந்த அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்?

அந்த விளம்பர பலகைகளின் அளவு என்ன? அந்த விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ள சாலையின் அகலம் என்ன? அவ்வாறு வைக்கப்படும் விளம்பர பலகைகளில் யாருடைய பெயர் இடம் பெற்றுள்ளது?

ஒருவேளை தனியார் குடியிருப்பு வளாகத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டால், அந்த வீட்டின் சொந்தக்காரரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வருகிற ஜனவரி 5-ந் தேதி தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

அதே நேரம், விளம்பர பலகைகள் வைக்க பணம் செலுத்திவிட்டதால், விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைப்பதையும் ஏற்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறோம்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது..

English summary
At a special sitting of the judiciary here on Wednesday, the Madras High Court dismissed two separate public interest litigation petitions seeking a direction to the authorities to restrain the ruling AIADMK from conducting its general body meeting on the campus of the Sri Ramachandra Medical College and Research Institute in Thiruvanmiyur in south Chennai slated for Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X