For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னொரு ஜெயலலிதாவாக எடப்பாடி பழனிச்சாமி முயல்வதா? அன்புமணி கண்டனம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியு தம்மை இன்னொரு ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு மக்களுக்கு தொல்லை தருவதையும், காவல்துறையின் சக்தியை வீணடிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தம்மை இன்னொரு ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு தேவையின்றி அதிக எண்ணிக்கையில் காவலர்களை குவித்துக் கொள்வதை கைவிடவேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Anbumani Ramadoss Condemnes on Edappadi Palaniswami

அதிமுக சார்பில் முதலமைச்சராக இருந்தால் மக்களுக்கு எந்த சேவையும் செய்யக்கூடாது; மாறாக பந்தா என்ற பெயரில் மக்களுக்கு தொல்லைத் தர வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம் போலும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளை பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. தனது வசதிக்காக மக்களையும், காவலர்களையும் சிரமப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு நேற்றிரவு 11.30 மணிக்கு சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலையத்திலிருந்து வீடு செல்வதற்காக அண்ணா சாலையில் மட்டும் 10 அடிக்கு ஒருவர் வீதம் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அண்ணா சாலையில் பயணம் செய்த மக்கள் தேவையற்ற இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளானார்கள்.

அண்ணா சாலையில் நேற்றிரவு பயணம் செய்த அனைவருக்குமே, அந்த சாலை வழியாக ஜெயலலிதா தான் பயணம் செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அந்த அளவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை முன்னிட்டு, தேவையின்றி காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். நள்ளிரவில் எந்த வசதியுமின்றி நிறுத்தப்பட்டிருந்த காவலர்களை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது சென்னை மக்களுக்கு ஒருவிதமான வெறுப்பு ஏற்படுவதற்கான காரணங்களில், அவர் சென்னையில் பயணிக்கும் போது போக்குவரத்து முடக்கப்பட்டது முக்கியமானதாகும். ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பாதுகாப்பு கருதி அவ்வாறு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. ஆனாலும் கூட அது ஏற்கதக்கதல்ல. இப்போது ஜெயலலிதா அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்ட ஒரே காரணத்திற்காக எடப்பாடி பழனிச்சாமியும் தம்மை இன்னொரு ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு மக்களுக்கு தொல்லை தருவதையும், காவல்துறையின் சக்தியை வீணடிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னையில் மட்டுமின்றி, சேலம், கோவை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவரது பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை. எனினும், முதலமைச்சர் என்ற முறையில் மரபுசீர் (புரோட்டாக்கால்) முறைப்படி அவருக்கு குறிப்பிட்ட அளவில் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்துவதிலும், அவருக்கு தடையற்ற வழித்தடத்தை ஏற்படுத்தித் தருவதிலும் எந்த தவறும் இல்லை. மாறாக தமது இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக காவலர்களை பிற பணிகளுக்கு அனுப்பாமல் தமது பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்து காவல்துறையின் வலிமையை தவறாக பயன்படுத்துவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்; மன்னிக்க முடியாத குற்றம்.

தமிழகக் காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21,168 ஆகும். ஆனால், 01.01.2016 அன்று நிலவரப்படி 97,512 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 23,656 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இன்றைய நிலையில் தமிழகத்தில் 741 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளார். இது மிகவும் குறைவு என்பதால் இருக்கும் காவலர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், தனது காவலுக்காக குறைந்தது 500 பேரை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் 3.70 லட்சம் மக்களுக்கான பாதுகாப்பை முதலமைச்சர் பழனிச்சாமி பறிக்கிறார். இது தேவையற்றதாகும்.

முதலமைச்சர் என்பவர் வானத்திலிருந்து குதித்து வந்தவர் அல்ல. அவர் தமிழக மக்களின் முதன்மை பணியாளர் அவ்வளவு தான். அதனால் முதலமைச்சராக இருப்பவர் மிகவும் எளிமையாகவும், மக்கள் நலன் சார்ந்தும் செயல்பட வேண்டும். ஆனால், முதலமைச்சர் பழனிச்சாமியின் செயல்பாடுகள் இந்த இலக்கணத்திற்கு எதிராக உள்ளன.

தமிழகத்தில் கொள்ளைகளும், கொலைகளும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதற்கெல்லாம் காரணம் காவலர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதும், இருக்கும் காவலர்கள் முறையாக பயன்படுத்தப்படாததும் தான். இத்தகைய சூழலில் முதலமைச்சர் பழனிச்சாமி கடைபிடித்து வரும் அணுகுமுறை தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றச்சூழலை இன்னும் மோசமாக மாற்றிவிடும். எனவே, முதல்வர் பழனிச்சாமி தம்மை இன்னொரு ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு தேவையின்றி அதிக எண்ணிக்கையில் காவலர்களை குவித்துக் கொள்வதை கைவிடவேண்டும். பதவியில் இருக்கும் வரை எளிமையாகவும், மக்களுக்கு இடையூறின்றியும் நடந்து கொள்ள பழனிச்சாமி முன்வர வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMK MP Anbumani Ramadoss has Condemnes on Edappadi Palaniswami to Misuse of police powers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X