For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதா? அன்புமணி, வேல்முருகன எதிர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தர்மபுரி: ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஒரு அடியை கூட விட்டுத்தரமுடியாது என்று தர்மபுரி எம்.பியும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஒகேனக்கல் எந்த மாநில‌ எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 68 கிமீ தூரத்துக்கு எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. மத்திய சர்வே ஆணையம் உடனடியாக கர்நாடக-தமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் சர்வே மேற்கொள்ள‌ வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

Anbumani Ramadoss and others oppose Karnataka's claim on Hogenekkal

இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். இரு மாநில உறவுகளை சுமுகமாக நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர், தேவையற்ற சர்ச்சைகளை கொண்டுவரக்கூடாது.

ஒகேனக்கல் தமிழக பகுதி என்று முடிவாகி விட்டது. இதில் மறுஆய்வுக்கு வாய்ப்பு இல்லை. இதுபற்றி எந்த விதமான சர்ச்சையும் புதிதாக கொண்டுவர தேவையில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கர்நாடக முதல்வர் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பிற அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை எழுப்பக்கூடாது. ஒகேனக்கல் என்னுடைய எம்.பி. தொகுதிக்குள் வருகிறது. அங்கு, ஒரு அடியைக்கூட விட்டுத்தர முடியாது என்று கூறியுள்ளார்.

வேல்முருகன் கண்டனம்

இதேபோல் ஒகேனக்கல் மீது கர்நாடகா உரிமை கோரினால் பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்!

என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது.

1952 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த நிலப்பரப்புகள்தான் மிக அதிகம். ஒருகாலத்தில் சென்னை மாகாணம் என்பது திராவிடர் இனப் பழங்குடிகள் அதிகம் வாழும் ஒடிஷாவின் கோராபுட் மாநிலம் வரை இருந்தது என்பது வரலாறு.

ஆனால் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் தாரைவார்க்கப்பட்ட பெருங்கொடுமை "இந்திய தேசியத்தின் பெயரால்" அரங்கேறியது.

எங்களது ஒகேனக்கல் மீது உரிமை கோருகிற கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரும் கூட தமிழ்நாட்டின் ஒரு அங்கம் என்ற கோரிக்கை இன்னமும் காலாவதியாகவில்லை என்பதை சித்தராமையாக்கள் மறந்துவிட்டு பேசக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

காவிரியில் தமிழகத்துக்கான நியாயமான சட்டப்பூர்வமான உரிமையை மதிக்க மறுத்து மேகேதாட்டுவில் பல்வேறு தடுப்பு அணைகளைக் கட்டுவோம் என்று எதேச்சதிகரமாக பேசி வருகிறது கர்நாடகா. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு அரசும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மேகேதாட்டு விவகாரத்தை திசைதிருப்பும் உள்நோக்கத்துடன் தமிழகத்தை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கர்நாடகா முதல்வர் பேசியிருப்பதை ஏற்க முடியாது. அது கடும் கண்டனத்துக்குரியது.

இந்திய மத்திய அரசால் தமிழகம் காலங்காலமாக வஞ்சித்து வரும் சூழலில் அண்டை மாநிலமான தமிழகத்துக்கான சட்டப்பூர்வமான நியாயமான ஆற்று நீர் உரிமைகளை கர்நாடகா மதித்து நடக்க வேண்டுமே தவிர, இத்தகைய திசை திருப்பும் மிரட்டுகிற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்களும் எதிர்வினையாற்றுவார்கள்.

கர்நாடகாவின் கோலாரும் பெங்களூரும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற முழக்கமும் பெரும் போராட்டமாக வெடிக்கும். அதை எதிர்கொள்ள கர்நாடகாவும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு அங்கம்.. இது யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையே கிடையாது. இதனால் கர்நாடகாவின் "ஒகேனக்கல் மறுவரையறை" கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவே கூடாது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு தக்க பதிலடியைத் தர வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஒகேனக்கல் பாதுகாப்பு குழு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பேச்சுக்கு ஒகேனக்கல் உரிமை பாதுகாப்புக்குழு தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான நஞ்சப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒகேனக்கல் எல்லை தொடர்பாக ஏற்கனவே பலமுறை பிரச்சினைகள் எழுந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் சர்வே துறை, தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களின் சர்வே துறை ஆகியவை ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றை மையப்படுத்தி தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளை அளவீடு செய்து எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் எந்த காலத்திலும் கர்நாடக ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது இல்லை. மொழிவாரி மாநிலம் அமைப்பதற்கு முன்பும் ஒகேனக்கல் தமிழகத்திலேயே இருந்தது.

ஒகேனக்கல்லில் இருந்து மேற்கு திசையில் 70 கிலோமீட்டர் தூரத்தில் அஜ்ஜிப்பாறைக்கு அப்பால் வரை தமிழக எல்லைப்பகுதி உள்ளது. ஒகேனக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது பாரம்பரிய வகையிலும், சட்டரீதியிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த அரசியல் கட்சியினர் குறுகிய நோக்கத்துடன் ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்ற கருத்தை பரப்புவது கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.

சொந்தம் கொண்டாட எதிர்ப்பு

சுற்றுலாதலமான ஒகேனக்கல்லை கர்நாடகா சொந்தம் கொண்டாடுவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஒகேனக்கல் தொடர்பாக கர்நாடக முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராட முடிவு செய்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்தபோது அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒகேனக்கல் கர்நாடகா மாநிலத்திற்கு சொந்தம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வர் மீண்டும் ஒகேனக்கல்லுக்கு சொந்தம் கொண்டாடும் வகையில் பேசியுள்ளதால் தமிழக எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

English summary
Dharmapuri M.P. Dr. Anbumani Ramadoss ,TVK party chief Velmurugan and other leaders have opposed the Karnataka's claim on Hogenekkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X