அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான்! செங்கோட்டையன் ஓபன் டாக்!
கோபிசெட்டிபாளையம்: அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமா உள்பட 12 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால் கட்சி தேய்ந்து அமாவாசையாகிவிடும்.
அரவணைத்து செல்லும் நிலை அதிமுகவில் இல்லை. எடப்பாடி பழனிசாமியால்தான் நான் அமைச்சரானேன் என அவர் கூறியிருந்தார். ஆனால் என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியிருக்க மாட்டார்.
எல்லாவற்றிற்கும் சிபிஐ விசாரணை கேட்கும் அதிமுக, கொடநாடு விவகாரத்தில் இதுவரை சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்? ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் ஓபிஎஸ் மட்டுமே.
எடப்பாடி பழனிசாமி கொல்லப்புறமாக முதல்வரானவர் என்பதை இந்த நாடறியும். அன்று ஒரு நிலை, இன்று நிலை என இபிஎஸ் பேசுவது வேதனை அளிக்கிறது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்.
அது போல் தர்மயுத்தம் நடத்தி வந்த ஓபிஎஸ்ஸை அழைத்து நீங்கள் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர், நீங்கள் துணை முதல்வர், நான் முதல்வர் என பேசி அவரை அழைத்து வந்து பின்னர் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமென கூறியிருந்தோம்.
ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நான் என் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். என் தொகுதியில் நான் செய்த பணிகளுக்காக என்னை எத்தனையோ அமைப்புகள் பாராட்டியிருந்தன.
அவ்வளவு ஏன்! அந்தியூரில் எடப்பாடி பழனிசாமியின் மாமா இறுதி சடங்கிற்கு வந்துவிட்டு ஒரு பயணியர் விடுதியில் தங்கியிருந்த போது ஈரோட்டில் சாலைகள் எல்லாம் பளபளனு போட்டிருக்கிறீர்களே! எடப்பாடி தொகுதியில் கூட நான் இப்படி போட்டதில்லை என என்னை பாராட்டியிருந்தார். முன்னேற வேண்டும் என்றால் சொந்த காலில் நடக்க வேண்டும். மற்றவர்கள் முதுகில் பயணிக்க கூடாது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது சில மாதங்களுக்கு முன்பு முதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்ததன் விளைவாக அவரது பதவிகள் பறிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் அவர் பேசினார். இதனால் அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். தான் நீக்கப்பட்டது விதிகளின் படி இல்லை என்றும் சட்டபடி சந்திப்பேன் என்றும் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தன்னை நீக்க அதிகாரம் இல்லை என்றும் செங்கோட்டையன் விமர்சித்திருந்தார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவர் தனது தொகுதிக்கு எந்த பணிகளையும் செய்யவில்லை. திமுகவின் பி டீமாக இருந்து வருகிறார். இதுவரை சட்டசபையில் திமுகவை எதிர்த்து ஒரு கேள்விக் கூட அவர் கேட்டதில்லை என்றும் விமர்சித்திருந்தார். இதற்கெல்லாம் பதிலடியாகத்தான் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications