For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By BBC News தமிழ்
|

காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியை குறைத்து வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

காவிரி நீரில் தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
PRAKASH SINGH/AFP/Getty Images
காவிரி நீரில் தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியது.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை வழங்குவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்று கூறினார்.

மேலும் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய உச்சநீதிமன்றம்
Getty Images
இந்திய உச்சநீதிமன்றம்

காவிரிலியிருந்து ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு 419 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றும் அதில் கர்நாடக அரசு 192 டிஎம்சி தண்ணீரை பத்து மாதங்களில் பகிர்ந்து வழங்கவேண்டுமென்றும் நடுவர் மன்றம் 2007 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பையடுத்து தமிழகத்திற்கு காவிரியிலிருந்து ஒட்டுமொத்தமாக 404.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

தற்போதைய தீர்ப்பில் கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.

மேலும் காவிரி நீர் தொடர்பாக மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1892லும் 1924லும் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, "காவரி படுகை விவசாயிகளுக்கும் கர்நாடக மக்களுக்கும் இது நல்ல செய்தி" என்று மட்டும் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பின்படி பெங்களூருவுக்கு 4.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

மேட்டூர் அணை (கோப்புப்படம்)
BBC
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று வாதங்கள் முடிவடைந்தன. அப்போது அமர்வில் இருந்த நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.என். கான்வில்கர் அமர்விடம் வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர், தங்களை கர்நாடகத்திடம் கெஞ்சும் நிலைக்குக் கொண்டுசென்றுவிட வேண்டாம் என்று கோரினார்.

இந்த வழக்கில் தமிழகத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் ஷேகர் நெபதே, காவரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் அடிப்படையிலேயே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே விருப்பம் இருக்கிறதா என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

https://www.facebook.com/BBCnewsTamil/videos/10155032358400163/

2007ல் வெளியான தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடவே 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நீதிமன்றம் நீதித்துறை சார்ந்த உத்தரவை வெளியிட வேண்டுமென்றும் மத்திய அரசை தங்களால் சார்ந்திருக்க முடியாது என்றும் தமிழ்நாடு கூறியது.

மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதாடினார். 1956ஆம் வருட மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்த் தாவா சட்டப்படி, நாடாளுமன்றம்தான் இதில் முடிவெடுக்க முடியும் என அவர் கூறினார். ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு பங்கு இருக்கிறது என்றும் தங்களுடைய தீர்ப்பே அதற்கு சாட்சியாக அமையும் என்றும் கூறியது.

மத்திய அரசுக்கு கண்டிப்பு

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாததற்காக மத்திய அரசையும் நீதிமன்றம் கண்டித்ததோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் ஏன் தயக்கம் என்றும் கேள்வியெழுப்பியது.

இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், தாங்கள் தற்போது காவிரி நதி நீர் ஆணையத்தையும் கண்காணிப்பு கமிட்டியையும் அமைத்திருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

காவிரி நீரில் தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி குறைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ARUN SANKAR/Getty images
காவிரி நீரில் தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி குறைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

இறுதி வாதங்களின்போது கர்நாடகத்தின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்பதை மனதில் கொள்ளாமல் மாதாமாதம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகக் கடுமையானது என்று கூறியது. இந்த மாநிலத்தில் மழைபெய்ய வேண்டுமென கடவுளுக்கு நடுவர் மன்றம் கட்டளையிடுவதைப் போன்றது இது என வாதாடினார்.

கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நடுவர் மன்றம் நீர் ஒதுக்கீடு செய்தபோது, பெங்களூரின் தண்ணீர் தேவை குறித்து கருத்தில் கொள்ளவில்லை என்றும் நாரிமன் கூறினார்.

பிற செய்திகள் :

BBC Tamil
English summary
மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று இன்று வெளியிட்ட உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாததற்காக மத்திய அரசை கண்டித்தது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X