மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்? ஆட்சி கவிழ்ப்புக்கு அஸ்திவாரம் போடும் டிடிவி தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை விட்டு ஓடிப்போன டிடிவி தினகரன் இன்று திடீரென அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. திஹார் சிறைக்குப் போவதற்கு முன்னர் திடுக்கிடும் திருப்பங்களை தினகரன் அரங்கேற்றுவாரோ? ஆட்சியை கவிழ்க்கும் வேலையை செய்வாரோ? என பீதியில் இருக்கிறது அதிமுக வட்டாரம்.

வலிமையான தலைமை இல்லாத அதிமுகவை யார் வேண்டுமானாலும் ஆட்டுவிக்கலாம் என்கிற நிலைமைதான் தற்போது இருக்கிறது. சசிகலாவைத் தொடர்ந்து தினகரன் அதிமுகவில் கோலோச்ச முயற்சித்தார்.

ஆனால் தொடக்கம் முதலே தினகரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒத்துழைப்பு தரவில்லை. தினகரனின் எந்த ஒரு அறிவுறுத்தலையும் ஏற்க கூடாது என டெல்லி எஜமானர்கள் போட்ட உத்தரவை அச்சு பிசகாமல் செய்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி அதிர்ச்சி

எடப்பாடி அதிர்ச்சி

அதேநேரத்தில் ஆர்கே நகரில் தினகரனே போட்டியிட முடிவு செய்தபோது, ஆஹா நம்ம பதவிக்கே ஆபத்து என ஆடிப் போனார் எடப்பாடி பழனிச்சாமி. ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் தினகரனை முழுவதுமாக ஓரம்கட்டும் வாய்ப்புக்காக காத்திருந்தது டெல்லி.

ஒதுக்கி வைப்பு

ஒதுக்கி வைப்பு

தற்போது தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் வசமாக தினகரன் சிக்கிக் கொண்டார். இதுதான் வாய்ப்பு என தினகரன் சார்ந்த குடும்பத்தையே கட்சியைவிட்டே விலக்கி வைப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்தது. அத்துடன் ஓபிஎஸ் அணியுடன் இணைப்பு பேச்சுவார்த்தையிலும் படுமும்முரமாக இருக்கிறார்கள்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

இதை சற்றும் எதிர்பாராத தினகரன் வேறுவழியே இல்லாமல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துவிட்டு அதிமுகவை விட்டு தப்பி ஓடிவிட்டார். தினகரன் சட்டனெ ஒதுங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இதே தினகரன்தான் என்னை ஒதுக்கினால் சொடக்கு போடும் நேரத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என கூறியிருந்தார்.

திடீர் ஆலோசனை

திடீர் ஆலோசனை

தற்போது இவ்வளவு அமைதியாக தினகரனே ஒதுங்கிவிட்டாரே... நிச்சயம் இதில் உள்குத்து இருக்கிறது என்றே எடப்பாடி தரப்பு கருதி வந்தது. இன்று அதை உறுதிப்படுத்தும் வகையில் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை நடத்தினார். தினகரனின் தற்போதைய நடவடிக்கைகளால் நிச்சயம் ஏதோ ஒரு திருப்பத்தை திஹாருக்கு போவதற்கு முன் செய்யத்தான் போகிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி?

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி?

தினகரன் ஏற்கனவே கூறியதுபோல் தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இறங்கலாம் என்றே தெரிகிறது. தம்முடைய அரசியல் எதிர்காலத்துக்கே ஆப்பு வைத்த எடப்பாடி கோஷ்டிக்கு ஆட்சி கவிழ்ப்பு மூலமே பாடம் கற்பிக்க முடியும்; அத்துடன் தம்மை ஒழித்துக் கட்டுவதற்காக எடப்பாடிக்கு ஆதரவு தரும் திவாகரன் அண்ட் கோவுக்கும் திகிலைத் தர முடியும் என்பதுதான் தினகரன் தரப்பின் ப்ளானாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran today discuss with his support ADMK MLAs on revolt issue.
Please Wait while comments are loading...