For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புகழ்ச்சியை மட்டுமே அனுமதிக்கிறார் சபாநாயகர்... ஸ்டாலின் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவோரை மட்டுமே சபாநாயகர் அனுமதிக்கிறார். எங்களை பேசக் கூட அனுமதி தர மறுக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக கேள்வி கேட்க அனுமதி கோரினார் ஸ்டாலின். ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

DMK stages walk out

அதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 9, 10ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக ஏற்கனவே வற்புறுத்தி வருகிறது. பல்வேறு கட்சிகளும் இந்த கோரிக்கையை வைத்து உள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா மாநாட்டில் பேசும்போது, 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வந்து இருக்கிறது என்று கூறியுள்ளார். எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு முதலீடு வந்தது. எத்தனை தொழிற்சாலை அமைக்கப்படும். எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? என்பது பற்றிய விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற கருத்து பற்றி பேசுவதற்காக அனுமதி கேட்டேன். ஆனால் சபாநாயகர் மறுத்து விட்டார்.

கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நடத்தி வரும் விசாரணை பற்றி பேசவும் அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

DMK stages walk out

சட்டசபை விதிப்படி 110வது விதியின் கீழ் முதல்வரோ, அமைச்சரோ அறிக்கை வாசித்த பின் அதுபற்றி எதுவும் பேசக் கூடாது என்று உள்ளது. ஆனால் இப்போது தினமும் 110வது அறிக்கையை முதல்வர் வாசிப்பதும் அதை தொடர்ந்து செ.கு.தமிழரசன் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் புகழ்ந்து பேசுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

விதிக்கு எதிரான இதனை சபாநாயகர் அனுமதிக்கிறார். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து திமுக பேச முயற்சிக்கும் போதெல்லாம் அதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்குவதில்லை. அதுபற்றி பேசுகிறோம் என்ற கருத்தை கூட பதிவு செய்வதற்கு அனுமதிப்பதில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.

பிற கட்சிகளும் வெளிநடப்பு

இதேபோல இதே பிரச்சினை குறித்துப் பேச முற்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் புதிய தமிழகம், கட்சியும், வேறு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் சகாயம் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்தனர்.

English summary
DMK members staged a walk out from the TN Assembly led by its leader M K Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X