
ஸ்டாலின், கருணாநிதி போட்டோ இருக்கு.. மோடி படம் எங்கே.. செஞ்சி பாஜகவினருக்கு வந்த கோபம்
செஞ்சி: செஞ்சியில் வேளாண்துறை விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாததால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வைக்கப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களிலும், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களிலும் பிரதமர் மோடி புகைப்படம் இல்லாததை பாஜகவினர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது அதிகரித்துள்ளது.
பாஜகவையும், பிரதமர் மோடியையும் திமுக அரசு வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
“வொர்க் ஃப்ரம் ஹோம்..” மாற்றுத்திறனாளிகள் ஆபீஸ் போக தேவையில்லாத நிலைவரும்.. ஸ்டாலின் அசத்தல் தகவல்

அரசு அலுவலகங்களும் புகைப்படங்களும்..
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுவாக முதல்வரின் புகைப்படங்கள் வைப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. முதல்வர் புகைப்படத்தை தவிர, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள், மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இதுதான் வழக்கமாக உள்ளது. அதே சமயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களிலும், பாஜகவுடன் தோழமையில் உள்ள மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கூடுதலாக வைக்கப்பட்டிருக்கும்.

பாஜகவின் மோடி புகைப்பட அரசியல்
இந்நிலையில், தமிழக பாஜகவினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றனர். அதாவது, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. எனினும், தமிழத்தில் அதை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. சமீபத்தில், தெலங்கானாவில் ரேஷன் கடை ஒன்றில ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு மோடி படம் வைக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பியது தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.

மோடி புகைப்படம் எங்கே?
இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வேளாண்துறை சார்பில் நேற்று விளம்பர பிரச்சாரம் ஒன்றும் செய்யப்பட்டது. அதாவது, மத்திய அரசின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பிரச்சாரம் நடைபெற்றது. ஆனால், மத்திய அரசின் திட்டம் குறித்த அந்த விளம்பர பேனர்களில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை.

கொந்தளித்த பாஜக
அப்போது அங்குக வந்த பாஜக நகரத் தலைவர் ராமு, பொதுச்செயலாளர் அமலநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், "மத்திய அரசு திட்டமான கிசான் திட்டம் குறித்த விளம்பத்தில் ஏன் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை" எனக் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேளாண்துறையினர் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.