For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேதாஜி தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களை வெளியிட வேண்டும்: வைகோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நேதாஜி தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கீர்த்தி மிக்க இடம்பெற்றிருக்கும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மறைக்கப்பட்ட ஆவணங்களில் மூன்றை மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 1945 ஆகஸ்ட் 18 இல் நேதாஜி பயணம் செய்த ஜப்பான் விமானம் பர்மோசாவில் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்படாத தகவல்தான் இதுவரை பேசப்பட்டு வருகிறது.

Hidden documents about Netaji should be released: vaiko

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஆவணம் மூலம் மாவீரர் நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்ததாக சொல்லப்படும் 1945 ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குப் பின்னர் மூன்று முறை அவர் வானொலியில் உரையாற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாவீரர் நேதாஜி அவர்கள் வானொலியில் 1945 டிசம்பர் 26ஆம் தேதியும், 1946 ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் 1946 பிப்ரவரி மாதம் என மூன்று முறை உரையாற்றினார் என்றும் ஆர்.ஜி. கேசி அவர்கள் வங்காள ஆளுநராக இருந்தபொழுது ஆளுநர் அலுவலக அதிகாரி பி.சி. கார், நேதாஜியின் வானொலி உரையை அலைவரிசை 31 இல் ஆளுநர் அலுவலகத்தின் கண்காணிப்புக் குழு பதிவு செய்ததாக நேதாஜி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள மூன்று ஆவணங்கள் மூலம் மாவீரர் நேதாஜி அவர்கள் 1945 ஆகஸ்ட் 18 இல் பர்மோசா தீவு விமான விபத்தில் கொல்லப்பட்டார் என்று இதுவரையில் கூறப்பட்டு வந்த தகவல் பொய்யாக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து பிரிட்டீஷ் ஏகாத்திபத்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போரிட்ட மாவீரர் நேதாஜியின் ஆவணங்களை மறைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறது. நேதாஜியின் புகழ் ஒளியை மறைக்க காங்கிரஸ் அரசு பண்டித நேரு காலத்தில் இருந்து செய்த வஞ்சகங்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் விமான விபத்தில் இறக்கவில்லை, அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து கூறி வருகிறது. நேதாஜி தொடர்பான மறைத்துவைத்துள்ள ஆவணங்களை இந்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்தக் கோரிக்கைக்காக செப்டம்பர் 2012 இல் கொல்கத்தா சென்று மேற்கு வங்காள முதல்வர் அன்புச் சகோதரி மம்தா பானர்ஜி அவர்களைச் சந்தித்து மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

நேதாஜி ஆவணங்களை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி திமுக சார்பில் 2014 டிசம்பர் 23 இல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று உரையாற்ற மேற்கு வங்க கல்வி அமைச்சர் திரு. பார்த்தா சாட்டர்ஜி அவர்களை, முதல்வர் மம்தா பானர்ஜி அனுப்பி வைத்தார்.

தலைநகர் டெல்லியில் 2015 மார்ச் 23 ல் தில்லி தமிழ் சங்க அரங்கில் நேதாஜி புகழ் ஒளி என்ற தலைப்பில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் டில்லி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு. ராஜேந்திர சச்சார், ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் திரு. சரத் யாதவ், பஞ்சாப் மாநில பேராசிரியர் திரு. சைனி உள்ளிட்டவர்கள் பங்கேற்று கழகத்தின் கோரிக்கைக்கு வலு சேர்த்ததுடன் மறைக்கப்பட்ட நேதாஜி ஆவணங்களை பிரதமர் வெளியிட வேண்டுமென்று முழங்கினார்கள்.

இந்திய மக்களின் நெஞ்சில் நிறைந்த நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று இந்தியாவிலேயே முதலில் குரல் எழுப்பிய பெருமை மறுமலர்ச்சி திமுகவிற்குத்தான் உண்டு. பிரதமர் அலுவலகம் நேதாஜி ஆவணங்களை வெளியிட்டதை வரவேற்பதுடன் மற்ற ஆவணங்களையும் பிரதமர் மோடி அவர்கள் மக்கள் மன்றத்தின் முன் வைக்க வேண்டும். இல்லையேல் நேதாஜியின் ஆவணங்களை மறைத்த பழி காங்கிரஸ் ஆட்சியைப் போன்று மோடி அரசுக்கும் வந்து சேரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MdmK General Secretary said, Hidden documents about nethaji subhash chandra bose should be released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X