For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்சாரம் இல்லை... விளம்பர வெளிச்சத்தில் கனவு காணும் அதிமுகவினர்... கருணாநிதி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க. ஆட்சியினர் விளம்பர வெளிச்சத்தில் கனவு காண்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றசாட்டு

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக மின் வெட்டு நீடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கடந்த பத்து நாட்களில் மட்டும் காற்றாலைகள் உற்பத்தி செய்த 5.73 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில வார கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மின்வெட்டு தொடரும் என்றெல்லாம் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியும், பதற்றமும் அடையத் தொடங்கி விட்டார்கள்.

Karunanidhi criticises Jayalalithaa on power issue

இந்த நிலையில் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தங்களிடமிருந்து 50 சதவிகித மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள தமிழக அரசு மறுப்பதாகக் கூறி வழக்கே தொடர்ந்திருக்கிறார்களாம்.

இதுபற்றி இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. கஸ்தூரி ரங்கையன் அளித்துள்ள பேட்டியில், "உலக அளவில் அதிகக் காற்றாலைகள் நிறுவியதில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 19,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அளவுக்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 40 சதவிகிதம், தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் யாரெல்லாம் காற்றாலை அமைக்கிறார்களோ அவர்களிடமிருந்து அந்த மின்சாரம் மொத்தமாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை நம்பித்தான் தமிழகத்தில் காற்றாலைகளின் எண்ணிக்கை அதிகமானது.

தொழில் முனைவோர் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவி, மின்சாரத்தைத் தயாரித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் வரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தது. இப்போது எங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்க தமிழக அரசும், மின்வாரியமும் மறுத்து வருகிறது. இதனால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துத்தான் நாங்கள் காற்றாலைகள் அமைத்தோம். இப்போது அரசு நம்பிக்கைத் துரோகம் செய்கிறது. காற்றாலைகளை நிறுவிட கிட்டத்தட்ட 70 சதவிகிதத் தொகையை வங்கியில் கடனாகப் பெற்றுள்ளோம். இப்படி திடீரென மின்சாரத்தை முழுமையாகப் பெற மறுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்குவதுதான் இதற்குக் காரணம். மிகக் குறைந்த விலையில் அதாவது யூனிட்டுக்கு ரூ. 3.05 விலையில் நாங்கள் உற்பத்தி செய்து வழங்குகிறோம். வெளி மாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.91. அங்கிருந்து கொண்டு வருவதற்கான கட்டணம் ரூ. 1.20 ஆகிறது. ஆக, ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 6.11 ஆகிறது.

காற்றாலை மின்சாரம்

காற்றாலை மின்சாரத்தை வாங்காமல் இரட்டிப்பு விலையில் வெளி மாநிலத்திலிருந்து வாங்குவதால் மின்வாரியத்தின் நஷ்டம் மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த தமிழகம் இப்போது ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தமிழக அரசுதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எங்கள் பிரச்சினையைச் சொல்ல அதிகாரிகளைச் சந்தித்தோம். அமைச்சரைச் சந்தித்தோம். முதல்வர் அலுவலகத்திலும் முறை யிட்டோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. இரண்டு மாத பொறுமைக்குப் பிறகுதான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

காற்றாலை மின்சாரத்தின் உண்மை நிலை என்ன என்பதை அந்தச் சங்கத்தினரும், தமிழக அரசும்தான் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள பொது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்நிலையில் மின்வெட்டு பிரச்சினை காரணமாக சென்னை மாநகரிலேயே பல தெருக்களில் இரவில் மின் விளக்குகள் எரிவதில்லை. கோவை மாநகரில் உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்ப தாகத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மூடப்பட்ட தொழிற்சாலைகள்

"மின்வெட்டு பிரச்சினையை எதிர்கொள்ள இயலாத கோவை சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்து வந்த ஆர்டர்களை சீனா உள்ளிட்ட இடங்களுக்கு பெரிய நிறுவனங்கள் மடைமாற்றிவிட்டதால், சிறு குறு தொழில்கள் கடும் அழிவை எதிர்கொள்கின்றன. சுமார் 6 ஆயிரம் சிறு குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் 60 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள்" என்று கூறியிருக்கிறார். வேலை இழந்த பலர் ஆட்டோ ஓட்டியும், அப்பளம் விற்றும் கூலிக்கு வேறு இடங்களில் வேலை பார்த்தும் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இருண்ட தமிழகம்

2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, அ.தி.மு.க. சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இருண்ட தமிழகம் ஒளி மயமாக்கப்படும்; வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்." என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள்! ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு சாதனைகளை நான்கு பக்க விளம்பரங்களிலேயே சொல்லி மன நிறைவு கொண்டு விட்டார்கள் ஆட்சியாளர்கள்! ஆனால் தமிழகத்தில் உண்மை நிலை என்ன? இருண்ட தமிழகம் ஒளிமயமாக் கப்பட்டிருக்கிறதா? ஒளிமயமாக இருந்த தமிழகம் இருண்ட தமிழகமாக ஆக்கப்பட்டிருக்கிறதா?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 20 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவிய காரணத்தால், பெரும்பாலான தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்திற்குள் வராமல் சென்று விட்டார்கள் என்று நாளிதழ்கள் எழுதியுள்ளன.

கடந்த ஆண்டு நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக பல்வேறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கிப் போய்விட்டன. இதுதான் மாநிலம் பல பெரிய முதலீடுகளை இழக்க முக்கியமான காரணம் என்கிறார் தேசிய அளவிலான தொழில் வர்த்தகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.எஸ். ரவாட்.

2011-2012ஆம் நிதியாண்டில் புதிய தொழில் களுக்கான முதலீடு என்பது 5.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டின் அளவோ வெகுவாகக் குறைந்து 1.8 சதவிகிதம் என்கிற அளவிற்கு உள்ளது.

கடைசி 8 வது இடம்

இந்த மாதம் 10ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் கடைசி 8வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் புதிய தொழில்களுக்கான முதலீடு என்பது 1 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் முதலீடு என்பது 3 ஆயிரத்து 533 கோடி ரூபாய் என்கிற அளவிலே உள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஜெயலலிதா பேசிய கூட்டங்களில் என்ன சொன்னார்? "ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின் வெட்டு இல்லாமல் செய்வோம்"" என்று சொன்னாரா இல்லையா? மூன்று மாதங்கள் அல்ல, தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டன. என்ன நிலைமை?

மின்வெட்டு பிரச்சினை

நான் கடந்த ஆண்டே இந்தக் கருத்தைத் தெரிவித்த போது,"தமிழ் நாட்டின் மின்வெட்டு நிலைமையை மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என்பது போன்ற எந்த வாக்குறுதியையும் தான் அளிக்கவில்லை" என்று ஜெயலலிதா பேரவையில் குறிப்பிட்டார்.

அதன் பிறகு டெல்லி மாநிலம் உபரியாக வைத்திருக்கும் சுமார் 1,900 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். மத்திய அரசு அதை வழங்க முடியாதென்று மறுப்பு தெரிவித்தது. மத்திய அரசு அந்த மின்சாரத்தை வழங்கினாலும், அதனைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான மின்பாதை (கேரிடார்) இல்லை என்பதுதான் உண்மை. அதை நான் அப்போது தெரிவித்ததும், தி.மு. கழக ஆட்சியில் ஏன் அதற்கான மின்பாதையை அமைக்கவில்லை என்றார்கள்.

உடனே நான் அ.தி.மு.க. அரசின் 2012-2013ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் "வெளி மாநிலங்களில் கிடைக்கும் மின்சாரத்தை நமது மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கான மின் வழித்தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கு வழியில்லை" என்று அவர்களே தெரிவித்திருந்ததை எடுத்துக்காட்டிய பிறகு, வாயை மூடிக் கொண்டார்கள்.

மின் திட்டங்கள்

25-4-2013 அன்று பேரவையில் முதல்வர் செய்த அறிவிப்பில், "நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாயில் புனல் மின் திட்டம்! மின் கட்டமைப் பையும் தொடரமைப்பையும் வலுப்படுத்த 5000 கோடி ரூபாய்த் திட்டம்! 3572 கோடி ரூபாயில் 19 புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள்! திருவலத்தில் 1000 கோடி ரூபாயில் துணை மின் நிலையம் - மின் தொடர்கள்! தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மீண்டும் மாற்றிட 30,602 கோடி ரூபாய்த் திட்டங்கள்"" என்றெல்லாம் படித்தாரே, அவைகள் எல்லாம் எந்த நிலையிலே உள்ளன?

15 மணிநேரம் மின் வெட்டு

கிராமங்களில் இன்று வரை 15 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு! குழந்தைகள் இரவிலே காற்று இல்லாமல் தூங்குவதில்லை என்பதால் பெற்றோர்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தெருக்களிலே அலைகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களில் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சோற்றுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள். அதைப்பற்றி யெல்லாமா இந்த ஆட்சியாளர்கள் கவலைப் படுகிறார்கள்?

காற்றாலை மின்சாரம்

இந்த நிலையில் அன்றாடம் ஏடுகளைப் பிரித்தால் மின் உற்பத்தி நிலையங்கள் அங்கே நிறுத்தம், இங்கே நிறுத்தம் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கான பணிகளை அ.தி.மு.க. பதவியேற்றதற்குப் பிறகு அக்கறை எடுத்துக் கொண்டு விரைவுபடுத்திடவில்லை. தனியாரிடமிருந்து காற்றாலை மின்சாரத்தை வாங்கி விநியோகிப்பதிலும் தடுமாற்றமும், தயக்கமுமே காணப்படுகிறது.

கனவு காணும் அதிமுகவினர்

மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு முன்னுரிமை கொடுக்காத காரணத்தால், பொதுமக்கள் அவதி குறையவில்லை; சிறு தொழில்கள் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது; வேலையிழந்து தவித்திடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை விழி நீர் பெருக்குகிறது; முதலீட்டாளர்கள் தமிழகம் என்றாலே முகம் சுளித்திடும் அவல நிலை உருவாகி, தொழில் வளர்ச்சி துவண்டு விட்டது; வெறும் "ப்ளக்ஸ் போர்டு"கள், "பேனர்"கள், சுவரொட்டிகள், பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரங்கள் ஆகியவற்றிலேயே காலம் கழிகிறது! ஒட்டுமொத்தமாக, அ.தி.மு.க. ஆட்சியினர் விளம்பர வெளிச்சத்தில் கனவு காண்கிறார்கள்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi on Tuesday criticised Chief Minister Jayalalithaa for blaming the DMK regime for electricity shortage in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X