For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக தான் ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றியது: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, திமுக தலைவர் கருணாநிதி மாற்றுத் திறனாளிகள் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப் படுகிறது. இதை ஒட்டி, கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ‘திமுக ஆட்சிக் காலத்தில் தான், ஊனமுற்றவர்கள் என்ற வார்த்தை மாற்றப் பட்டு, மாற்றுத் திறனாளிகள் என்ற அமல் படுத்தப் பட்டதாகத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப் பட்ட, மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் தற்போது செயல்படாமல் இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என அறிவித்தது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மாநில வாரியம், தொழுநோய் இரவலர் மறுவாழ்வுத் திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கும் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம், மாத ஓய்வூதியத் திட்டம், பராமரிப்பு உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை, கல்வி உதவித் தொகை, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ரத்து என திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்து :

மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய்பேச முடியாதவர்களாய், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய், மன நோயாளிகளாய் உள்ள அனைவரையுமே "மாற்றுத் திறனாளிகள்" என்று அழைக்கின்ற முறை குறித்து 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது.‪#‎Kalaignar‬ ‪#‎karunanidhi‬ ‪#‎DMK‬ ‪#‎politics‬ ‪#‎tamilnadu‬ ‪#‎kalaignarinnagaichuvai‬ ‪#‎tnassembly‬ ‪#‎diffrentlyabled‬ ‪#‎physicallychallenged‬

அந்த விவாதத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நமது இந்திய நாடு ஏழாவது நாடாகக் கையொப்பம் இட்டுள்ளது.

அந்த இணக்க ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் முதல், "சர்வதேச மனித உரிமைச் சட்டம்" ஆக அமைந்தது.

அதன்படி, தமிழகத்தில் அப்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு இனி "ஊனமுற்றோர்" என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், "மாற்றுத் திறனாளிகள்" என அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கழக அரசு பிரம்மாண்டமான முறையில் வடிவமைத்துக் கட்டிய, புதிய சட்டப் பேரவையில் 19.3.2010 அன்று முதன்முதலாக அளிக்கப்பட்ட 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், "மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்" என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், தலைமைச் செயலகத்தில் "மாற்றுத் திறனாளிகள் நலத்துறை" எனும் புதிய துறை 27.3.2010 அன்று உருவாக்கப்பட்டு, அத்துறையின் அரசுச் செயலாளராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பேற்றார்.

2010-2011இல் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கெனப் பேரவையில் தனியே, "மானியக் கோரிக்கை" அளிக்கப்பட்டு, அதன்மீது மாற்றுத் திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த காலங்களிலெல்லாம் மாற்றுத் திறனாளிகள் நலம் கருதிப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Karunanidhi gives welfare kits to differently abled persons

மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் :

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மாநில வாரியம், தொழுநோய் இரவலர் மறு வாழ்வுத் திட்டம், கண்புரை நீக்கிக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கிடும் கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள் போன்ற துணைக் கருவிகள் வழங்கும் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர்க்குப் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், காது கேளாத, வாய் பேசாதவர்களை, ஒரு கை அல்லது கால் இழந்தோரை மணம் செய்து கொள்ளும் உடற்குறை இல்லாதவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளியை மற்றொரு மாற்றுத் திறனாளி மணம் செய்து கொண்டால் நிதி உதவி வழங்கும் திட்டம், மாற்றுத் திறன் படைத்த மாணவ மாணவியர்க்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், பணிக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் 30 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகைகள் வழங்கும் திட்டம்,மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்குப் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கும் திட்டம், கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணங்கள் ரத்து என்பனவாகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் நாம் என்பதை எண்ணிப் பெருமைப்பட முடியும்.

இளைஞன் பட சம்பளம் :

இப்படி, அரசு மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டதுடன், நான் "இளைஞன்" திரைப்படத்திற்குக் கதை, வசனம் எழுதியதற்காகக் கிடைத்த 45 இலட்சம் ரூபாய் தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, பின்னர் அதனை 2010-2011ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளித்திட தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திற்கு வழங்கினேன்.

தமிழக முதல்வராக வீற்றிருந்து - மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாற்றுத் திறனாளிகள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகக் காலை ஏடுகளில் வெளிவந்த செய்தியைப் படித்துவிட்டுத் துடித்த நெஞ்சத்தோடு; காலை உணவு கூட உட்கொள்ளாமல் எனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து கீழே இறங்கி காரில் ஏறி நேராக அவர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கே சென்று; அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்படும் என்று கூறிப் போராட்டத்தைக் கைவிடச் செய்தவன் நான்.

ஆனால், 2014 ஆகஸ்டு மாதத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு இடஒதுக்கீட்டினைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை விரட்டியடித்ததுடன் - அவர்களில் பலரைக் கைது செய்து வாகனங்களில் அவர்களை ஏற்றிச் சென்று சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத சுடுகாட்டுப் பகுதிகளிலும் இறக்கிவிட்டுச் சென்றது, இந்த அரசு. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை மனிதாபிமானமற்ற முறையில் இப்படிச் சுடுகாட்டு பகுதியில் இறக்கிவிட்ட கொடுமை அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தது.

அதிமுக அரசின் லட்சணம் :

ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலிருந்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைப் பார்த்து உதவித் தொகை பெறலாம் என்ற நம்பிக்கையோடு வந்த செல்வராஜ் என்ற மாற்றுத் திறனாளியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துவிட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டுவிட்டார் என்ற சம்பவமும் இந்த ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சிகளின் துணை கொண்டு மாற்றுத் திறனாளிகள் நலனில் கழக அரசும் - அதிமுக அரசும் கடைப்பிடித்த அணுகுமுறைகளை ஒப்பிட்டு உண்மையை அறிந்து கொண்டால், இதுதான் "அதிமுக அரசின் லட்சணம்" என்பதை மக்களால் விளங்கிக் கொள்ள முடியும். எனவே, "வழி தவறிவிட்ட ஆடு போல" தவிக்கின்ற தமிழக மக்கள் துயர் துடைக்கும் விடிவு காலம் நெருங்குகிறது என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு உரிய கடமையாற்றிடுவோம். மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இந்த உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் நமது நல்வாழ்த்துகளை இந்நாளில் தெரிவித்திடுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The DMK president Karunanidhi today gave welfare kits to differently abled persons in a function held at his home in Chennai Gopalapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X