இரட்டை இலை யாருக்கு?.. அக். 31க்குள் முடிவெடுங்க - தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

Madurai HC orders EC to clarify on Two leaves symbol issue on Oct 31

அதில், 'அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக இருந்து வந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக அதிமுக அணிகள் சார்பில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அதிமுக 3 அணியாக பிரிந்துள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இந்த முறையை பின்பற்றி அதிமுகவிலும் அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும்.

தேர்தலில் சின்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் ஓட்டுக்காக சின்னத்தையே நம்பியுள்ளன. மக்கள் மத்தியில் கட்சி சின்னம் ஆழமாக பதிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னம் மிகவும் பிரபலமானது.

இரட்டை இலை சின்னத்தால் தமிழக ஆட்சியிலும், நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய கட்சியாகவும் தற்போது அதிமுக உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது துரதிர்ஷ்டவசமானது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு 5 மாதம் ஆகிறது.

புதிய பொதுச்செயலர் தேர்வு, உள்ளாட்சி தேர்தல், ஆர்கே நகர் இடைத் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டியதுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் கட்சியின் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கட்சி தொண்டர்களிடம் தற்போது குழப்பான சூழல் காணப்படுகிறது. இது எதிர்கட்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தேர்தலில் பிரச்சினை எழுந்த போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது.

இதைப் பின்பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் அணியிலுள்ள அதிமுகவின் அனைத்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டுக்கூட்டத்தை கூட்டி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி யாருக்கு ஆதரவு என்பதைக் கண்டறிய வேண்டும்.

அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் என 3100 பேர் உள்ளனர். இவர்களை ஒரே இடத்தில் கூட்டி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அதிமுக (புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் இரட்டை இலைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், செம்மலை ஆகியோரையும், அதிமுக (அம்மா அணி) சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த வி.கே.சசிகலா, தினகரன் ஆகியோரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்தவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள், மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், அடுத்த விசாரணையை செப்டம்பர்13ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணிகளின் மனுக்கள் மீது முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் அணிகள் சார்பில் லட்சக்கணக்கில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் மாறி மாறி சின்னத்தை கேட்பதால் முடிவெடுக்க தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai HC has ordered the EC to clarify on ADMK's Two leaves symbol issue on october 31.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற