For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு: தமிழக அரசை கண்டித்து நவ.16ல் மதிமுக ஆர்ப்பாட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் இலட்சக்ணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார்கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.

MDMK to protest against the demolition of Mullivaikkal memorial

இந்தியா செய்த பண உதவியால், மேலும் ஆறு அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து, இராஜபக்சே அரசு, ஆயுதங்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பெற்று, தமிழர்களை அழிக்கப் பயன்படுத்தியது. இதனால், விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் கொடுந் துயரமாக, முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், 1,47,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியாதான் காரணம் என்று; இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்றும் மகிந்த ராஜபக்சே திமிரோடு சொன்னான்.

விடுதலைப்புலிகள் கட்டி எழுப்பிய மாவீரர் துயிலகங்கள், போரில் மடிந்த புலிகளின் கல்லறைகள் அனைத்தையும் இராஜபக்சே இடித்துத் தரை மட்டமாக்கினான். நெஞ்சை நடுங்கச் செய்யும் இந்தப் பேரழிவை, உலகத்துக்கு உணர்த்தவும், தாய்த் தமிழகத்தில் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்த தியாகிகளை நினைவூட்டவும், தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அண்ணா தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள் ளுபடி செய்யப்பட்டது.

இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகÞட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன.

2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர்.

கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர். தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறன் அவர்களையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது.

ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 சனிக்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
MDMK has planned for a demonstration against the demoltion of Mullivaikkal memorial on Nov 17
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X