மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடியார்!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். மேட்டூர் அணை வரலாற்றில் முதல்வர் ஒருவர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது இதுவே முதல்முறையாகும்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.
இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நேற்று 1.20 லட்சம் கன அடி காவிரி நீர்வந்த நிலையில் பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது

காவிரியில் வெள்ளப்பெருக்கு
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்டவை முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று 11வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் நீர் வரத்து
தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி வருகின்றனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்துக்கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,04,436 கன அடியில் இருந்து 1,01,277 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 76.99 டிஎம்சியாக உள்ளது.

முதல்வர் திறந்துவிட்டார்
இந்நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் 85வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து விட்டார்.

வரலாற்றில் முதல்முறை
முதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இதுவரை எந்த முதல்வரும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்ததில்லை.

படிப்படியாக உயர்த்தப்படும்
முதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இது உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!