For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே! அற்புதம்! அதிமுக நாடகம் அபாரம்... கை தட்டும் டெல்லியின் கையில் க்ளைமாக்ஸ்!

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

சில திரைப்படங்களில் ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு கதைகள் இணையாக வரும். கடைசியில் அவை எல்லாம் ஏதாவது ஒரு நிகழ்வில் இணைந்து கிளைமாக்ஸ் காட்சியில் முடிந்து விடும். இதைப் போன்ற காட்சிகள் இப்போது அண்ணா திமுகவில் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில காலம் வரையில் இரண்டாக இருந்த அதிமுக காட்சிகள் இப்போது மூன்றாக விரிந்துவிட்டன.

ஒரு காட்சி ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது காட்சி எடப்பாடி பழனிச்சாமி என்று இருந்தது. இப்போது மூன்றாவதாக டிடிவி தினகரன் காட்சியும் தோன்றிவிட்டது

Paa Krishnan article on ADMK Factions Drama

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தபின் அவரது தோழி வி.கே. சசிகலாவைக் கட்சியின் பொதுச் செயலாளராகி, டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளரான பிறகு காட்சிகள் விறுவிறுப்படைந்தன. அதுவரை சும்மா இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்க நேர்ந்தபோது, மனோகரா படத்தின் கடைசிக் காட்சி போல புதிய திருப்பம் ஏற்பட்டது.

ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் விறுவிறு காட்சிகள் உச்சக் கட்டத்தை அடைந்தன. அத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகள் டிடிவி தினகரனை வில்லனாகச் சித்திரித்தன. அதனால், அவரைச் சார்ந்திருந்த எடப்பாடி அணியும் வில்லன் ஆதரவாளர்களைப் போல் தோன்றினர். ஆனால், இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, சசிகலா குடும்பத்தினர் மீது மெல்ல மெல்ல கசப்பு ஏற்பட்டது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்ட காட்சி அவரது ஆதரவாளர் எனக் கருதப்பட்டு முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவரிடமிருந்து ஒதுங்கும் காட்சிகள் அமைந்தன. அதன் விளைவாக, தில்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்கு முன் "இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன்" என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அது எடப்பாடி அணிக்கும் வசதியாகிவிட்டது. "சசிகலா குடும்பத்தினரே ஒதுங்குவதாகக் கூறிவிட்டனர்" என்று புதிய விளக்கத்துடன் காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.

இருந்தாலும், நாஞ்சில் சம்பத், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் "தினகரனே மெஸையா" என்று அடித்துப் பேசி வந்தனர்.

இப்போது, திஹார் சிறையிலிருந்து தினகரன் ஜாமீனில் வெளிவந்தவுடன் புதிய "ட்விஸ்ட்" ஏற்பட்டுள்ளது. "நான் சென்னையிலேயே இல்லை. 45 நாள் ஆகியும் இரு அணிகளும் இணையவில்லை. எனவே, கட்சிப் பணிகளில் மீண்டும் நான் ஈடுபட வேண்டியுள்ளது" என்று பலரை நெளியச் செய்திருக்கிறார்.

சசிகலா, தினகரன் குடும்பம் விஷயத்தில் பட்டும் படாமலும் பேசி வந்த எடப்பாடி அணி தனது நிலையை இப்போது தக்க வைத்துக் கொள்கிறது. தினகரன் திரும்பி வந்த பிறகும், தங்களது நிலையில் மாற்றமில்லை என்பதை நிதியமைச்சர் டி. ஜெயகுமார் கூறிவிட்டார். அமைச்சர்களுடன் கலந்து பேசிவிட்டு முடிவெடுத்திருப்பதால், அது தன்னிச்சையான முடிவு என்று சொல்ல முடியாது.

இருந்தாலும் இந்தக் காட்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. திஹாருக்குச் செல்வதற்கு முன், "கட்சி ஒன்றாக இணைய நான் தடையாக இருப்பதாக கருதினால், அதற்காக விட்டுக் கொடுக்கத் தயார். ஒதுங்கிக் கொள்கிறேன்" என்று தியாக வசனம் பேசிய அவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாறு செய்யும்படி எடப்பாடி அணியினரும் வற்புறுத்தவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. அது மட்டுமல்ல, இணைப்புக்காக இரு நிபந்தனைகளைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி வலியுறுத்தி வருகிறது. அதற்கு இதுவரையில் எடப்பாடி அணி நேரடியான பதிலைக் கூறாததும் கவனிக்க வேண்டியது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து முழுமையாக விலக்க வேண்டும் என்பதும் ஓபிஎஸ் அணி வைக்கும் முக்கிய நிபந்தனைகளாகும். அதற்கு எடப்பாடி அணி, "ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து தாங்களே ஒதுங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டனர்" என்று கூறுகிறார்கள். இந்த பஞ்ச் டயலாக் சப்பென்று இருப்பதால், ரசிகர்களை ஈர்க்கவில்லை.

தினகரனாவது விசாரணைக் கைதியாகத்தான் சிறை சென்றார். சசிகலா தண்டனைக் கைதியாகவே பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவரையும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகும்படி எடப்பாடி அணியினர் கடந்த இரு மாதங்களாகக் கேட்கவேயில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். தினகரன் என்னதான் "தியாக" நோக்கம் தொனிக்கப் பேசினாலும், அவரது ஆசை இப்போது வெளிப்பட்டுவிட்டது.

"கட்சியிலிருந்து நான் ஒதுங்கி நாற்பது நாட்கள் ஆகியும் இரு அணிகளும் இணையவில்லை" என்று கூறியிருக்கிறார். கட்சியின் அணிகள் இணைவதை விட தான் முக்கியத்துவம் பெறுவதில்தான் அவர் குறியாக இருப்பதைக் காட்டுகிறது. அணிகள் இணைவதற்காக ஒதுங்கிக் கொள்கிறேன் என அறிவித்தபோது, இத்தனை நாட்களுக்குள் இணையவேண்டும் என்று அவர் காலக்கெடுவா விதித்தார்...?. "நானே ஒதுங்கிக் கொள்கிறேன்" என்று கூறியவர், இப்போது, "என்னைக் கட்சியிலிருந்து யாரும் நீக்க முடியாது" என்று சவால் விடுவதும் முரண்பாடாக உள்ளது.

ஏதோ ஒரு பிரச்சினைக்காக ஓர் அலுவலகத்திலிருந்து பதவி விலகும் அதிகாரி, அதன் பின் அந்த அலுவலகத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். மாறாக, "நான் அதிகாரி பதவியிலிருந்து விலகி இத்தனை நாளாகிவிட்டது. பிரச்சினை தீரவில்லை. எனவே, மீண்டும் பதவிக்கு வருகிறேன்" என்று சொல்வாரா.. ? திஹாரிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பின் இப்படிப் பேட் டி கொடுத்த டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்த பிறகு, தற்போது கட்சி இணைவதற்கு 60 நாள் அவகாசம் தந்திருக்கிறார்.

இத்தனை கதா பாத்திரங்கள், இத்தனை திருப்புமுனைகள் இருக்கும்போது, காட்சிகளிலேயே தோன்றாமல் முக்கிய கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பார்க்கப்படும் பாத்திரம் போல மத்திய அரசு இருக்கிறது. அதிமுக 1988ம் ஆண்டு பிளவுபட்டபோது, அதைச் சாதகமாகப் பயன்படுத்த காய் நகர்த்திய காங்கிரஸ் கூட, "ஜெயலலிதா அணியும் ஜானகி அணியும் இணைந்தால் ஆதரிக்கிறோம்" என்று தெளிவாகக் கூறியது. இப்போது, பாஜகவும் அதிமுக அணிகளாகப் பிரிந்திருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறது.

ஆனால், ஓராண்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பின் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிமுகவின் எந்த அணியுடனும் இணையாமல் தனியாகவே போட்டியிட்டு, 26 தொகுதிகளில் வென்று, தனது நிலையைக் காட்டிவிட்டது. ஆனால், பாஜக அப்படி தேர்தலைத் தனியாக சந்தித்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதா என்று தெரியவில்லை.

அதிமுகவின் இரு அணிகளும் நன்றாக மோதி பலவீனப்படட்டும், அப்போதுதான் தன்னிடம் சரணடைவார்கள் என்ற நோக்கம் இருப்பதைப் போல் தெரிகிறது. ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு, எல்லோரையும் "கவனித்துக்" கொள்ளலாம் என்று பாஜக அரசு திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. கதையின் முடிவு பாஜக வின் கையில் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால், எப்படி முடியப் போகிறது என்பதை அறிவதுதான் சஸ்பென்ஸ்.

பழைய திரைப்படக் கதைகளை எடுத்து, புதிய ட்ரீட்மென்ட் கொடுத்து புதிய திரைக்கதையாக காலத்துக்கு ஏற்ப திரைப்படம் எடுப்பார்கள். ரசிகர்களாகிய பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை 2019 மக்களவைத் தேர்தலிலும், ஒரு வேளை, மைத்ரேயன் எம்பி கூறுவதைப் போல் அதற்கு முன்பே சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தாலோ கதையின் முடிவு நன்றாகத் தெரிந்துவிடும்.

எனினும், இப்போதைக்கு சஸ்பென்ஸ் நீடிக்கிறது!

English summary
Columnist Paa Krishnan understands that the recent developments following Dinakakran’s statement still raises doubt of the AIADMK factions’ ambiguous stand. Dinakaran’s aspirations have now come out from the horse mouth. But the BJP’s plan to fish the troubled water is very clear though it keeps cards close to its chest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X