For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது தரம் தாழ்ந்த செயல்.. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ராமதாஸ் கடும் கண்டனம்!

ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைவிட மிக மோசமான அரசியல்வாதியாகவே பன்னீர்செல்வம் இருப்பார். அவரை சரியான நேரத்தில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் சவப்பெட்டியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி பிரசாரம் செய்தது தரம் தாழ்ந்த செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் சவப்பெட்டியுடன் பரப்புரை மேற்கொண்டிருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை எத்தனையோ அவலங்கள் அரங்கேற்றப்பட்ட நிலையில், அவற்றை விஞ்சும் வகையில் மிக மோசமான தரம் தாழ்ந்த செயலாக இது அமைந்துள்ளது.

அதிமுகவின் இரு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் கருதப்படுவதால் சசிகலா அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் சாம,பேத, தான, தண்டம் என அனைத்து அணுகுமுறைகளையும் கடைபிடித்து வருகின்றனர்.

தலா ரூ.4000

தலா ரூ.4000

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன் ஓட்டுக்கு ரூ.4000 வீதம் இதுவரை ரூ.100 கோடி வினியோகம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பணத்தை வைத்து அரசியல் செய்யும் தினகரனுக்கு பதிலடி தரும் வகையில் பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதாவின் பிணத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இழிவு

இழிவு

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கொள்கை மற்றும் கோட்பாடுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்வது தான் நேர்மையான செயலாக இருக்கும். அதற்கு மாறாக ஜெயலலிதாவின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது போன்ற மாதிரியை தெருத்தெருவாக வாகனத்தில் எடுத்துச் சென்று ஜெயலலிதாவின் இறப்புக்கு நீதி கேட்பதாக பிரச்சாரம் செய்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இது ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றமே தீர்வு

நீதிமன்றமே தீர்வு

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அவரது மரணத்திலும் ஆயிரம் மர்மங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மர்மங்களுக்கு விடை காணும் இடம் நீதிமன்றமே தவிர தேர்தல் களம் அல்ல. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் சசிகலா அணியினருக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பல மடங்கு கடமையும், பொறுப்பும் பன்னீர்செல்வத்திற்கு உள்ளது.

எதிர்த்தவர் ஓ.பி.எஸ்

எதிர்த்தவர் ஓ.பி.எஸ்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் பொறுப்புகளை கவனித்து வந்த பன்னீர் செல்வம், அவ்வாறு எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய இயலாது என்று அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கச் செய்தார். முதலமைச்சர் பதவியில் இருந்தவரை ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து வாயைத் திறக்காத பன்னீர்செல்வம், பதவி விலகிய பின் இதுபற்றி சர்ச்சை எழுப்புவது கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறில்லை.

சந்தர்ப்பவாதி ஓ.பி.எஸ்

சந்தர்ப்பவாதி ஓ.பி.எஸ்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த போதும், அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகும் பன்னீர்செல்வம் கடைபிடித்து வரும் அணுகுமுறைகளை ஒப்பீடு செய்து பார்த்தால் அவர் எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி என்பது தெரியும். அனைத்து விஷயங்களிலும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைவிட மிக மோசமான அரசியல்வாதியாகவே பன்னீர்செல்வம் இருப்பார். அவரை சரியான நேரத்தில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். அதுவரை ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து ஓட்டுக் கேட்பது போன்ற தரம் தாழ்ந்த, மலிவான அரசியலை பன்னீர்செல்வம் செய்யக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss condemns O.Pannerselvam team for their election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X