For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரித்து ஆள்வது; கொல்வது.. இதுதான் திராவிடம்!- சீமான் பேட்டி 2

By Shankar
Google Oneindia Tamil News

சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம் கேள்வி - பதில் தொடரின் இரண்டாம் பகுதி...

கேள்வி: பிராமணர்களையும் தமிழர்கள்தான் என்று நீங்கள் அங்கீரிக்கிறீர்கள். ஆனால் சக தமிழர்களையே தீண்டாமை என்ற பெயரில் ஒதுக்கி வைத்ததாக பிராமணர்கள் மீது காலங்காலமாக குற்றச்சாட்டு உள்ளது. தீண்டாமையை அவர்கள் மிகத் தீவிரமாக கடைப்பிடிச்சாங்கன்ற குற்றச்சாட்டுகள் இருக்கே...

சீமான்: ஒரு புள்ளி விவரம் எடுங்க. அதிகமா ஆதித் தமிழர்கள் பிராமணப் பெண்களை திருமணம் செஞ்சிருக்காங்களா... அல்லது மாற்று சமூகப் பெண்களை, இங்க தமிழர்கள் என்று சொல்லும் பிற சமூகப் பெண்களைத் திருமணம் செஞ்சிருக்காங்களா? ஒரு புள்ளிவிவரம் எடுங்க பேசுவோம்.

என்னையே எடுங்க.. இதுவரை நீங்க என்ன ஆளுங்கன்னு கேட்காத ஒரே ஒருத்தன் பிராமணன்தான். நம்ம தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் நீங்க என்ன ஆளு, என்ன சாதின்னு கேட்டிருக்கான்.

Seeman's Kelvigalal Oru Velvi Seivom series -2

அண்ணல் அம்பேத்கர் இரண்டு திருமணங்கள் செய்திருக்கார். இருவருமே பிராமணப் பெண்கள். ராம் விலாஸ் பாஸ்வான் திருமணம் பண்ணது பிராமணப் பெண்ணைத்தான். ஆதித் தமிழர்கள் பெருமளவு பிராமணப் பெண்களைத் திருமணம் செஞ்சிருக்காங்க. அவங்களுக்கு பொருளாதாரத்துல மேம்பட்டிருந்தா பொண்ணைக் கட்டிக் கொடுத்திருவாங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. பிள்ளை ஓடிருச்சின்னு அப்பனாத்தா செத்ததோ, விஷம் வெச்சுக் கொளுத்துனதோ, இந்த கவரவக் கொலை, கருமாதிக் கொலைன்னு பண்ணதோ இல்ல. வேணும்னா ஒரு செய்தியக் காட்டுங்க..?

ஆனா இந்த பார்ப்பணீயங்கிற மேலாதிக்கச் சிந்தனை அதிகமா தமிழ்ச் சமூகத்தில்தான் ஊறியிருக்கே.. இதை யார் ஒழிக்கிறது. இதுக்கு திராவிடம் என்ன பண்ணுச்சு?

திராவிடத் தத்துவத்தின் பிதாமகனா இருக்கிறவர் தந்தை பெரியார். சாதி கொடிதா, மதம் கொடிதாங்கிறது கேள்வி. மதம் மாறிக் கொள்ளக் கூடியது. சாதி மாற முடியாதது. அப்ப சாதிதான் கொடிதுங்கிறார். மாறிக் கொள்ளக் கூடிய மதவாதத்துக்கு எதிராகப் பேசுகிற திராவிட ஆட்சியாளர்கள் - ஆனா எல்லாருமே மதவாத பாஜகவுடன் கூட்டணி வைத்து பதவி அனுபவித்தவர்கள்தான் - இன்னிக்கு வரைக்கும் மாற முடியாத கொடிய சாதியவாதத்துக்கு எதிராக இவர்கள் என்ன வேலை செஞ்சிருக்கான்னு நீங்க சிந்திக்கணும். இந்த சாதிய கட்சிகளுக்கு வேரில் வெந்நீர் ஊற்றிச் சாகடிக்காம, தண்ணீர் ஊற்றி உரம்போட்டு வளர்த்தது யார்?

தேர்தல்களில் சாதிக்கு சாதி இடம் கொடுத்து இந்த சாதிக்கு பத்து சீட்டு, அந்த சாதிக்கு பத்து சீட்டு, இந்த சாதிக்கு ஏழு அமைச்சர், அந்த சாதிக்கு எட்டு அமைச்சர்னு.. நீங்க நுட்பமா பாத்தீங்கன்னா.. தமிழர்களை டிவைட் அன்ட் ரூல்... பிரித்து ஆள்வது, கொல்வது.. இதுதான் திராவிட ஆட்சி முறை. இப்ப நாம முன் வைக்கிற அரசியல், இணைத்து வாழ்வது.. வெல்வது.

இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள் ஏன் சாதியத்தை ஒழிக்கவில்லை. இன்னும் இரட்டைக் குவளை முறையையே ஒழிக்க முடியவில்லையே.

திருநாள்கொண்டசேரியில் ஒரு தாழ்த்தப்பட்ட முதியவர் இறந்துட்டார். அவர் பிணத்தை பொது வழியில் கொண்டுபோக முடியவில்லை. ஆதிக்க மனோபாவம் கொண்ட தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் அந்தப் பகுதியினர் பொதுவழியில் அந்தப் பிணத்தை அனுமதிக்கல. சரி, மாவட்ட ஆட்சியர், காவல் துறையினரின் வலிமையோடு பிணத்தை எடுத்துக்கிட்டு ஏன் அந்தப் பொதுவழியில் கொண்டு போய் புதைக்காம, அவசர அவசரமா மாற்று வழியில் கொண்டு போய் அடக்கம் பண்ணுதுன்னா... அடித்தட்டு மக்களுக்கு இருக்கிற தீண்டாமை மனோபாவத்தைத் தாண்டி, அதிகாரத்துக்கு இருக்கிற தீண்டாமை ஆபத்தானதா இல்லையா? இந்த ஆட்சி அந்த ஆட்சி என்றல்ல... இரண்டு பக்கமுமே இந்த மனோபாவம் இருக்கு.

திராவிடம் என்பதே ஆரியத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தத்துவம். ஆரியத்தை திராவிடம் வீழ்த்தியதா? இல்லை. ஆரியத்துக்கு தலைமையேற்றது. மண்டியிட்டால் கூட தாண்டிப் போவது சிரமம். மல்லாக்கப் படுத்திடுச்சி. அவன் ஏறி மிதிச்சுட்டுப்போயிட்டான். அதனால் இதைப் பேசுவதே பயனற்றது. அவங்கதான் வர்ணாசிரம தர்மத்தை வகுத்தாங்கன்றான்... சரி, நீ ஏன் கடைப்பிடிச்சே? அதை உடைக்க என்ன வேலை செஞ்சே? அப்ப எதுக்குத்தான் இந்த அதிகாரம் பயன்பட்டுச்சி?

ஆதித் தமிழர் விடுதலை இல்லாது மீதித் தமிழர் விடுதலை வெல்லாதுன்னு நாங்கள் சொல்கிறோம். ஏற்கெனவே 44 தொகுதிகள் இருக்கு. அது போக மேலும் 20 தொகுதிகளை ஆதித் தமிழருக்கு நாம ஒதுக்கியிருக்கோம்னா, அவன் தாழ்த்தப்பட்டவன் என்று இருக்கிறானே ஒழிய தாழ்ந்தவன் இல்லை. அவனுக்கு இல்லாத முன்னுரிமை எவருக்கும் இல்லை என்பதற்காகத்தான் கொடுக்கிறோம். எடுத்த உடனே இது தெரியாது. சிறுகச் சிறுகத்தான் இந்த மாற்றத்தை நாம கொண்டு வர முடியும். இதை ஏன் இத்தனை ஆண்டு காலமாக இருந்த திராவிட கட்சிகள் செய்யவில்லை.

சீர்த்திருத்தத் திருமணங்கள் செய்து வைத்தார்களே.. எத்தனை திருமணங்களில் உயர்ந்த சாதிப் பெண்ணுக்கு தாழ்ந்த சாதிப் பையனையோ, அல்லது தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கு உயர்ந்த சாதிப் பெண்ணையோ கட்டி வைத்தார்கள். ஒரே சமூகத்துக்குள் தாலி இல்லாமல் திருமணம் நடத்தி வச்சாங்க. ஒரே சமூகத்துக்குள் அய்யர் இல்லாமல் கட்டி வைக்கிறது. இது என்ன சீர்த்திருத்தம், புரட்சி இருக்கு? அதனால ஆரியம்தான் கொண்டு வந்தது, திராவிடம் சரி செஞ்சதுங்கிறதை நான் ஏற்கலை.

இரண்டாவது நாங்கதான் படிக்க வெச்சோங்கிறாங்க. திராவிடம் வரலேன்னா படிச்சிருக்க முடியாதுங்கறாங்க. படிக்க வெச்சது காமராஜர். இந்த கேள்வியை நாம கேட்போம். இந்தியாவிலேயே அதிகமா கல்வி அறிவு பெற்ற மாநிலம் கேரளாங்கிறாங்க. ஆனா அங்க எந்த திராவிடம் படிக்க வெச்சது? ஆக இது எத்தனை முரண்?

கல்வி, மருத்துவத்தை தன் நாட்டின் மக்களுக்குக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமை. அந்தக் கடமையையே சாதனையாகப் பேசிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அப்புறம் கல்விக்குக் கடன் கொடுத்தேங்கிறது. கடன் வாங்கி படிக்கிற நிலையில் என்னை எவன்டா வெச்சவன்? ஆக தன் கடமையைச் செய்வதையே சாதனையாகக் கருதுவது இந்த ஆட்சி முறை. இது ரொம்ப ஆபத்தானது. அதனால்தான் இதை அடியோடு வேரறுக்க வேண்டும் என்கிறோம்.

Seeman's Kelvigalal Oru Velvi Seivom series -2

கேள்வி: அப்படியெனில் எந்த சூழ்நிலையிலும் திராவிடக் கட்சிகளுடன் இணைந்து நீங்கள் அரசியல் செய்ய மாட்டீர்கள் அல்லவா?

சீமான்: அந்த திராவிட தத்துவத்துக்கு எதிராகத்தான் நாம பார்க்கிறோம். திராவிடன் என்பதையே ஏற்கவில்லை, எதிர்க்கிறேன். நான் தமிழன். இந்த நாடு தமிழ்நாடு. இந்த நாட்டில் வாழும் மக்களின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், தொன்று தொட்ட வேளாண்மை, வளங்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க ஒரு அரசியல் வேண்டும். அது தமிழ் தேசிய அரசியல். இதில் எதற்கு திராவிடம்? நாடு தமிழ் நாடு என்று ஆகிவிட்டது. அப்புறம் எதற்கு திராவிடக் கட்சிகள்? தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்த பிறகு, ஆளும் உரிமையும் அவர்களுக்குத்தானே? அப்புறம் எதற்கு திராவிட முன்னேற்றக் கழகம்? யார் திராவிடர்? யாராவது ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கள். திராவிடர்தான் தமிழர், தமிழர்தான் திராவிடர் என்பார்கள். ஏன் தமிழர் திராவிடராக இருக்க வேண்டும். தமிழன் தமிழனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதனால்தான் இவர்களுடன் நான் உடன்படவில்லை.

இவர்களின் மொழிக் கொள்கையிலேயே நான் முரண்படுகிறேன். அண்ணாவின் மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை. இந்தியையும் சேர்த்தால் மும்மொழிக் கொள்கை. அது மோசடிக் கொள்கை என்றார்கள் நம் முன்னோர்கள்.

என்னைப் பொருத்தவரை, என் தாய் மொழி தமிழ். என்னுடைய பயிற்று மொழி, கல்வி மொழி தமிழ். ஆங்கிலம் கட்டாயப் பாடம். உலகத்தின் எல்லா மொழியும் - இந்தி உட்பட - எங்கள் விருப்ப மொழி. இதுதான் நமது மொழிக் கொள்கை.

கேள்வி: சமீபத்தில் பீகார் தேர்தலில் அந்த மண்ணின் மைந்தர்கள் ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். அது போல ஒரு வாய்ப்பு தமிழகத்தில் உண்டா? இங்கு உங்கள் தலைமையில் தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பிருக்கிறதா?

சீமான்: அங்கு கடைசியா நிதீஷ்குமார் பீகாரியா பாஹாரியா-ன்னு ஒரு கேள்வியை வைக்கிறாரு. பாஹாரின்னா வெளியாள். அது எல்லா மாநில அரசியல்லயும் வேலை செய்யுது. நம்மைப் பொருத்தவரை, அரை நூற்றாண்டு காலமா திமுக - அதிமுக. இதைவிட்டா வேற மாற்று இல்லைன்ற சூழல். இதுக்குள்ளயேதான் தமிழ் மக்களின் அரசியல் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம முதல் முறையா, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்றுன்னு முன் வைக்கிறோம். தேசியக் கட்சிகளுக்கு மாற்றா வந்தது திராவிடம். மாநில நலனைப் பேசிக் கொண்டு வந்த திராவிடம் மாநில நலனைக் காக்கல. இப்போ இந்த திராவிடத்துக்கு மாற்றா வரணும்னா, இந்த மண், மக்கள், நலனை முன் வைத்து வருகிற தமிழ் அரசியல் கட்சிகள்தான் எதிர்காலத்தில் வெல்லப் போகுது. அந்த வகையில் இந்த தேர்தலில் நாம் எடுத்து வைப்பது மிகச் சரியான, உறுதியான, அழுத்தமான தொடக்கமாகவும் இருக்கும்.

இரண்டு சக்தியும் வேண்டாம் என்று மக்கள் ஒரு புரட்சி போலக் கிளர்ந்து தூக்கி வீசிவிட்டு ஒரு மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கு.

இல்ல, இந்த இரண்டு சக்திகளையும் சரித்துவிட்டு, கணிசமான வாக்குகளை மாற்று சக்திக்கு தரவும் இந்த தேர்தலில் வாய்ப்பிருக்கு. நிச்சயமா இந்த நேரத்தில் இந்த இரு சக்திகளுக்கும் மாற்றாக ஒரு அரசியல் உருவாகும் சூழல் வந்திருக்கு. அதனால்தான் இவர்களுக்கு இவ்வளவு நடுக்கமும் பதற்றமும்.

இன்றைக்கு இவ்வளவு பெரிய கட்சிகள் விஜயகாந்தைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது, விஜயகாந்தின் பலம் இல்லை. இவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுது.

இங்கே தமிழ் தேசிய சக்திகளே இல்லை. இங்கே தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் அய்யா மணியரசன், தியாகு போன்றவர்கள். இவர்கள் தேர்தல் அரசியலை நிராகரிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். இவர்களை விட்டால், அய்யா நெடுமாறன். நம்மை ஆதரிப்பதா, தனித்துப் போட்டியா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

என்னைப் பொருத்த வரை இது ஒரு தொடக்கம். இந்த தொடக்கத்தியே நான் நூறு அடிக்கலாம். அல்லது அடுத்த முறை நூறு அடிக்கலாம். நாங்கள் 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதே, எங்கெல்லாம் தமிழர் நிலப்பரப்பில் தமிழ் தேசிய மக்கள் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு அரசியல் இருப்பதை நிலை நிறுத்தத்தான். ஒரு பகுதிக் கட்சி, தொகுதிக் கட்சியாக இருந்ததைப் போல, என் முன்னோர்கள் செய்த பிழையை நான் செய்ய விரும்பவில்லை. பத்து சீட்டு, அஞ்சு சீட்டுக்காக இந்த திராவிடக் கட்சிகளிடம் சரணடைந்து வீழ்வதற்கு நான் விரும்பவில்லை.

இந்த மண்ணை இந்த இனம், இந்த நிலம் சார்ந்தவனே ஆளணும் என்பதே பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருப்பதால்தான், நீங்க முதல்ல கேட்ட கேள்வியில் சொன்னது போல, எனக்கு இவ்வளவு எதிர்ப்பு. இவன் அடிப்படையிலேயே கைவைக்கிறானே என்பதால்தான் இந்த எதிர்ப்பு வருது. நீண்ட காலமாக அதிகாரம் மறுக்கப்பட்ட பிள்ளைகள், இன்று அதே உரிமையை திரும்பக் கேட்டு ஏறும்போதுதான் அவர்களுக்கு பயம் வருது.

தமிழ் தேசிய கட்சிகள், அமைப்பாக உள்ளவர்கள் எல்லாம் இப்போது எங்களை ஆதரிக்க வேண்டும். ஆதரிச்சா நல்லது. இல்லாவிட்டால் மக்களிடம் போகிறோம்.

கேள்வி: தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் உள்ளன. இந்த குறைவான காலகட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் வைத்திருக்கிற வேலைத் திட்டங்கள் என்ன?

சீமான்: நீண்ட காலமாகவே நாங்கள் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தலில் புள்ளியிலிருந்து தொடங்குகிறோம். தேர்தல் அறிக்கையாக தராமல், நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவாகக் கொடுக்கிறோம்.ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்களை வைத்துக் கொண்டு அந்த துறை சார்ந்த மாற்றங்களை முன் வைக்கிறோம். வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவித்த பிறகு, இன எழுச்சிப் பெரும்பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம். மக்களை நேரில் சந்தித்து நிதி திரட்டுவது, வாக்கு சேகரிப்பது போன்றவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்.

ஏற்கனவே களத்திலுள்ள வலிமையான கட்சிகள், அதிகார பலம் கொண்டு, பொருளாதார பலம், ஊடக பலம் போன்றவற்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த மூன்றுமே நமக்கில்லாததால், ஒரு போர் மாதிரிதான் இந்தத் தேர்தலைக் கையாள வேண்டியுள்ளது.

இது ஒரு பெரும் போர், நீண்ட காலமாக எமது மண்ணை வளத்தை சுரண்டி கொழுத்து நிற்கிற இரண்டு திராவிடப் பூதங்களை எதிர்த்து நிற்கிற போர்.

Seeman's Kelvigalal Oru Velvi Seivom series -2

கேள்வி: இவ்வளவு பெரிய போருக்குத் தயாராகிற உங்களுக்கு, கூட வருகிற இந்த இளைஞர் பட்டாளத்தின் - பெரும்பாலும் படித்த இளைஞர்கள் - செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும்படி உள்ளதா? இந்தத் தேர்தலுக்கான பயிற்சி, முன்னேற்பாடுகளை எடுத்திருக்கிறார்களா?

சீமான்: பிறக்கும்போதே யாரும் தலைவராகப் பிறப்பதில்லை. நான் முன்பே சொன்னது போல, 'வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் முயற்சி.. இது மாற்றத்துக்கான எளிய மக்களின் முயற்சி'. அப்படித்தான் இதை நாம் பார்க்கிறோம். இதைப் பயிற்சியாகக் கூட எடுத்துக்கலாம். பயிற்சி ஆட்டத்திலேயே ஒருத்தன் நூறு அடிப்பதில்லையா? அதுவும் நடந்திடலாம். இந்தப் பிள்ளைகள் அவரவர் பகுதிகளில் தேர்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறார்கள். தேர்தல் முறை தெரியும். அந்தப் பயிற்சியே போதும் என்று நினைக்கிறேன். கற்றறிந்த பிள்ளைகள். தூய உள்ளத்தோடு மண்ணையும் மக்களையும் நேசிக்கிற பிள்ளைகள். என்னிலும் மேலாக லட்சிய வெறியோடு நிற்கிற பிள்ளைகளை நான் பார்க்கிறேன். நான் எதிர்ப்பார்த்ததை விட தேர்ச்சி பெற்று களத்தில் நிற்கிறார்கள். எனவே மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.

கேள்வி: ஒரு கட்சிக்கு மிகப் பெரிய பலமே, கடைசி குக்கிராமம் வரைக்கும் அந்தக் கட்சியின் வேர் பரவியிருக்கணும்னு சொல்வாங்க. நாம் தமிழர் கட்சிக்கு அந்த மாதிரியான கட்டமைப்பு உருவாகி விட்டதா?

சீமான்: ஏறக்குறைய 60-70 விழுக்காடு பரவிட்டோம். உண்மையான கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரே வழி தேர்தலை எதிர்கொள்வதுதான். இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியைத் தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்கு என் பிள்ளைகள் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவார்கள். இது முதல் வெற்றி.

பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும், தேர்தலில் நிற்க முடியும், பணமில்லாதவன் ஒண்ணுமே செய்ய முடியாது.. உண்மையும் எளிமையும் உள்ளவன், மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று நினைத்தால்கூட வர முடியாது என்ற இழி நிலையை ஒழிப்பார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவை இல்லடா.. நல்ல மனம்தான் தேவை என்பதை நிரூபிப்பார்கள். அப்படிப் பார்த்தால் நாங்கள்தான் இந்தத் தேர்தலில் வெற்றிகளைக் குவிக்கப் போகிறோம். மீண்டும் நவம்பரில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி போகாத இடமில்லைன்னு கொண்டு போய்ச் சேத்துடுவேன். அதுக்கப்புறம் அது கோட்டையா மாறும்.

இன்று வாக்குச் செலுத்துமிடத்தில் முகவரை நிறுத்தக்கூட முடியாத கட்சின்னு பேசறாங்க. திமுக தொடங்கும்போது அத்தனை வாக்ககத்திலும் ஆள் நிறுத்தும் வலிமையோடா இருந்தது. அவ்வளவு பெரிய திரைக் கலைஞர் அய்யா எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதும் அதே நிலைதானே. சிறுகச் சிறுக வளர்ந்தார்கள்.

எங்களைப் பொருத்தவரை, கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளில், 2010 மே 18-ல் கட்சி தொடங்கினேன். 2 மாசத்துல சிறைக்குப் போறேன். 6 மாதங்கள் கழித்து வெளியில் வரேன். 2011-ல் தேர்தல். திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வேலை செய்தோம். தொடர்ச்சியா மூன்று பேர் விடுதலை, மீனவர் படுகொலை, அணு உலை.. இந்த போராட்டக் களத்திலேயே நின்றுவிட்டோம். ஊர் ஊரா போய் கட்சியைக் கொண்டு போகிற நிலைமையில் இல்லை. தேர்தல் நேரத்தில்தான் என்ன பேசுகிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்க மக்கள் தயாராவார்கள். இந்த நேரத்தில்தான் மாற்று அரசியலை கருத்தியல் புரட்சி மூலமா விதைக்க முடியும்.

கேள்வி: ஒருவேளை ஒரு பெரிய கட்சி அல்லது கூட்டணியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?

சீமான்: இனிமேல் என்ன வர்றது. ஏற்கெனவே நிறைய வந்துச்சே. நாங்கள் அப்போதே முடியாது என்று சொல்லிவிட்டோமே. நான் சமரசத்துக்கு ஆட்படாதவன். இல்லாவிட்டால், இந்த வேலையை என் தலைவர் என்னிடம் தந்திருக்க மாட்டார். சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டுச் சாவது மேலானது என்பது நாம் ஏற்றுக் கொண்ட தத்துவம்.

எனக்கு 10 சீட்டு, 40 கோடி, 50 கோடி, 40 சீட்டு, 400 கோடின்னு பேசினவங்கெல்லாம் இருக்காங்க. இந்தக் கோடிய வெச்சுக்கிட்டு என்ன பண்றது. நான் தெருக்கோடில கூட நிப்பேன். எனக்கு வேண்டியது நாடும் அதிகாரமும். அடுத்த தலைமுறைக்கான ஒரு தேசமா இதைப் படைக்கணும்னு நினைக்கிறேன்.

யாரோடும் சேர மாட்டேன்னு எல்லாரும் என்னை விமர்சிப்பாங்க. நான் யாரோட சேரலாம்னா பதிலில்லை. 'எந்த தேசிய கட்சிகளோடும் திராவிட கட்சிகளோடும் கூட்டில்லை. ஆனா 2016-ல் தனிச்சி போட்டியிடுவோம்'னு நான் முன்பே பேசியிருக்கேன். இந்த 5 ஆண்டுகளில் அதில் ஒரு தடம் கூட மாறாமல் தேர்தலில் நிற்கிறேன்.

ஒரு காலத்திலும் தேசிய திராவிட கட்சிகளிடம் நாம் தமிழர் மண்டியிடாது. வேண்டுமானால் அவர்கள் எங்கள் பின்னால் வரலாம். அடிபணிவதும் அஞ்சுவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்பது தலைவர் பிரபாகரன் சொன்னது.

சாப்பாட்டில் கூட்டுப் பொரியல்; சண்டையில தனிச்சிதான். என் தத்துவம் சரியாக இருக்கு, பாதை சரியாக இருக்கிறது, பயணம் சரியாக இருக்கிறது.. இந்தப் பிள்ளை போறது சரி என்று ஏற்றுக் கொண்டு எங்களை முன்னிறுத்தி பின்னே யார் வந்தாலும் ஏற்கத் தயார்!

-வேள்வி தொடரும்...

சீமானுடன் கேள்விகளால் ஒரு வேள்வி- முதல் பகுதிசீமானுடன் கேள்விகளால் ஒரு வேள்வி- முதல் பகுதி

சந்திப்பு: எஸ் ஷங்கர்
கேள்விகள் அனுப்ப: [email protected]

English summary
Naam Tamilar chief Seeman's Kelvigalal Oru Velvi Seivom series -2
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X