"விரைவு கட்டண பஸ்களாக" மாற்றி மக்களிடம் வழிப்பறி வேட்டை.. அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சாதாரண பேருந்துகளை விரைவு பேருந்துகளாக மாற்றி மறைமுக கட்டண உயர்வில் அதிமுக அரசு ஈடுப்பட்டிருப்பது மக்களிடம் நடத்தப்படும் வழிப்பறி வேட்டை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கட்டண உயர்வை கைவிடவில்லையென்றால், ஜனநாயக ரீதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே "டீசலுக்கும், பெட்ரோலுக்கும் வாட் வரியை" அதிகரித்து இன்றைக்கு அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் அன்றாடம் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் மறைமுக கட்டண உயர்வை புகுத்தியிருக்கிறது பினாமி அ.தி.மு.க. அரசு.

மக்களிடம் வழிப்பறி வேட்டை

மக்களிடம் வழிப்பறி வேட்டை

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலை இதுவென்றால், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் "பினாமி" அரசு கொண்டு வந்திருக்கும் "திரைமறைவு" கட்டண உயர்வு சாமான்ய மக்களை திடுக்கிட வைத்துள்ளது. கட்டண உயர்வு என்று நேரடியாக அறிவிப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கின்ற சாதாரண பேருந்துகளை "விரைவு கட்டண பேருந்துகளாக" மாற்றி மக்களிடம் வழிப்பறி நடத்தி வேட்டையாடுவது அதிர்ச்சியளிக்கிறது.

விரைவு கட்டணமாக உயர்வு

விரைவு கட்டணமாக உயர்வு

சென்னை மாநகரத்தில் 3689 அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சாதாரண கட்டணத்தில் இதுவரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் 1230.
அதில் 766 பேருந்துகளை "விரைவு கட்டண பேருந்துகளாக" அதிரடியாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் முதல் கட்டண நிலையில் மூன்று ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம் ஐந்து ரூபாய் என்று "விரைவு கட்டணமாக" உயர்த்தப்பட்டுள்ளது.

கான்டிராக்டில் கமிஷன்

கான்டிராக்டில் கமிஷன்

ஒவ்வொரு ஸ்டேஜ் ரீதியிலான கட்டணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் சாதாரணக் கட்டணத்திற்கும், விரைவுக் கட்டணத்திற்கும் இடையிலான உயர்வு ஏழு ரூபாய் வரை அதிகமாக இருக்கிறது. அதாவது ஸ்டேஜ் வாரியாக சாதாரண கட்டணம் மூன்று ரூபாய் முதல் 14 ரூபாய் என்றும், விரைவுக்கட்டணம் 5 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கான்டிராக்டில் "கமி‌ஷன்" அடிப்பது வெளிப்படையாக நடத்தப்படுகிறது. பிளக்ஸ் போர்டு வைத்தே விளம்பரம் செய்யப்படுகிறது.

மர்மமான முறையில் உயர்வு

மர்மமான முறையில் உயர்வு

ஆனால் மக்களை பாதிக்கும் "பேருந்து கட்டணம்" மர்மமான முறையில் உயர்த்தப்படுகிறது.முன்பெல்லாம் விரைவுப் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். ஆனால் இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு "விரைவு பேருந்துகள்" அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை தான் அதிகமாகும் சூழ்நிலையில் மக்கள் கட்டாயமாக விரைவு பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டது.
பணிமனை வாரியாகப் பார்த்தால் பெரம்பூர் பணிமனையிலிருந்து புறப்படும் பேருந்துகளில் 74 பேருந்துகள் விரைவுக் கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் வடபழனியில் 73 பேருந்துகள், அயனாவரத்தில் 64 பேருந்துகள், கலைஞர் நகரில் 66 பேருந்துகள், பூந்தமல்லியில் 38 பேருந்துகள், அண்ணா நகரில் 34 பேருந்துகள், வியாசர் பாடியில் 38 பேருந்துகள் என்று சென்னை மாநகரில் உள்ள 32 பணிமனைகளில் உள்ள பேருந்துகளும் "விரைவுக்கட்டணப் பேருந்துகளாக" மாற்றப்பட்டுள்ளன.

கொடூர சிந்தனை கொண்டது

கொடூர சிந்தனை கொண்டது

ஏற்கனவே பால் விலை ஏற்றத்தாலும், ரே‌ஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாததாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த பேருந்துக் கட்டண உயர்வால் கசக்கிப் பிழியப் படுகிறார்கள். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு புறமிருக்க, மாநில அரசே தனியாக பெட்ரோல், டீசல் மீதான "வாட்" வரியை உயர்த்தி வறுமையில் வாடும் அடித்தட்டு மக்களை இப்படி மேலும் வாட்டி வதைத்திடும் செயலில் அதிமுக அரசு ஈடுபடுவது கொடுமையானது கொடூர சிந்தனை கொண்டதுமாகும்.

மாபெரும் போராட்டம் எச்சரிக்கை

மாபெரும் போராட்டம் எச்சரிக்கை

ஆகவே "விரைவு பேருந்துகளாக" மாற்றப்பட்டுள்ள 766 சென்னை மாநகரப் பேருந்துகளையும் உடனடியாக சாதாரணப் பேருந்துகளாக மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், பேருந்து கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.கட்டண உயர்வை கைவிடவில்லையென்றால், ஜனநாயக ரீதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president Stalin condemns for raising bus fair in Chennai. He is urging to withdraw the raising of bus fair othewise huge protes will be conducted Stalin warns.
Please Wait while comments are loading...