• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலூர் தோல் தொழிற்சாலை விபத்து: 10 பேர் உயிரிழப்பு- பலியானோருக்கு தலா ரூ3 லட்சம்- தமிழக அரசு!

By Mathi
|

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவு நீர் தொட்டி உடைந்ததில் தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இவர்களில் 9 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வேலூர் அருகே உள்ள ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. சிப்காட் தீயணைப்பு நிலையம் பின்புறம் தோல் தொழிற் சாலைகள் பொது சுத்தி கரிப்பு மையம் உள்ளது.

Ten workers die in gas leak

இங்கு 1000 கன லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 20 அடி உயர பிரமாண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி அருகில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஓய்வுவெடுக்கும் கொட்டகை உள்ளது.

இந்த கொட்டகையில் அங்கு வேலை பார்க்கும் 13 தொழிலாளர்கள் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென பொது சுத்திகரிப்பு தொட்டி இடிந்தது.

அதிலிருந்த தோல் கழிவு வயல் வெளியில் உள்ள சேறு போல் பெருக்கெடுத்து தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்த கொட்டகைக்குள் புகுந்தது. அதிலிருந்து விஷவாயு வேகமாக பரவியது. இதனால் தூங்கி கொண்டிருந்த 10 பேர் மயக்கம் அடைந்தனர்.

கண்காணிப்பாளர் அமீர், ரவி, பழனி ஆகியோர் கண் விழித்தனர். அவர்கள் மூக்கை பொத்தி கொண்டு தப்பி ஓடினர். கொட்டகைக்குள் புகுந்த கழிவுநீர் படுத்துதூங்கிய 10 தொழிலாளர்களையும் மூழ்கடித்தது. அப்போது விஷ வாயு பரவியதால் அவர்கள் தோல் கழிவுக்குள்ளேயே சிக்கி பிணமானார்கள்.

தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே உயிரை விட்டனர். இவர்களில் 9 பேர் மேற்கு வங்க மாநிலம் சால்தாபதானி கிராமத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

அப்பகுதி முழுவதும் 2 அடி உயரத்திற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது. விஷவாயு வேகமாக பரவியதால் சிப்காட் பகுதியில் பீதி ஏற்பட்டது.

தப்பி ஓடிய அமீர், ரவி ஆகியோர் நிர்வாகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு கவசம் அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் இருந்து 3 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களில் பெரும்பாலானோரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ3 லட்சம் நிதி உதவி

இதனிடையே இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சிட்கோ தொழில் வளாகத்தில் தனியார் பராமரிப்பில் இயங்கி வந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை கழிவுநீர் தொட்டி உடைந்து அதிலிருந்த கழிவு நீருடன் கூடிய சேறு பக்கத்திலிருந்த தனியார் தோல் கம்பெனிக்கு சொந்தமான ஷெட்டின் மீது மொத்தமாகக் கொட்டியதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரவிக்கு 25,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
According to police, Ten workers of a tannery have been killed due to a gas leak in the Ranipet, Vellor district.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more