14 வங்கிகளில் மோசடியாக கனிஷ்க் நிறுவனம் கடன் பெற்றது எப்படி?... பரபர தகவல்கள்

சென்னை: 14 வங்கிகளில் மோசடியாக கனிஷ்க் நகைக் கடை நிறுவனம் எப்படி கடன் பெற்றது என்ற பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை உஸ்மான் சாலையில் கனிஷ்க் நகைக் கடை உள்ளது. இது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நாகராஜபுரத்தில் தங்க நகை தயாரித்து பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில் இதன் உரிமையாளர் பூபேஷ் ஜெயின் 14 வங்கிகளில் மோசடியாக ரூ.824 கோடி (ரூ. 160 கோடி வட்டி நீங்கலாக) கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அந்த நிறுவனம் வங்கியில் எப்படி ஏமாற்றியது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 200 கோடி கடன் பெற்று அந்த கடனை வருமானமாக பிற வங்கிகளில் காட்டியுள்ளார் பூபேஷ்.
இதை வைத்து மற்றொரு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். மேலும் ஆண்டுதோறும் பொய்யான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததும் தெரியவந்தது. நகைகளைஅதிகம் விற்பனை செய்வது போல் போலி கணக்கு எழுதி அடுத்தடுத்த வங்கிகளிடம் கடன் வாங்கியது தெரியவந்தது.
கடந்த மே மாதமே சென்னையில் உள்ள தலைமையகத்தை காலி செய்து விட்டது தெரியவந்தது. இது தகவலறிந்த பாரத ஸ்டேட் வங்கி பொருளாதார குற்றவியல் துறையில் புகார் அளித்தது. அதில் பூபேஷ் ஜெயின் ரூ.20 கோடி கலால் வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதனால் சுதாரித்த சென்னை எஸ்பிஐ வங்கி தனது மும்பை கிளை மூலம் சிபிஐக்கு புகார் அளித்துள்ளது. கடனை திருப்பி செலுத்தாததால் நாகராஜபுரத்தில் உள்ள 4.5 ஏக்கர் நகை பட்டறையை எஸ்பிஐ பறிமுதல் செய்தது.
புகார் குறித்து தகவலறிந்த 14 வங்கி நிர்வாகங்கள் கடனை திருப்பி செலுத்துமாறு பூபேஷுக்கு நோட்டீஸ் அளித்தன. ஆனால் அவற்றுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!