For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடூரக் கொலைகள் வரிசையில் கோகுல்ராஜ், ஷமீல் - திருமாவளவன் கண்டனம்

Google Oneindia Tamil News

நாமக்கல்: திருச்செங்கோட்டில் தலித் இளைஞர், பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் இஸ்லாமிய இளைஞர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் என்பவரை ஒரு சாதிவெறிக் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாகத் தலையைத் துண்டித்து படுகொலை செய்திருக்கிறது. தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் கோகுல்ராஜ் பழகியதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவெறிக் கும்பல் திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்துள்ளது.

Tirumavalavan states about two murders in TN

திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் தலித் இளைஞரான கோகுல்ராஜ் என்பவரும், தலித்தல்லாத சமூகத்தைச் சார்ந்த கல்லூரி மாணவியான சுவாதியும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, சுவாதியை மிரட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கோகுல்ராஜை தனியே கடத்திச் சென்று படுகொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

இது தொடர்பாக, சுவாதி, கோகுல்ராஜ் குடும்பத்தினருடன் வந்து காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். தாங்கள் இருவரும் கோவிலில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் வந்து, யுவராஜ் என்பவர் உன்னை அழைக்கிறார் என்று கோகுல்ராஜிடம் கூறினார். பின்னர் அவரோடு வந்தவர்கள் எங்கள் இருவரையும் மிரட்டி, எங்களிடமிருந்த கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டனர். என்னை வீட்டுக்குச் செல்லும்படி அச்சுறுத்தினர். கோகுல்ராஜை மட்டும் தனியே அழைத்துச் சென்றனர். கோகுல்ராஜை கடத்திச் சென்றவர்கள் கொண்டுவந்த வண்டியில் தீரன் சின்னமலை பேரவை என்று எழுதியிருந்தது. எனவே, அந்தப் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் என்பவர்தான் கோகுல்ராஜை கடத்திச் சென்றிருக்கிறார்" என்று சுவாதி தன்னுடைய புகாரில் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான், ரயில் தண்டவாளத்தில் கிடந்த உடல் கோகுல்ராஜ்தான் என்பது தெரியவந்திருக்கிறது.

எனவே, யுவராஜ் தலைமையிலான சாதிவெறிக் கும்பல்தான் கோகுல்ராஜை கொடூரமாகப் படுகொலை செய்திருக்கின்றனர் என்பது உறுதிப்படுகிறது. கோகுல்ராஜின் தாயாரும், சுவாதியும் கொடுத்த புகாரை காவல்துறை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த நான்கு நாட்களாக கோகுல்ராஜ் குடும்பத்தினரும் விடுதலைச் சிறுத்தைகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையிலும், கொலைக் கும்பல் மீது கொலைவழக்குப் பதிவு செய்யவோ, கைது செய்யவோ காவல்துறை உடன்படவில்லை. இதுவரையில் குற்றவாளிகள் தரப்பில் ஒருவரையும் கைது செய்யவில்லை.

தலித் மக்களுக்கு எதிரான வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதற்கு தருமபுரியில் நடந்த கொடூரமும், தென் மாவட்டங்களில் தொடரும் தலித் படுகொலைகளும், திருச்செங்கோட்டில் தற்போது நடந்திருக்கிற கோகுல்ராஜ் படுகொலையும் சான்றுகளாக உள்ளன.தலித் இளைஞர்கள் தலித்தல்லாத சமூகங்களைச் சார்ந்த பெண்களோடு பழகினாலே இத்தகைய கொடூரப் படுகொலைகள் நிகழும் என்று அச்சுறுத்தும் வகையில், தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ் ஆகியோரின் படுகொலைகள் உறுதிப்படுத்துகின்றன.

கோகுல்ராஜ் படுகொலையில் தொடர்புடைய யுவராஜ் கும்பலைக் கொலைவழக்கில் கைது செய்ய வேண்டுமென்று கோகுல்ராஜ் குடும்பத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. தமிழக அரசின் இத்தகைய தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துவதோடு, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் (சி.பி.ஐ.) ஒப்புடைக்க வேண்டுமெனவும், கோகுல்ராஜ் குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவருடைய அண்ணனுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், சாதியின் பெயரால் நடக்கும் இத்தகைய ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென இந்திய அரசையும் தமிழக அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் ஷமீல் பாஷா என்கிற இஸ்லாமிய இளைஞரை விசாரணை என்னும் பெயரால் வதை செய்து காவல்துறையினர் படுகொலை செய்துள்ளனர். இதனைக் கண்டித்தும் நீதி கேட்டும் போராடிய இசுலாமிய சமூகத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமிய சமூகத்தினருக்கெதிராக, வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினரின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இந்தப் படுகொலையில் தொடர்புடைய காவல்ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், உயிரிழந்த ஷமீல்பாஷாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 இலட்சம் இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Viduthalai Siruthaikal party Leader Thol.Tirumavalan condolence to the two murders held in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X