For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தமிழர்களின் நலனுக்காக இன்னும் சில ஆண்டுகள் அஞ்சல் வழிக் கல்வி தொடர வேண்டும் - அன்புமணி

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அஞ்சல் வழி கல்வியை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசு பல்கலைக் கழகங்களும் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை இலங்கை கொழும்பில் தொலைதூர கல்வி மையங்களை அமைத்துள்ளன. அவற்றின் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு அஞ்சல் வழிக்கல்வி வழங்கி வருகின்றன.

TN universities will continue DE for few more years in Sri lanka

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் இப்பல்கலைக்கழகங்கள் மூலம் படித்து பட்டம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சல் வழிக் கல்வியை முறைப்படுத்தும் நோக்குடன் பல்கலைக்கழகங்கள் அவை அமைந்துள்ள மாநிலத்திற்கு வெளியே அஞ்சல் வழி கல்வி வழங்கக்கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு ஆணையிட்டிருக்கிறது.

அஞ்சல் வழிக் கல்வி:

இதனால், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அஞ்சல் வழி கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்களின் பட்டப்படிப்பு வாய்ப்புகள் பாதிக்கப்படும். மேலும், இலங்கையில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் பட்டம் பெற்றால் தான் ஆசிரியர் பணியில் நீடிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழக மானியக்குழு விதித்துள்ள தடையால் அவர்களால் பட்டம் பெற முடியாது. எனவே, சில ஆண்டுகளில் அவர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வருவாய் ஈட்டும் பல்கலைகள்:

பல்கலைக்கழகங்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அஞ்சல் வழி கல்வி வழங்கக் கூடாது என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை குறை கூற முடியாது. கிட்டத்தட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களுமே அஞ்சல் வழி கல்வியை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக பயன்படுத்தி வருவதால் அதன் தரம் குறைந்து விட்டது.

எண்ணிக்கை குறைந்துவிட்டது:

இதனால் தான் அஞ்சல் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து தரத்தை உயர்த்தும் நோக்குடன் இப்படி ஓர் உத்தரவை பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்துள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த நடவடிக்கையால் இலங்கையில் பயின்று வரும் மாணவர்கள் கல்வி வாய்ப்பையும், ஆசிரியர்கள் வேலையையும் இழக்க வேண்டியிருப்பது தான் வேதனை அளிக்கிறது.

உயர்நீதிமன்றம் கேள்வி:

இச்சிக்கல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொலைதூரக் கல்வி வழங்கும் போது இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் ஏன் வெளிநாடுகளில் அஞ்சல் வழி கல்வி வழங்கக்கூடாது? என்ற வாதத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நடவடிக்கை மற்றும் அதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளின் தகுதிக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால், இந்நடவடிக்கையால் இலங்கைத் தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

இன்னும் சில ஆண்டுகளுக்கு:

எனவே, இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான அஞ்சல் வழி கல்வியை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசு பல்கலைக்கழகங்களும் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதிக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Anbumani Ramadoss requests TN universities to continue distance education in other states and Sri lanka for few more years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X