For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர் இனப்படுகொலை... அமெரிக்காவின் தீர்மானத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் இனப்படுகொலை, போர்க்குற்ற விவகாரங்களில் சிங்களப் பேரினவாத படுகொலையாளர்களை பாதுகாக்கும் அமெரிக்கா தீர்மானத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை- போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

Velmurugan condemns American resolution

இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கண்டனம்...

ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் வரைவுத் தீர்மானம் சிங்களப் பேரினவாத இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிறது; இந்த தீர்மானமானது பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்குள்ளான தமிழினத்தின் முதுகில் அமெரிக்கா மீண்டும் மீண்டும் குத்துகிற கொடுஞ்செயல்தான் என வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழர்கள் படுகொலை...

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; வெள்ளைகொடியேந்தி வந்த தமிழர் பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டனர்; சரணடைந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனவர்களாக்கப்படனர்- அவர்களது கதி என்ன என்பது எனத் தெரியவில்லை.

தமிழினத்தின் கோரிக்கை....

இப்படி பேரழிவுக்கும் இனப்படுகொலைக்கும் உள்ளான தமிழினம் கடந்த 6 ஆண்டுகாலமாக தங்களுக்கு நீதி வேண்டி, இலங்கையில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கக் கோரி சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்...

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துகிற ஆவணப்படங்கள், புகைப்படங்கள் வெளியாகி உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய நெடிய பயணத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழீழ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, 7 கோடி தமிழர்களின் தமிழ்நாடு சட்டமன்றம் ஆகியவையும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.

19 பக்க அறிக்கை...

இந்த நிலையில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் 19 பக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் இலங்கையில் நிகழ்ந்தது போர்க்குற்றங்களே என்பதை நிரூபிப்பதற்கான அத்தனை ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியிருந்த போதும், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசே அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

ஏமாற்றம்...

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைதான் தேவை என்ற ஒற்றை முழக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் உலகத் தமிழினத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த பரிந்துரை பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும்தான் அளித்தது.

கலப்பு நீதிமன்ற விசாரணை...

இதனைத் தொடர்ந்து இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா ஒரு வரைவுத் தீர்மானத்தை கடந்த 19-ந் தேதி வெளியிட்டிருந்தது. அந்த வரைவுத் தீர்மானத்தில் தமிழ் மக்கள் வேண்டி நிற்கிற சர்வதேச விசாரணை பற்றி எதுவும் இடம்பெறாமல் போயிருந்தாலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்திருந்த கலப்பு நீதிமன்ற விசாரணை போன்ற அம்சங்களே இடம்பெற்றிருந்தன. இந்த வரைவுத் தீர்மானத்தை கண்டு இலங்கை அலறித் துடித்தது. அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றும்படி கெஞ்சிக் கொண்டிருந்தது.

புதிய தீர்மானம்...

இந்நிலையில் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா இன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த புதிய தீர்மானமானது ஒட்டுமொத்தமாக முற்று முழுதாக சிங்களப்பேரினவாத இனப்படுகொலையாளிகளை போர்க்குற்றவாளிகளை காப்பாற்றி உலகத் தமிழர் முதுகில் மீண்டும் குத்துவதாகத்தான் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் பரிந்துரை...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமானது ஒரு கலப்பு நீதிமன்றத்தை அமையுங்கள் என்று சொன்னது; ஆனால் அமெரிக்காவோ அதையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் "காமன்வெல்த் நாடுகள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட ஒரு உள்நாட்டு நீதி அமைப்பை" உருவாக்க பரிந்துரைத்துள்ளது.

பாராட்டுப் பட்டயம்...

காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இருப்பவர்கள் எல்லாம் இலங்கைக்கு ஆதரவான நாடுகள்தானே? இவர்கள் என்ன நீதியின் பக்கம் நின்றுவிடப் போகிறார்கள்? அத்துடன் இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச வல்லுநர்கள் பலரது அறிக்கைகள் குறித்து வாய் திறக்காத அமெரிக்காவின் தீர்மானம், சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அரசு அமைத்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளுக்கு பாராட்டுப் பட்டயம் வாசித்துக் கொண்டிருக்கிறது.

மாய்மால பொய்மைக் குற்றங்கள்....

முந்தைய வரைவுத் தீர்மானத்தில் இல்லாத அம்சமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைப் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறது இந்தப் புதிய வரைவுத் தீர்மானம். சிங்களப் பேரினவாதத்தின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர் பிரதிநிதிகளை மனித உரிமை மீறல் போன்ற மாய்மால பொய்மைக் குற்றங்களின் பேரில் சிங்களம் பலியெடுக்க பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

வேண்டுகோள்...

அமெரிக்காவின் இத்தகைய அயோக்கியத்தனமான, கபடத்தனமான நடவடிக்கைகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த அமெரிக்காவின் தீர்மானத்துக்கு மீது இந்தியப் பேரரரசு ஆதரவளிக்கக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகம் வேண்டுகோள் விடுக்கிறது.

அறைகூவல்...

அமெரிக்காவின் கயமைத்தனத்துக்கு எதிராக அனைத்து தமிழர் தரப்பும், மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயக சக்திகளும் அனைத்து மாச்சரியங்களையும் தூக்கி எறிந்து ஒன்று திரண்டு போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

பயணிக்க வேண்டிய நெடுந்தொலைவு...

அமெரிக்காவின் இந்த தீர்மானமானது இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற இலக்கை அடைவதற்கு உலகத் தமிழர்கள் பயணிக்க வேண்டியது நெடுந்தொலைவு என்பதையும் திட்டவட்டமாக சுட்டிக்காட்டுகிறது.

நீதி வெல்லும்...

நீதிக்கும் நியாயத்துக்கும் மனித உரிமைகளைக் காப்பதற்குமான சர்வ சக்தியாக அமெரிக்காவை நாம் ஒருபோதும் நம்புவதில்லை. ஆகையால் நமக்கான நீதியைப் பெற்றிட, நம் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட உலகத் தமிழர்கள் நாம் ஓரணியில் பயணத்தைத் தொடருவோம்... நமக்கான நீதியை நாமே பெற்றிடுவோம்! நிச்சயம் நீதிவெல்லும் என்ற நம்பிக்கை கொள்வோம்!!

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Tamilaga valvurimai katchi president Velmurugan has condemned America's resolution in Srilankan war crime inquiry issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X