குடிக்க நீரில்லை.. 30 கிராமங்கள் கடும் அவதி- வெள்ளாற்று மணல் குவாரிகளை மூடுங்கள்: வேல்முருகன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளாற்றில் மணல் குவாரிகளை அமைத்ததால் 30 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றியுள்ளது. இதனால் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் வெள்ளாற்றில் இரண்டு மணல் குவாரிகளை அமைத்துள்ளது தமிழக அரசு. மதகளிர்மாணிக்கம் மற்றும் சுபலையாத்தூர் குவாரிகளே அவை.

2004ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இந்த குவாரிகளில் 3 அடி ஆழத்திற்கே மணல் எடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டன.

30 அடி ஆழம்

30 அடி ஆழம்

ஆனால் 30 அடி ஆழத்திற்கும் மேல் தோண்டி மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குவாரிகள் ராட்சச கிணறுகள் போல் காட்சியளிக்கின்றன. கருவேப்பிலங்குறிச்சி முதல் சுபலையாத்தூர் வரை சுமார் 15 கி.மீ பரப்பளவில் மணல் அள்ளப்படுகிறது.

குடிநீர் பஞ்சம்

குடிநீர் பஞ்சம்

பூமியின் அடிமடியையே எட்டும் அளவுக்குத் தோண்டிவிட்டதால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 250 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. 30 அடிக்குள்ளேயே நல்ல சுவையான நீர் கிடைத்து வந்த மண்ணில் இன்று குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குடிநீர் பஞ்சம் வெள்ளாற்றின் இரு கரைகளிலும் அமைந்த சுமார் 30 கிராமங்களை வாட்டி வதைக்கிறது.

பாதிக்கப்பட்ட கிராமங்கள்

பாதிக்கப்பட்ட கிராமங்கள்

கருவேப்பிலங்குறிச்சி, கார்மாங்குடி, நேமம், வல்லியம், சக்கரமங்கலம், கீரனூர், மேலப்பாலையூர், மருங்கூர், காவலூர், தொழூர், கீரமங்கலம், பவளங்குடி, ஆனந்தக்குடி, முத்துகிருஷ்ணாபுரம், ஆத்தூர், எசனூர், மதகளிர்மாணிக்கம், குணமங்கலம், பூண்டி, கள்ளிப்பாடி, ஸ்ரீபுத்தூர், இனமங்கலம், அம்புஜவல்லிப்பேட்டை, சாத்தாவட்டம், சேல்விழி, ஸ்ரீநெடுஞ்சேரி, ஒட்டிமேடு, காவலாங்குடி, சுபலையாத்தூர் ஆகியவையே அந்த ஊர்கள்.

சுண்டிப் போன நிலத்தடி நீர்

சுண்டிப் போன நிலத்தடி நீர்

இந்தப் பகுதியில் விவசாயத்திற்காக அமைத்திருந்த சுமார் 2,500 ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட்டுவிட்டன. இதிலிருந்தே தண்ணீர் பஞ்சத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம். ஒருபுறம் மணல் அள்ளப்படுகிறது; மறுபுறம் என்எல்சியும் அதன் தேவைக்காக தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனாலேயே இப்பகுதியில் தண்ணீர் சுண்டிப் போனது.

கட்டாந்தரையான வெள்ளாறு

கட்டாந்தரையான வெள்ளாறு

வரலாறு காணாத வறட்சியிலும் மணல் அள்ளப்படுவது தொடர்வதால் வெள்ளாறு இன்று கட்டாந்தரையாகிவிட்டிருக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தக் கொடூர நிலையை முடிவுக்குக் கொண்டுவர இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

கருப்புக் கொடி போராட்டம்

கருப்புக் கொடி போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம், கண்டனப் போராட்டம், வீடுகளில் கருப்புக் கொடியேற்றிப் போராட்டம், ஆற்றில் இறங்கிப் போராட்டம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஒப்படைப்புப் போராட்டம் என பல வழிகளிலும் போராட்டம் தொடர்கிறது.

பொய் வழக்கு

பொய் வழக்கு

ஆனால் போராடியவர்களை காவல்துறை மிரட்டிக் கைது செய்து பொய் வழக்குப் போடுவதுதான் நடக்கிறதே தவிர மணல் குவாரிகளை அரசு மூடவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

உடனே மூட வேண்டும்

உடனே மூட வேண்டும்

30 கிராமங்களின் வாழ்வாதாரத்தை அழித்து அம்மக்களை நிர்க்கதியில் தள்ளுவதாக உள்ள மணல் குவாரிகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. சட்டவிரோத மணல் குவாரிகளை எதிர்த்து மாநில அளவில் போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்த 30 கிராம பொதுமக்களின் சார்பிலும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்காது என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan has urged to close Vellaru sand quarries in Cuddalore.
Please Wait while comments are loading...